கேப்டனை மாற்றி, காட்சிகள் மாறுமா எனக் காத்திருந்த கொல்கத்தாவுக்கும், கிட்டத்தட்ட அவர்களுடன் சமபலத்தில் இருக்கும், அதே சமயம் புள்ளிப் பட்டியலில் நான்காவது இடத்தின் மேல் கண்கொத்திப் பாம்பாய் கண் வைத்திருந்த சன்ரைசர்ஸுக்கும் சண்டை! இந்தப் போட்டி பாசஞ்சர்ஸ் வண்டி வேகத்தில் தொடங்கி, எக்ஸ்பிரஸ் டிரெயினாக வேகமெடுத்து, இறுதியில் சூப்பர் ஓவரினால், புல்லட் டிரெயினாக மாறி கொல்கத்தாவை வெற்றி என்னும் ஸ்டேசனில் இறக்கியுள்ளது.

டாஸை வென்ற வார்னர், சமீபத்திய போட்டிகளில் அணிகள் வெற்றிகரமாக இலக்கை அடைந்து விடுவதைப் பற்றி யோசித்தோ என்னவோ, பந்து வீச்சைத் தேர்வு செய்தார். ஒரு வேளை பேட்டிங்கை அவர் தேர்வு செய்திருந்தால் காட்சிகள் மாறிஇருக்கலாம். சுனில் நரைன் மீதான தடைநீக்க அறிவிப்பு, கடைசி நேரத்தில் விலக்கிக் கொள்ளப்பட்டதால், அவரால் இன்றைய போட்டியில் விளையாட முடியாமல் போனது.

#SRHvKKR

கில்லும், திரிபாதியும் ஓப்பனிங் இறங்க, போட்டியின் இரண்டாவது ஓவரிலேயே, தன்னுடைய முதல் ஐபிஎல் போட்டியில் இன்று விளையாடும், தம்பியின் பந்தை, கில் டீப் ஸ்கொயர் நோக்கி தூக்கி அடிக்க, ரஷீத் கான் அதனைக் கோட்டை விட்டார். திரிபாதி ஒரு பக்கம் அதிரடி ஆட்டத்தைக் கையிலெடுக்க, கில்லோ ஓப்பனிங் பேட்ஸ்மேன் காட்ட வேண்டிய பரபரப்பான ஆட்டத்தை எல்லாம் நான் பார்த்ததே இல்லை என்பது போல ஆடிக் கொண்டிருந்தார். இந்த சீசனில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கில் தொடர்ந்து ஏமாற்றியே வருகிறார். தம்பியின் ஓவரில் அவர் அடித்த ஹாட்ரிக் பவுண்டரியைத் தவிர்த்துப் பார்த்தோமேயானால் சொல்லிக் கொள்ளும்படியாக வேறு எதையுமே அவர் செய்யவில்லை. டி20-ஐ ஒருநாள் போட்டி போலவே ஆடிக் கொண்டிருக்கிறார். இதனாலேயே கொல்கத்தாவால் பவர் பிளே ஓவர்களில் ரன்களைக் குவிக்க முடியவில்லை.

பவர் ப்ளேயின் கடைசி ஓவரை நடராஜன் வீச, ஓவரின் கடைசி பந்து, திரிபாதியின் ஸ்டம்பைப் பதம் பார்க்க, 16 பந்துகளில் 23 ரன்களை எடுத்திருந்த அவர் வெளியேறினார். ஆறு ஓவர்கள் முடிவில் 48/1 என்ற நிலையிலிருந்த கொல்கத்தா, இந்த சீசனின் தனது அதிகபட்ச ஓப்பனிங் ஸ்கோரைப் பதிவு செய்தது.

அடுத்து உள்ளே வந்த ராணா தொடக்கத்தில் மந்தமாக ஆடினாலும், போகப் போக அதிரடி காட்ட ஆரம்பிக்க, அதே நேரத்தில், ராஷித் கான் பந்தில் கில் 36 ரன்களுடன் பெவிலியனுக்குத் திரும்ப, ரசல் உள்ளே வந்தார். அதற்கடுத்த சில பந்துகளிலேயே ஓரளவு செட்டில் ஆகி ஆடிக் கொண்டிருந்த ராணாவையும் விஜய் சங்கர், 29 ரன்களுடன் வீட்டுக்கு அனுப்பினார். மிக அருமையாகப் பந்து வீசிய விஜய் சங்கர், நான்கு ஓவரில் வெறும் 20 ரன்களை மட்டுமே கொடுத்தது, கொல்கத்தாவின் ரன் குவிப்பைக் கட்டுப்படுத்த உதவியது.

#SRHvKKR

அதைத் தொடர்ந்து உள்ளே வந்த மார்கன் ரசலுடன் கைகோத்தார். கடந்த ஆண்டுகளில், ஐபிஎல்லைக் கட்டி ஆண்டு கொண்டிருந்த ரசலை இன்றைய போட்டியிலாவது பார்க்க முடியாதா என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது. 11 பந்துகளில் 9 ரன்களை மட்டுமே எடுத்த அவர், நடராஜன் பந்தில் தன் விக்கெட்டைப் பறிகொடுத்து வெளியேறினார்.

15 ஓவர்களில் 105 ரன்கள் எடுத்த நிலையில் அணி இருக்க, தினேஷ் கார்த்திக் வந்தார். முன்னாள் கேப்டனும் இந்நாள் கேப்டனுமாய் சேர்ந்த இந்தக் கூட்டணி, இறுதி ஓவர்களை தங்களுடையதாய் ஆக்கிக் கொண்டது. அடுத்து வந்த போட்டியின் கடைசி 30 பந்துகளை எல்லா திசையிலும் பறக்க விட்டு 58 ரன்களைக் குவித்தது. போட்டியை ஒட்டுமொத்தமாய் மாற்றிப் போட்டது இந்தக் கூட்டணிதான். இதன் மூலமாய் 164 ரன்கள் என்ற இலக்கை சன்ரைசர்ஸுக்கு நிர்ணயித்தது.

அடுத்து விளையாட இறங்கிய சன்ரைசர்ஸில் பேர்ஸ்டோவுடன் கேன் வில்லியம்சன் இறங்கினார். ஹாம்ஸ்ட்ரிங் காயத்தால் வில்லியம்சன் அவதிப்படுவதால், ஓடி ரன் எடுக்க முடியாது என்ற காரணத்தால் ஓப்பனராக இறங்கினார். இந்த மாற்றம், சன்ரைசர்ஸுக்கு மிக அனுகூலமானதாய் மாறியது. ஓடித்தானே ரன் எடுக்க முடியாது, பவுண்டரிகளில் எடுத்து விட்டுப் போறோம் என்பது போல, ஓவருக்கு தலா இரண்டு பவுண்டரிகளாக விளாசியது இந்தக் கூட்டணி.

#SRHvKKR

இதனால் பவர்ப்ளேயின் முடிவில் விக்கெட் இழப்பின்றி 58 ரன்களைக் குவித்து வலிமையான நிலையில் இருந்தது சன்ரைசர்ஸ். ஆனால் ஏழாவது ஓவரின் ஃபெர்கூசன் வீசிய முதல் பந்திலேயே வில்லியம்சன் அவுட் ஆக, சன்ரைசர்ஸின் வீழ்ச்சி இங்கேதான் தொடங்கியது. அடுத்து வந்த ஐந்து ஓவருக்குள்ளாகவே ஃபெர்கூசன், கார்க் மற்றும் மணீஷ் பாண்டே விக்கெட்டுகள், வருண் சக்கரவர்த்தி பேர்ஸ்டோவின் விக்கெட் என மூன்று விக்கெட்டுகளையும் கொல்கத்தா பொறி வைத்துத் தூக்க ஆட்டம் காய் மாறியது. 18 ஓவருக்குள்ளாகவே ஐதராபாத் சுலபமாய் வென்று விடுவார்கள் என நினைத்த மேட்சை கொல்கத்தா தங்கள் பக்கம் கொண்டு வந்தது.

ஸ்மித் செய்வதைப் போலவே இந்த முறை வார்னரும் பேட்டிங் வரிசையினை பலவாறு மாற்றி முயன்று பார்த்துக் கொண்டே இருந்தார். அது அவர் எதிர்பார்த்த பலனை அந்த அளவுக்குக் கொடுக்கவில்லை.

69 பந்துகளில் 82 ரன்களைச் சேர்த்து பாதி கிணறு தாண்டியிருந்த சன்ரைசர்ஸ், இப்போது அதே 82 ரன்களை வெறும் 51 பந்துகளில் சேர்க்க வேண்டிய நிலை. ஜெயித்துவிட முடியுமா என்ற கவலை ரசிகர்களைச் சூழ, அப்போது வார்னரும் விஜய் சங்கரும் களத்தில் இருந்தனர். பௌலிங்கில் ஜொலித்த விஜய் சங்கரோ ஏதாச்சும் ஒண்ணுதான் செய்ய முடியும் என்பதைப் போல் 10 பந்துகளில் 7 ரன்களுடன் வெளியேற மொத்தச் சுமையும் வார்னரின் மேல் விழுந்தது. விஜய் சங்கர் இடத்திற்கு அப்துல் சமாத் வந்தார். பந்துக்கும் தேவைப்படும் ரன்களுக்குமான இடைவெளியைக் குறைக்க இந்தக் கூட்டணி செய்த முயற்சி ஓரளவுதான் கை கொடுத்தது. கடந்த போட்டிகளில், ஆர்சிபியும் டெல்லியும் செய்ததை சன்ரைசர்ஸும் நிகழ்த்தி விடுமோ என்ற யோசிக்க ஆரம்பிக்கும் போதே 14 பந்துகளில் 23 ரன்களைக் குவித்த சமத், 19ம் ஓவரின் கடைசிப் பந்தில் ஆட்டமிழக்க, கடைசி ஓவரில் 18 ரன்கள் எடுக்க வேண்டிய நிலை!

#SRHvKKR

காயத்துடன் அவதிப்பட்ட ரசல்தான் கடைசி ஓவர் வீச வருகிறார். முதல் பந்தை நோ பாலாக விசியவர், அடுத்த பந்தில் ஒரு ரன் மட்டுமே கொடுத்தார். ஆனால் அடுத்த மூன்று பந்துகளையும் வார்னர் பவுண்டரிக்கு விரட்டி கேகேஆர்க்கு கிலி ஏற்படுத்தினார். 5வது பந்தில் இரண்டு ரன்கள் எடுக்க, ஒரு பந்தில் 2 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை வர, வார்னரால் அந்தப் பந்தில் ஒரு ரன் மட்டுமே எடுக்க, போட்டி சூப்பர் ஓவருக்குச் சென்றது.

Also Read: எல்லாமே `UNFAIR’தான் தோனி… 2020 சீசனில் கேப்டன் தோனி சிஎஸ்கே-வுக்கு செய்வது என்ன?! #Dhoni

சூப்பர் ஓவரை விளையாட சன்ரைசர்ஸ் இறங்க, எதிர்பார்த்தபடி, இன்று மூன்று விக்கெட்டுகளை எடுத்துக் கலக்கிய ஃபெர்குஸான்தான் பந்து வீச இறங்கினார். பவுண்டரியா சிக்ஸரா எது வரப் போகிறது வார்னரின் பேட்டில் இருந்து என எதிர்பார்த்த ரசிகர்களின் மனதை உடைப்பதைப் போல வார்னர் போல்ட் ஆனார். அதற்கு அடுத்த பேட்ஸ்மேனாக உள்ளே வந்தார் சமத். இரண்டாவது பந்தில் 2 ரன்களை எடுத்த அவர், மூன்றாவது பந்திலேயே ஆட்டமிழந்தார். சூப்பர் ஓவரோடு சேர்த்து ஒட்டுமொத்தமாய் ஐந்து விக்கெட்களை வீழ்த்திய ஃபெர்கூஸன் கேம் சேஞ்சராக மாறி போட்டியினை மொத்தமாய் தங்கள் அணியின் கைக்குள் கொண்டு சென்று விட்டார்.

#SRHvKKR

இதன் மூலம் 3 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் உள்ளே இறங்கினர், கொல்கத்தாவின் மார்கனும் கார்த்திக்கும். ரஸீதின் இந்த ஓவரின் முதல் பந்தில் ரன் எடுக்காத மார்கன், இரண்டாவது பந்தில் ஸ்ட்ரைக்கை கார்த்திக்கிடம் கொடுக்க, அதற்கடுத்த பந்தை அவர் தன் பங்கிற்குச் சாப்பிட்டார். நான்காவது பந்தில் இரண்டு ரன்களை லெக் பையாகவே ஓடி வெற்றி பெற்றது கொல்கத்தா.

வீக் எண்ட் போட்டி. ஒரு சுரத்தே இல்லாமல் போகிறதே என நினைத்தவர்களுக்கு ஒரு நெய்ல் பைட்டிங் த்ரில்லிங் கிளைமாக்ஸைக் கொடுத்துள்ளனர், இரு அணியினரும். இதுதான் ஐபிஎல்! எது வேண்டுமானாலும் நேரலாம், போட்டி எப்படி வேண்டுமானாலும் மாறலாம் என மறுபடியும் நிரூபித்திருக்கிறது இந்தப் போட்டி.

வெற்றியின் பக்கத்தில் போய் போய் அதனைக் கோட்டை விடுவதில் சின்ன ராஜஸ்தானாய், சன்ரைசர்ஸ் மாறி வருகிறது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.