“வதந்திகளுக்கு விளக்கம் கொடுக்க விரும்பவில்லை” குஷ்பூ ஆவேசம் !

சமீபத்தில் மத்திய பா.ஜ.க அரசு கொண்டு வந்த புதியக் கல்விக் கொள்கை திட்டத்தை எதிர்க்கட்சிகள் எதிர்த்தபோது, காங்கிரஸ் கட்சியிலிருந்து அழுத்தமாக வந்த ஆதரவுக் குரல் நடிகை குஷ்புவுடையது. அதற்காக, கட்சித் தலைமைகளின் கண்டனங்களுக்கும் ஆளானார். இந்நிலையில், குஷ்புவின் கணவரும் இயக்குநருமான சுந்தர் சி பா.ஜ.க தலைவர் எல்.முருகனை சந்தித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில்,  குஷ்புவை தொடர்புகொண்டு ”பாஜகவில் சேரப்போகிறீர்கள் என்று சொல்லப்படுவது உண்மையா?” என்று கேட்டோம். கோபமாக வருகின்றன வார்த்தைகள்,

இந்த வதந்திக்கு நான் எந்த விளக்கமும் கொடுக்கத் தயாராக இல்லை. பாஜகவில் சேரப்போகிறேன் என்ற வதந்திக்கு விளக்கம் கொடுத்து என் நேரத்தை ஏன் வீணாக்க வேண்டும்? முழுக்க முழுக்க வதந்தியான தகவல் இது.

image

ஆனால், புதிய கல்வி கொள்கையிலிருந்து பல விஷயங்களில் பா.ஜ.கவுக்கு ஆதரவாக கருத்துக் கூறியுள்ளீர்களே?

எத்தனையோ மக்கள் விரோத திட்டங்களை பாஜக கொண்டுவந்தபோது, அக்கட்சியை கிழித்து தொங்கவிட்டிருக்கிறேன். விமர்சனம் செய்திருக்கிறேன். அப்போதெல்லாம் ஏன் இதுபோன்றக் கேள்விகளை யாரும் கேட்பதில்லை. அந்த விமர்சனங்களையெல்லாம் ஏன் பார்ப்பதில்லை? நான் பாஜகவில் சேரப்போகிறேன் என்று ஒவ்வொரு தடவையும் இப்படி வதந்திகள் வந்துகொண்டுதான் இருக்கிறது. வதந்திகளுக்கு நான் விளக்கம் கொடுத்துக்கொண்டே இருக்கவேண்டுமா? தேவையற்றது.  

– வினி சர்பனா

 

 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM