மூக்கைத் துளைக்கும் அளவிற்குக் கருவாட்டு வாசம் வீடு முழுக்க பரவியிருந்தது. ஆம், கருவாடு வாசனை என்றுதான் சொல்ல வேண்டும். “அப்பாவின் கருவாட்டு வியாபாரம்தான் இப்ப எங்க குடும்பத்தையே காப்பாத்திக்கிட்டு இருக்கு” என்று உணர்ச்சி வசப்பட்டார் வீரபத்ரமணி.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள அமராவதி புதூரில் அப்பா, தங்கச்சி, மனைவியுடன் வாழ்க்கை நடத்திவருகிறார், அந்த மாற்றுத்திறனாளி இளைஞர். வீரபத்ரமணிக்கு 25 வயதுதான். ஆனால், பெரிதாக இயங்கமுடியாத அளவுக்கு முடங்கியுள்ளது அவரின் உடல் வாகு. பிறந்த 3 மாதத்தில் ஏற்பட்ட இளம்பிள்ளை வாதம்தான் இப்படி அவர் கஷ்டப்பட காரணமாக இருக்கிறது. ஆயிரம் குறைகள் இருந்தாலும் அவர்தான் என் குழந்தை என்று அவரின் காதல் மனைவி சுமதி சொல்லும்போது அந்த இடமே அன்பால் நிறைகிறது.

வீரபத்ரமணி

தொடர்ந்து வீரபத்ரமணி, “எனக்கு வெவரம் தெரியறதுக்கு முன்னாடி இருந்தே என் உடம்பு இப்பிடிதேன். என் மேல பாவப்பட்ட தாத்தாவும், அப்பத்தாவும்தான் என்னை சின்ன வயசுல இருந்து தூக்கி வளத்தாக. சொந்த ஊர் அருப்புக்கோட்டை பக்கத்தில பரளச்சி கிராமோம். எனக்கு ஒரு தங்கச்சி, ஒரு தம்பி. நான் மட்டும் தாத்தா கூட மதுரேல வாழ்ந்துக்கிட்டு இருந்தேன். பிளஸ் 2 முடிச்சுட்டு புதூர் ஐ.டி.ஐ-ல மொபைல் சர்வீஸ் முடிச்சுருக்கேன். செல்போன், கிரேண்டர், மிக்ஸி, கரன்ட் அடுப்புனு எல்லாமே சர்வீஸ் பண்ணுவேன். ஒரு சில நேரம் ரேடியா செட்டு ஆப்பரேட்டராவும் கூட வேலை செஞ்சுருக்கேன். இப்படி தாத்தா ஆதரவில் இருந்தப்பதான் அப்பத்தா, தாத்தானு இரண்டு பேரின் மரணம் என்னை தனிமை படுத்திருச்சு. இனிமே யாரும் நமக்கு இல்லேனு யோசிச்சப்பதான் எனக்கு சுமதியோட அன்பு கிடைச்சு காதலா மாறி திருமணம் நடந்தது. ஒரு முழுமையான ஊனமா இருக்க என்னை அவ திருமணம் செஞ்கிட்டது கடவுள் போட்ட உயிர் பிச்சை” என்று சட்டை துணியை வைத்து கண்களைத் துடைத்துக்கொண்டார்.

உரிமையாய் கணவனின் கைகளை தட்டிவிட்டு கண்களைத் துடைத்தார் சுமதி. “எனக்கு மணிய சின்ன வயசில இருந்தே தெரியும். எங்க வீட்டு பக்கத்திலதான் அவங்க தாத்தா கூட இருந்துச்சு. அவங்க தாத்தா செத்ததுக்கு பின்னாடி யாரும் இல்லாம தவிச்சுச்சு. ஏற்கனவே என்னட ‘உன்ன எனக்கு பிடிச்சுருக்கு… நொண்டி, நுடமா இருக்க என்ன நீ கட்டிக்குவியானு’ கேட்டுச்சு. நா…. எங்க வீட்ல வந்து பேசுங்கனு பதில் சொல்லிட்டு விட்டுட்டேன். ஆனா அவர் எங்க வீட்ல வந்து பேசல. இப்படி இருக்கும் போதுதான் அவருக்கு ஆதரவா இருந்த தாத்தாவும் இறந்துட்டாரு. அப்பதான் நானே போய் கல்யாணம் பண்ணிக்கிறேனு அவர்ட சொன்னேன். ‘எங்க வீட்ல ஒத்துக்க மாட்டாங்க என்ன கூட்டிட்டு போயிருனு’ சொல்லிட்டேன். ‘நீ இல்லாட்டி செத்துருவேனு சொன்னேன்’.

வீரபத்ரமணி – சுமதி

ஆமா, எனக்கு தெரியும் மணியோட உடம்ப பார்த்துட்டு எங்க வீட்ல கல்யாணம் செஞ்சுக்க ஒத்துக்கமாட்டாங்கனு. ரெண்டு பேரும் சென்னைக்கு போய் கல்யாணம் பண்ணிக்கிட்டோம். இப்ப எங்களுக்கு கல்யாணம் ஆகி ஒரு வருசம் ஆகப்போகுது. இப்ப அமராவதிபுதூர்ல இருக்கோம். என் குழந்தையாதான் அவர பாத்துக்கிறேன். எப்போதும் அவர இப்படி தான் பாத்துக்குவேன். அவருக்கு உடம்புதான் இப்டி இருக்கு. ஆனா அவர்கிட்ட நிறைய திறமை இருக்கு. நல்லபடியா பொழச்சுக்குவாரு. என்னையும் நல்லபடியா பாத்துக்குவாரு” என கண்களில் நம்பிக்கை ஒளி மின்ன பேசுகிறார் சுமதி.

நெகிழ்ச்சியாக மனைவியின் பேச்சை கேட்ட வீரபத்ரமணி, “அவளிடம் என் காதலை சொல்ல ஆயிரம் தயக்கம். ஆனால் அவள் காட்டிய அன்புதான் உடைச்சுக்கிட்டு சொல்ல வச்சது. ஆனா, காதல சொன்ன பின்னாடி ஏண்டா சொன்னோம்னு இருந்துச்சு. நல்லா இருக்க எந்த பிள்ளைதான் நம்மள கட்டிக்க ஆசைப்படும். ‘நீ யெல்லாம் ஒரு மனுசனா’னு என்னை நானே திட்டிக்கிட்டேன். ஆனா என் தாத்தா இறந்தற்கு பின் நான் அனாதையா நின்னப்போ இவதான் எனக்காக நின்னா. தாத்தா இறந்தப்போ யாரும் ஒருவார்த்த நான் இருக்கேன்னு பேச்சுக்கு கூட சொல்லல. ‘நீதான் என் உலகம்னு’ எங்கிட்ட சுமதி சொன்னது என் தற்கொலை முடிவ மாத்த வச்சது.

வீரபத்ரமணி – சுமதி

Also Read: ஊருக்கு உழைத்தலும் கல்விதான்!

எங்க ரெண்டு பேர் வீட்டுலையும் எதுவும் சொல்லல. சுமதியோட அப்பா, அம்மா கூட எங்கள எப்பயாச்சும் வந்து பார்த்துட்டுதான் போறாங்க. அவங்களும் என்னை முழுசா நம்பிட்டாங்க. எப்படியாச்சும் வாழ்க்கைல ஜெயிக்கணும். சுமதிய நல்லா பார்த்துக்கணும். லேசா கை கொடுத்தா போதும். மேல வந்துருவேன். எனக்கு எலெக்ட்ரிக்கல் தொழில் தெரியும். கடை வைக்க பணம் கிடைச்சா போதும் ஒரு ஓரமா பிழைச்சிக்கிருவேன். எனக்கு அரசு கடன் உதவி வழங்கினா போதும் வாழ்க்கையில் முன்னேறிவிடுவேன்.

வீரபத்ரமணி – சுமதி

எங்க அம்மா இறந்து ரொம்பநாள் ஆச்சு. என் தம்பி மதுரையில் சுயமா சம்பாரிச்சு படிக்கிறான். தங்கச்சிக்கு திருமண ஏற்பாடு செஞ்சுக்கிட்டு இருக்கோம். நா வீட்ல இருந்துகிட்டே சின்ன, சின்ன எலெக்ட்ரிக்கல் வேலை செஞ்சுக்கிட்டு இருக்கேன். கடை வச்சா நல்ல வருமானம் இருக்கும். இப்போதைக்கு அப்பாதான் சைக்களில் கருவாடு வியாபாரம் செஞ்சு எங்களை காப்பாத்திக்கிட்டு இருக்காரு. நானும் தனியா உழைக்கணும்னு நினைக்கிறேன்” எனும் வீரபத்ரமணியிடம் திறமை நிறையவே ஒளிந்திருக்கிறது. தூக்கிவிடத்தான் சில கரங்கள் வேண்டும்.

வீரபத்ரமணி – சுமதி குடும்பம்
வீரபத்ரமணி – சுமதி
வீரபத்ரமணி – சுமதி
வீரபத்ரமணி – சுமதி

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.