விஜய் சேதுபதியின் ‘800’ அரசியல் படமல்ல: தயாரிப்பு நிறுவனம் விளக்கம்

உலகில் ஃபுட்பால் விளையாட்டுக்கு இணையாக அதிக ரசிகர்களை கொண்ட விளையாட்டு என்றால், அது கிரிக்கெட்தான். கிரிக்கெட் வரலாற்றில் சுழற்பந்து குறித்து பேசினால், அதில் தவிர்க்க முடியாத தவறாமல் இடம்பெறும் பெயர் ’முத்தையா முரளிதரன்’. தனது சுழற்பந்தால் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 800 விக்கெட்டுகளை வீழ்த்தி கெத்து காட்டியவர்.

அவரின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி, அப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு உறுதிப்படுத்தியிருந்தார். ஆனால், அதற்கு அரசியல் கட்சியினரும் சமூக செயற்பாட்டாளர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான டி.ஏ.ஆர் மோஷன் பிக்சர்ஸ் விளக்கம் ஒன்றினை அளித்துள்ளது.

 image

அந்த அறிக்கையில், “இது முற்றிலும் ஒரு கிரிக்கெட் வீரரின் வாழ்க்கை  விளையாட்டு சம்மந்தப்பட்டப் படமே தவிர எந்தவித அரசியலும் கிடையாது. ஆனால், இந்தப் படம் பல வழிகளில் அரசியல்மயமாகக்கப்பட்டு வருகிறது. முற்றிலும் விளையாட்டுப் படம் என்பதை தெளிவுப்படுத்த விரும்புகிறோம். தமிழகத்தில் இருந்து தேயிலைத் தோட்ட கூலியாளர்களாக இலங்கைக்கு புலம்பெயர்ந்த சமூகத்தில் இருந்து வந்த முரளிதரன் எப்படி பலத் தடைகளைத்தாண்டி உலகளவில் சிறந்த பந்து வீச்சாளராக உயர்ந்தார் என்பதே இப்படத்தின் கதையம்சம்.

 

image

 

 

இளம் தலைமுறையினரும் வருங்கால விளையாட்டு வீரர்களும்  தங்கள் கனவுகளை அடைய இப்படம் ஒரு தன்னம்பிக்கையை கொடுக்கும். ஈழத்தமிழர்களின் போராட்டங்களைக் சிறுமைப்படுத்தும் காட்சிகள் கிடையாது என்பதை உறுதியாக சொல்ல முடியும். கலைக்கும் கலைஞர்களுக்கும் எல்லைகள் கிடையாது. எல்லைகளைக் கடந்து மக்களையும் மனிதத்தையும் இணைப்பதுதான் கலை. நாங்கள் அன்பையும் நம்பிக்கையை மட்டுமே விதைக்க விரும்புகிறோம்” என்று அறிக்கை வெளியிட்டு உள்ளது.

 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM