சைபர் க்ரைம்… சாமானியர்கள், பிரபலமானவர்கள், அரசியல் தலைவர்கள், பணக்காரர்கள் என எவரையும் விட்டு வைக்காத ஒரு குற்றப் பிரிவு! சைபர் க்ரைம்களில் பல வகை உண்டு. ஹேக்கிங், ஸ்பாம், ஆன்லைன் மூலம் பணம் திருடுவது, சமூக வலைதளங்களில் ஆபாச வார்த்தை கொண்டு அர்ச்சிப்பது, கொலை மிரட்டல்கள் விடுப்பது என இன்டெர்நெட் மூலம் நடைபெறும் அனைத்துவகை க்ரைம்களும் சைபர் குற்றங்கள்தாம்.

cyber crime

கொரோனா ஊரடங்கு காரணமாகக் கடந்த செப்டம்பர் மாதத்திற்கு முன்பு வரையிலுமே நம்மில் பெரும்பாலானவர்கள் அவசியத் தேவைகளுக்கு மட்டுமே வீட்டை விட்டு வெளியே சென்றோம். அந்தக் காலகட்டத்தில் கொலை, கொள்ளை உள்ளிட்ட நிஜ உலகில் நடக்கும் குற்றச் சம்பவங்கள் குறைந்த அளவிலேயே நடைபெற்றிருக்கின்றன என்ற செய்திகளைப் பார்க்க முடிந்தது. அதேநேரத்தில், நிழல் உலகமான சைபர் உலகத்தில் எக்கச்சக்க குற்றங்கள் நடைபெற்றிருக்கின்றன என்கிறார்கள் தொழில்நுட்ப வல்லுநர்கள்.

இந்த சைபர் பிரிவு குற்றங்களில், சமீபத்தில் மிகப் பெரிய கவனம் பெற்ற இரண்டு வழக்குகள் உள்ளன.

முதலாவது, ஐபிஎல் போட்டிகளில் சிஎஸ்கே அணியின் தொடர் தோல்விகள் காரணமாக, தோனியின் மகளைச் சிறார் வதை செய்துவிடுவதாக எழுந்த மிரட்டல். குஜராத்தைச் சேர்ந்த 16 வயது சிறுவன், தோனியின் மனைவி சாக்ஷியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை டேக் செய்து போட்டியில் தோற்றதற்காக அவர்களின் 5 வயது மகளைச் சிறார் வதை செய்துவிடுவேன் என்று மிரட்டியிருந்தார். இந்தச் சம்பவம் இந்திய அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்தப் பதிவை இட்ட 12-ம் வகுப்புப் பயிலும் சிறுவன்மீது ராஞ்சியைச் சேர்ந்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்ததையடுத்து அந்தச் சிறுவனைக் குஜராத் போலீஸார் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் குற்றத்தை ஒப்புக் கொண்டதால் குஜராத் போலீஸார், அந்தச் சிறுவனை ராஞ்சி காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.

Dhoni | சென்னை சூப்பர் கிங்ஸ்

Also Read: தோனியின் மகளுக்கு மிரட்டல் விடுத்த விவகாரம்… 16 வயது சிறுவன் குஜராத்தில் கைது!

இரண்டாவது சம்பவம், விஜய் சேதுபதியின் மகளுக்கு எதிராக ட்விட்டரில் பதியப்பட்ட ஆபாச கருத்து. `முத்தையா முரளிதரன் படத்தில் விஜய் சேதுபதி நடிக்கக் கூடாது’ என தமிழ் அமைப்புகள் பலவும் எதிர்ப்புகளைத் தெரிவித்து வந்தன. சமூக வலைதளங்களிலும் விஜய் சேதுபதிக்கு எதிராகப் பல பதிவுகள் வெளியிடப்பட்டன. அதில் உச்சக்கட்டமாக ஒரு பதிவில் விஜய் சேதுபதியின் மகளைச் சிறார் வதை செய்து விடுவதாக ஆபாச வார்த்தைகள் கொண்டு மிரட்டல் தொனியில் ஒரு கருத்து பதிவிடப்பட்டிருந்தது.

