இனி எப்போதும் வர மாட்டாரா ரெய்னா ?

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இனி எப்போதும் சென்னை அணிக்கு ரெய்னா விளையாடமாட்டாரா என்ற குழப்பம் ரசிகர்கள் மத்தியில் வலுப்பெற்றுள்ளது. நேற்று ஒரே நாளில் நிகழ்ந்த இரு சம்பவங்களே குழப்பத்திற்கு முக்கிய காரண‌‌மாக பார்க்கப்படுகிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மகேந்திர சிங் தோனிக்கு அடுத்தபடியாக ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் ‘சின்னத் தல’ சுரேஷ் ரெய்னா. ஐபிஎல் சீசன் தொடங்கிய காலம் முதலே சிஎஸ்கேவுக்கு விளையாடி வரும் ரெய்னா, அவ்வணியின் வெற்றிகளில் பெரும் பங்காற்றி உள்ளார். உதாரணமாக, 2011ஆம் ஆண்டு தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் ரெய்னா குவித்த 146 ரன்கள், இக்கட்டான நிலையில் இருந்த சிஎஸ்கே அணியின் வெற்றிக்கு வழிவகுத்தது.

image

ஐபிஎல்லின் ஒவ்வொரு தொடரிலும் 300க்கும் குறையாத ரன்களை ரெய்னா குவித்துள்ளார். ‌சிஎஸ்கே அணியின் தூண்களில் ஒருவராக கருதப்படும் ரெய்னா யாரும் எதிர்பாராத வகையில் நடப்பு சீசனில் இருந்து விலகியது ரசிகர்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. உறவினர் குடும்பத்தில் நிகழ்ந்த கொடூர கொலைகள், தோனியுடன் மனக்கசப்பு, அணி நிர்வாகத்துடன் மோதல், என பல்வேறு காரணங்கள் ரெய்னாவின் விலகலுக்கு காரணங்களாக கூறப்பட்டன. கருத்துகள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டன என அணி நிர்வாகம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்ட பின் ரசிகர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டிருந்தனர். அதன் பின்னர் ரெய்னா மீண்டும் அமீரகம் திரும்பி ஐபிஎல் விளையாடுவார் என்ற தகவல்களும் உலா வந்தன.

image

நடப்பு சீசனில் சிஎஸ்கே பேட்டிங்கில் கடுமையாக தடுமாறி வரும் சூழலில், சிக்கல்களைக் களையும் விதமாக ரெய்னாவின் கம்பேக் இருக்குமா என ரசிகர்கள் கவலையோடு காத்திருந்தனர். இச்சூழலில், அணியின் தலைமை செயலதிகாரி காசி விஸ்வநாதனின் பேட்டி ஒன்று ரசிகர்களை வேதனையடைய வைத்துள்ளது. நடப்பு சீசனில் ரெய்னா திரும்புவதற்கு வாய்ப்பில்லை எனக் கூறியுள்ளார் அவர், அவருக்கான சுதந்திரத்தை அணி நிர்வாகம் மதித்துள்ளதாகவும் அவர் சூசகமாக தெரிவித்துள்ளார்.

image

இது ஒருபுறம் ரசிகர்களை குழப்பமடையச் செய்ய, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தை UNFOLLOW செய்துள்ளார் ரெய்னா. அணி நிர்வாகமும் ரெய்னாவை UNFOLLOW செய்துள்ளது. ஏற்கெனவே சென்னை அணி ரசிகர்கள் தொடர் தோல்விகளால் துவண்டுள்ள நிலையில், அணியின் முக்கிய வீரர்களில் ஒருவரான ரெய்னாவைச் சுற்றும் சங்கடங்கள் மேலும் ரணம்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM