ஆஸ்திரேலியாவின் பிக்பேஷ் லீக் போட்டிகள் வரும் டிசம்பரில் தொடங்குகிறது. ஆண்கள் பிக்பேஷ் லீகுக்கு முன்னதாக பெண்கள் லீக், வரும் ஞாயிறு அன்று தொடங்க இருப்பதால் ஆஸ்திரேலியாவில் கிரிக்கெட் சீசன் களைக்கட்டத் தொடங்கியிருக்கிறது.

டிசம்பர் 3-ம் தேதி தொடங்கும் பிக்பேஷ் லீக் பிப்ரவரி 6-ம் தேதிவரை நடைபெற இருக்கிறது. ஐபிஎல் போன்றே 8 அணிகள், இரட்டை ரவுண்ட் ராபின், ப்ளே ஆஃப், கடைசியாக இறுதிப்போட்டி என்கிற ஃபார்மேட்தான் பிக்பேஷ் லீகிலும். சிட்னி சிக்ஸர் அணிதான் தற்போதைய சாம்பியன்ஸ்.

ஆனால், ஐபிஎல் தொடரைப்போன்று பிக்பேஷ் லீகில் நான்கு வெளிநாட்டு வீரர்கள் ஒரு போட்டியில் விளையாடமுடியாது. இருவருக்கு மட்டுமே அனுமதி. ஆனால், இந்த ஆண்டு அந்த விதியில் ஒரு திருத்தம் செய்து மூன்று வெளிநாட்டு வீரர்களை ப்ளேயிங் லெவனில் சேர்க்கலாம் என அறிவித்திருக்கிறது கிரிக்கெட் ஆஸ்திரேலியா.

Chris Gayle

வெளிநாட்டு வீரர்களைப் பொறுத்தவரை வெஸ்ட் இண்டீஸில் இருந்து கிறிஸ் கெய்ல், ஆண்ட்ரி ரஸல், கார்லோஸ் பிராத்வெயிட், சுனில் நரைன், நிக்கோலஸ் பூரன், காட்ரெல், லெண்டில் சிமன்ஸ் ஆகியோர் பிக்பேஷ் லீகில் கலந்துகொள்ள இருக்கிறார்கள்.

ஆப்கானிஸ்தானின் ரஷித் கான், முகமது நபி ஆகியோர் ஒவ்வொரு ஆண்டும் பிக்பேஷ் லீகில் மிஸ் ஆகாத வீரர்கள். ஐபிஎல் ஆடாத இங்கிலாந்தின் ஜேசன் ராய் பிக்பேஷ் லீகில் விளையாட இருக்கிறார். அதேபோல் மற்றொரு இங்கிலாந்து வீரரான டேவிட் மாலனும் பிக்பேஷ் லீகில் ஒப்பந்தமாகியிருக்கிறார்.

ஐபிஎல் தவிர உலகில் நடக்கும் வேறு எந்த டி20 லீக் போட்டிகளிலும் விளையாட இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு பிசிசிஐ தடைவிதித்திருக்கிறது. அதனால் பிசிசிஐ ஒப்பந்தத்தில் இருக்கும் எந்த வீரரும் எந்த லீக் போட்டிகளிலும் விளையாடமுடியாது. ஆனால், பிசிசிஐ ஒப்பந்தத்தில் இல்லாத வீரர்கள் விளையாடலாம். கடந்த ஆண்டு கனடாவில் நடந்த டி20 போட்டிகளில் யுவராஜ் சிங் கலந்துகொண்டார்.

#Raina #Dhoni

இந்த ஆண்டு தோனி, சுரேஷ் ரெய்னா என இருவருமே இந்திய கிரிக்கெட் அணியில் இருந்து ஓய்வுபெற்றுவிட்டதால் அவர்கள் இருவரையும் பிக்பேஷ் லீகில் விளையாடவைக்க முயற்சிகள் நடந்துவருகின்றன. சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தோனியும், ரெய்னாவும் ஓய்வுபெற்றுவிட்டாலும் அவர்கள் ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவதால் பிசிசிஐ ஒப்பந்தத்துக்குள்தான் இன்னமும் இருக்கிறார்கள். அதனால் தோனி, இந்த ஆண்டோடு ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்தால் மட்டுமே பிக்பேஷ் லீகில் விளையாடுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. இதே நிலைமைதான் சுரேஷ் ரெய்னாவுக்கும்.

Also Read: ஆர்ச்சர், ஸ்டோக்ஸ், ஸ்மித், பட்லர் என ட்ரீம் டீம்… ஆனாலும், தொடர் தோல்விகள் ஏன்?! #RRvSRH

2020 ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவதற்காக சென்னை அணியோடு துபாய் போன சுரேஷ் ரெய்னா, அங்கே ஹோட்டலில் சில ஒழுக்க விதிமுறைகளை மீறியதாக குற்றச்சாட்டுகள் கிளம்பியது. சிசிடிவி ஆதாரங்களின் அடிப்படையில் அவர் விசாரிக்கப்பட, 2020 ஐபிஎல்-ல் இருந்து பர்சனல் காரணங்களுக்காக விலகுவதாக அறிவித்தார் ரெய்னா. இதற்கிடையே அவரை சென்னை அணி நிர்வாகமும் ஒப்பந்தத்தில் இருந்து நீக்கியது. அடுத்த ஆண்டுக்கான ஐபிஎல்-ல் அவர் கலந்துகொள்ள வேண்டுமானால் மீண்டும் அவர் ஏலத்தில் பங்கேற்கவேண்டியிருக்கும்.

#Raina

இந்த சூழலில் சுரேஷ் ரெய்னா பிக்பேஷ் லீகில் விளையாடினால் அடுத்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகளில் அவரால் விளையாடமுடியாத நிலை உருவாகும். ஐபிஎல்-தான் அதிக வருமானம் தரும் தொடர் என்பதால் அவர் பிசிசிஐ விதிகளை மீறுவதற்கான சாத்தியங்கள் மிகவும் குறைவே. ஆனால், பிசிசிஐ மீது சில வருத்தங்களோடு இருக்கும் சுரேஷ் ரெய்னா என்னமுடிவு வேண்டுமானாலும் எடுக்கலாம்!

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.