@ItsRithikRajh என்ற ட்விட்டர் பக்கத்திலிருந்து பதிவிடப்பட்ட இந்தக் கருத்துக்கு நெட்டிசன்கள் பலரும் கடும் எதிர்ப்புகளைப் பதிவு செய்து ட்விட்டரில் ரிப்போர்ட் செய்தனர். இதையடுத்து இந்தப் பதிவு ட்விட்டரிலிருந்து நீக்கப்பட்டது. பிரபலங்கள் பலரும் `இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என சமூக வலைதளங்களில் பதிவிடத் தொடங்கினர்.

Vijay Sethupathi

Also Read: `விஜய் சேதுபதி இனப் பற்றாளர்தான்… ஆனால்?’ – முரளிதரன் பயோபிக்கால் மீண்டும் வெடிக்கும் சர்ச்சை!

தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த்தும், தோனி, விஜய் சேதுபதியின் மகள்களுக்கு எதிராகப் பதிவிடப்பட்ட கருத்துகளுக்கு கடும் கண்டனங்களைப் பதிவிட்டிருந்தார்.

இதைத் தொடர்ந்து, விஜய் சேதுபதியின் பெயர் குறிப்பிடாமல், பிரபலத்துக்கு எதிராக சமூக வலைதளத்தில் பதிவிடப்பட்ட கருத்து தொடர்பாகக் கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் சைபர் க்ரைம் பிரிவில் வழக்குப் பதியப்பட்டுள்ளது என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார் சென்னை போலீஸ் கமிஷ்னர் மகேஷ் குமார் அகர்வால்.

Also Read: விஜய் சேதுபதியை, ஏன் முரளிதரன் விலகச் சொன்னார்?! – `800’ பட சர்ச்சை குறித்து பெ.மணியரசன்

இந்த விவகாரத்தில், முறைகேடான விஷயங்களை இணையம் மூலம் பரப்பியதற்காகத் தகவல் தொழில்நுட்பச் சட்டம் பிரிவு 67 பி-யின் கீழும் கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கம், பொது இடத்தில் ஆபாசமான வார்த்தைகளைப் பயன்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழும், அடையாளம் தெரியாத அந்த நபர்மீது வழக்கு பதிவு செய்து எஃப்.ஐ.ஆர் (FIR) போடப்பட்டுள்ளது.

இந்நிலையில், விஜய்சேதுபதியின் மகளுக்கு மிரட்டல் விடுத்தவர் இலங்கையில் இருப்பது ஐ.பி முகவரி மூலம் சைபர் கிரைம் போலீஸார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது. இதனை தொடர்ந்து இண்டர்போல் உதவியுடன் இலங்கையில் உள்ளவரை பிடிக்க மத்திய குற்றப்பிரிவு போலீஸார் நடவடிக்கை எடுத்து வருவதாக சைபர் கிரைம் போலீஸார் தெரிவித்துள்ளனர்.

சைபர் குற்றங்களுக்கு அனைத்து பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களிலும் புகார் அளிக்க முடியாது. `சைபர் செல்’ என்று சொல்லப்படும் சைபர் குற்றங்களுக்கான சிறப்புப் பிரிவு நிலையங்களில் மட்டுமே இது தொடர்பான புகார்கள் ஏற்றுக் கொள்ளப்படும். சென்னையில் கடந்த ஆகஸ்ட் மாதத்திற்கு முன்பு வரையிலும் கமிஷ்னர் அலுவலகத்தில் செயல்படும் சைபர் பிரிவில் மட்டுமே சைபர் குற்றங்கள் தொடர்பான புகார்கள் பெறப்பட்டு வந்தன. சென்னை மாநகரத்தின் புதிய கமிஷ்னராக மகேஷ் குமார் அகர்வால் பொறுப்பேற்ற பின்னர், கடந்த ஆகஸ்ட் மாதத்தில் சென்னை காவல் எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் நடக்கும் சைபர் குற்றங்கள் தொடர்பாகப் புகார் அளிக்க 12 புதிய சைபர் பிரிவு காவல் நிலையங்கள் அமைக்கப்பட்டன. இதன் பிறகு சைபர் குற்றங்கள் குறையும் எனச் சென்னை மாநகரக் காவல்துறையினர் நம்பிக்கை தெரிவித்திருந்தனர். அதேவேளையில், சென்னையைத் தவிர்த்த மற்ற மாவட்டங்களில், இன்று வரையிலும் மாவட்ட எஸ்.பி அலுவலகங்களில் செயல்படும் சைபர் குற்றப் பிரிவுகளில் மட்டுமே சைபர் குற்றங்கள் தொடர்பான புகார்களை அளிக்க முடியும்.

cyber threats

Also Read: சென்னை: வாட்ஸ்அப்பில் அந்தரங்க புகைப்படம்… பெண்ணை மிரட்டிய ஆன்லைன் ‘லோன் ஆப்’ கும்பல்!

OTP மோசடி, பெண்களுக்கு எதிராக ஆபாச பதிவுகள் இடுதல், இரு தரப்புக்கு இடையே கலவரம் ஏற்படுத்தும் வகையில் பதிவுகள் இடுதல் ஆகியனதான் அதிகளவில் நடைபெறும் சைபர் குற்றங்கள் என்கிறார்கள் காவல்துறை வட்டாரங்கள். அதுவும் கடந்த இரண்டு ஆண்டுகளில், பெண்களுக்கு எதிராக ஆபாச வார்த்தைகள் கொண்டு சமூக வலைதலங்களில் கருத்து பதிவிடுவது தொடர்பான சைபர் குற்றங்கள் பல மடங்கு அதிகரித்துள்ளதாகத் தொழில்நுட்ப வல்லுநர்கள் சிலர் கூறுகின்றனர்.

வக்கிர எண்ணம் கொண்டு பதியப்படும் கருத்துகளிலிருந்து தப்பிக்க சில வழிகளைச் சொல்கிறார்கள் மனநல நிபுணர்கள். “ஆபாச வார்த்தைகள் கொண்டும் வக்கிரம் எண்ணம் கொண்டும் பதியப்படும் கருத்துகளை சம்பந்தப்பட்ட நபர் படிக்கும் பொழுது நிச்சயம் மனதளவில் வேதனையடைவார். இது பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் பொருந்தும். `இதையெல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம்’ என்று முடிவெடுத்துப் பக்குவமடைந்தவர்கள், வக்கிர எண்ணம் கொண்டு பதியப்படும் கருத்துகளிலிருந்து ஓரளவு தப்பிக்க முடியும். ஆனால், ஒரு கட்டத்தில் அப்படியிருப்பவர்களுக்கே இது பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதற்கான சாத்தியமும் உண்டு.

இனி வரும் காலங்களில் சமூக வலைதளங்களைத் தவிர்த்து விட்டு வாழ்வதென்பது கடினமான விஷயம். எனவே, கருத்துகள் பதிவிடாமல் இருப்பதே சிறந்தது என்று சொல்லி இதை முடித்துவிட முடியாது. எதிர்ப்புகள் வரும் என்று தெரிந்தே ஒரு கருத்தைப் பதிவிடுகிறீர்கள் என்றால் அதற்கு வரும் பதில் கருத்துகளைப் படிக்காமல் இருப்பது நல்லது. அதிகம் தெரியாத நபர்களை சமூக வலைதளங்களில் பின்தொடர்வதைத் தவிர்த்து விடுவதும் அவசியம். அதையும் மீறி அடையாளம் தெரியாத நபர்கள் உங்களைச் சீண்டுகிறார்கள் என்றால், சமூக வலைதள நிறுவனங்கள் வழங்கும் `ரிப்போர்ட்’ வசதியைக் கொண்டு, அவர்கள் பதிவின்மீது புகார் அளித்துவிட்டு அவர்களை ப்ளாக் செய்துவிட வேண்டும். சமூக வலைதள நிறுவனங்களும், ஒவ்வொரு மொழியிலும் உள்ள தகாத வார்த்தைகளைப் பட்டியலிட்டு, அந்த வார்த்தைகளோடு வரும் பதிவுகளையெல்லாம் வடிகட்டி எடுத்து, அந்தப் பதிவுகள் அனைத்தும் தானாகவே நீங்கிவிடும் வசதியைக் கொண்டு வர வேண்டும். அந்த வார்த்தைகளைக் கொண்டு அடிக்கடி பதிவிடுபவர்களின் கணக்குகளை முடக்கும் பணியையும் செய்ய வேண்டும்” என்கிறார்கள் மனநல நிபுணர்கள்.

Shanmugavel Sankaran

சைபர் குற்றங்கள் குறைவதற்கு என்ன வழி என்று தெரிந்து கொள்ள சைபர் செக்யூரிட்டி நிறுவனமான FixNix நிறுவனத்தின் CEO சண்முகவேல் சங்கரனை தொடர்பு கொண்டோம். “சைபர் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன என்பது உண்மைதான். சமூக வலைதளங்களில், ஒரு பிரபலத்துக்கு எதிராக ஆபாச வார்த்தைகளை அடுக்கினால் எளிதாக அவர்கள் புகார் அளிக்க முடியும். ஆனால், சாமானியர்கள் சைபர் குற்றங்களில் புகார் அளிப்பது மிகவும் கடினம். காரணம், சென்னையைத் தவிர மற்ற மாவட்டங்களில் ஒரே ஒரு சைபர் செல் மட்டுமே இயங்கி வருகிறது. சாமானியர்களும் எளிதாக சைபர் குற்றங்கள் தொடர்பாகப் புகாரளிக்க வேண்டுமென்றால், அனைத்து காவல்நிலையங்களிலும் சைபர் குற்றங்கள் தொடர்பான புகார்களைப் பெறுவதற்கு ஒருவரையாவது நியமிக்க வேண்டும். அப்படி நியமிக்கப்படுபவருக்கு சைபர் குற்றங்கள் பற்றிய அனைத்து விஷயங்களையும் சொல்லிக் கொடுக்க வேண்டும். அங்கே கொடுக்கப்படும் புகார்கள் உடனடியாக அந்த மாவட்டத்தின் சைபர் செல்லுக்கு அனுப்பப்பட்டு, விரைவாக நடவடிக்கைகள் எடுக்கும் பட்சத்தில் சைபர் குற்றங்கள் குறையும்.

இந்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் `Cert-in’ என்ற சைபர் செக்யூரிட்டி அமைப்பு இயங்கி வருகிறது. முதல்வர்கள் அலுவலகம், பிரதமர் உள்ளிட்ட அமைச்சர்களின் அலுவலகம், அரசு நிறுவனங்கள் உள்ளிட்டவற்றுள் நடைபெறும் சைபர் குற்றங்களை கண்டவறிதுதான் Cert-in-ன் வேலை. இந்த அமைப்பு போலவே இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் அரசு சார்பாகப் பொதுமக்களிடையே நடைபெறும் சைபர் குற்றங்களைக் கண்டறிய ஒரு அமைப்பு ஏற்படுத்த வேண்டும். அதன்மூலம் சைபர் குற்றங்களைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இனி வரும் காலங்களில், மற்ற குற்றங்களைவிட சைபர் குற்றங்கள்தான் அதிகளவில் நடைபெறும் என்பதால், சைபர் க்ரைம்-க்கென தனிப்படை ஒன்று அமைத்து அதன்மூலம் சைபர் குற்றங்களைக் கையாள்வது அவசியம்” என்கிறார் சண்முகவேல் சங்கரன்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.