பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

ந்த டைரிக் குறிப்புக்கு மூல காரணமே அந்தப் பார்வைதான்.

காலை ஏழு மணிக்கெல்லாம் வாசலில் ‘ஐயா’ என்ற குரல் கேட்டு எட்டிப் பார்த்தேன். 40 வயதுக்குள் இருக்கும் ஒருவர், 5, 6 வயதுள்ள ஒரு சிறுவனுடன் நின்றிருந்தார்.

“யாரு… என்ன வேணும்?”

“பசி ஐயா… ஏதாச்சும் கொடுங்க…”

‘காலையிலேயே பிச்சையா’ என்று எண்ணியபடி அவரை ஆராய்ந்தேன். துவைத்துக் கட்டிய லுங்கி, சீரான மேல் சட்டை அணிந்து படிய வாரிய தலைமுடி, சமீபத்தில் மழிக்கப்பட்ட முகம் என்ற சாதாரணமான தோற்றம். சொல்லப்போனால் கலைந்த தலைமுடி, கசங்கிய லுங்கி, அழுக்குப்பனியனுடன்(அதை என் அகராதியில் ‘ஃப்ரீ டிரெஸ்’ என்று சொல்லிக் கொண்டாலும் ‘கொரானா டிரெஸ்’ என்பது மனைவி வைத்துள்ள பெயர்) இருந்த என்னைவிடவும் மேம்பட்ட உடையுடன் இருந்தார். கூட வந்த பையனும் எந்தவித பிச்சைக்கார கோலமும் இன்றி யூனிஃபார்ம் போடாமல் பள்ளி செல்லும் பக்கத்து வீட்டுப் பையன்போலத் தோன்றினான். இருவருமே முகக்கவசம் அணிந்திருந்தார்கள்.

Representational Image

பொதுவாக இந்த மாதிரி பிச்சை கேட்டு வருபவர்களையெல்லாம் கணித்து பிச்சையிடுவது பற்றியும், யாருக்கு எவ்வளவு தரலாம் என்றும் முடிவெடுப்பதெல்லாம் என்னவள் இலாகா என்பதால் நான் தலையிடுவதில்லை. காரணம், குறி சொல்கிற பெண்கள், குடுகுடுப்பைகாரர்கள், மாரியம்மன் கோயிலுக்கு வேண்டுதல் வைத்து செம்பு வேப்பிலையுடன் வரும் பெண்மணிகள், கைக்குழுந்தைப் பெண்மணிகள் போன்ற பலதரப்பட்ட நபர்களுக்கும் தானம் செய்வதில் வேறு வேறு அளவு கோல்கள் இருக்கும்.

அதிலும் குடுகுடுப்பைகாரர்கள் மற்றும் குறி சொல்கிற நபர்கள் என்றால் உடனடி நடிவடிக்கையும் தாராளமான தானமும் இருக்கும். அதற்கான காரணம் இருந்தது. அவர்கள் தானம் கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும் வாசலில் நின்று ஏதேனும் சொல்வார்கள். என்னவளுக்கு அது பற்றி நல்ல அபிப்பிராயங்கள் இருந்ததில்லை. ஏதேனும் அமங்கலமாய்ச் சொல்லிவிடுவார்களோ என்ற பயம் உண்டு. அதனாலேயே அவர்கள் வந்தால் உடனடியாக தானம் தந்து அனுப்பிவிடுவாள்.

முதிய பெண்மணிகள் கிழிந்த உடைகள் அணிந்திருப்பதைக் கண்டால் அவளால் தாங்க முடியாது. அவர்களது கதையைக் கேட்டு மனம் வருந்துவாள். ஒரு ஜாக்கெட்டும் நன்றாய் இருக்கும் பழைய சேலையும், சாதம் அல்லது இட்லியுடன், தானத்தில் நிச்சயம் இடம் பெறும். கர்ப்பிணிப் பெண்களோ கைக்குழந்தையுடன் வரும் பெண்களோ வந்துவிட்டால் கவனிப்பே வேறுவிதம். தானம் தருவதில் இத்தனை விஷயங்கள் இருக்கும்போது இந்த விவகாரத்தில் நான் எப்படித் தலையிடுவது..?

இப்போது வந்திருக்கிற இந்த நபர் இத்தனை காலை நேரத்தில் வந்துவிட்டார். என்னவள் மாத்திரை, மருந்துகள் சாப்பிடுவதால் நான் அவளை, ‘நன்றாகத் தூங்கட்டும், அவளாக எழட்டும்’ என்று காலை நேரங்களில் தொந்தரவு செய்வதில்லை.

பையனுடன் வந்திருக்கிறார், பசியுடன் இருப்பதும் முகத்திலேயே தெரிகிறது. முடிவெடுக்க வேண்டிய கட்டத்தில் நான்.

பசி என்கிறார், சாப்பாடு கொடுக்கலாம் என்றால் காலை நேரத்தில் இன்னும் டிபன் செய்யவில்லை. என்ன செய்வது என்று யோசித்தேன்.

பணம் கொடுக்கலாம் என்றால் எவ்வளவு கொடுப்பது, இதை எப்படி முடிவு செய்வது என்று எனக்குத் தெரியவில்லை. இதெல்லாம் என்னவள் இலாகா. நானாக எந்த முடிவு எடுப்பது என்று குழம்பிப் போனேன். ஒன்று மட்டும் நிச்சயம் தெரிகிறது. இந்த மனிதருக்குப் பசியை போக்க வேண்டும். ஏதாவது செய்யலாம் என்று முடிவெடுத்துவிட்டேன். கூடவே பையன் வேறு இருந்ததால் நிச்சயம் பசி போக்க வேண்டும்.

அந்த மனிதரைப் பார்த்தேன். பார்ப்பதற்கு நோயாளி போல் முகத்தோற்றம் இருந்தது. முகமெங்கும் அம்மைத் தழும்புகள். நோய் வந்து குணமான மனிதர்போல் தோன்றினார். பையனுக்கோ பால் வடியும் முகம். பையனுடன் அவர் வராமல் தனியாக வந்திருந்தால் அவருக்கு உணவளிப்பது பற்றி நான் முடிவு செய்து இருப்பேனா என்று தெரியவில்லை. பேச்சுக்குரல் கேட்டு என்னவள் எழுந்து வருவாள் என்று எண்ணினேன். இன்னும் எழவில்லை.

Representational Image

ஒரு முடிவுக்கு வந்து அவருக்குப் பணம் தரலாம் என்று முடிவு செய்தேன். திடீரென்று ஒரு யோசனை வந்தது. அவர் திடகாத்திரமாக இருந்தார்.

“ஒரு சின்ன வேலையிருக்கு… செய்றீங்களா காசு தர்றேன்…”

அவர் யோசித்துவிட்டு, “சரிங்கய்யா பார்க்கிறேன்” என்றார்.

வாசல்புரத்தில் இருசக்கர வாகனத்தை நிறுத்தும் பழக்கம் இருந்தது. பலரும் நிறுத்துவதால் சைடு ஸ்டாண்டு போட்டு பள்ளம் பறித்திருந்தது . மழை பெய்து தண்ணீர் இறங்கி, இறங்கி ஒரு சிறிய பள்ளமாக இருந்தது. அந்தப் பள்ளத்தை மண் இட்டு மூட வேண்டும் என்று நான் திட்டமிட்டிருந்தேன். அந்த வேலையை அவரை செய்யச் சொல்லலாம் என்று முடிவு செய்தேன்.

“கொஞ்சம் மண்ணை வெட்டி இந்த பள்ளத்தில் நிரப்புறீங்களா.”

” சரிங்கய்யா… மம்பட்டியக் கொடுங்க.”

மண்வெட்டி எடுத்துக் கொடுத்தேன். பக்கத்திலிருந்த சரளை மண்ணை எடுத்து அந்தப் பள்ளத்தில் இட்டு நிரப்பி, காலால் மிதித்து, அந்தப் பள்ளத்தை மூடினார். வேலை திருப்தியாக இருந்தது.

திடீரென்று நினைவு வந்தது.

“சாப்பிட்டீங்களா?”

“இல்லங்கய்யா இன்னும் சாப்பிடல. ஒரு நாள் ஆயிடுச்சு. நேத்து காலையில சாப்பிட்டது, இன்னும் சாப்பிடல.”

“பையன் சாப்பிட்டானா ?”

“இல்லங்கய்யா இனிமேதான் வாங்கிக் கொடுக்கணும்.”

மனதிற்குள் சுரீர் என்றது. பசியோடு இருக்கும் ஒரு மனிதனை வேலைசெய்ய வைத்துவிட்டாயே என்று மனசாட்சி உறுத்தியது.

உள்ளே சென்று பணத்தை எடுக்கும்போது மறுபடி யோசனை.

எவ்வளவு கொடுப்பது? இது பிச்சை அல்ல, கூலி. இதை நாம் நிர்ணயிப்பது சரிதானா என்ற எண்ணம் வந்தது. பிச்சை என்றால் நான் தீர்மானிக்கலாம்.

பணத்தைக் கொடுத்தேன். ஐம்பது ரூபாய். பெற்றுக்கொண்ட அவர் முகத்தில் ஒரு மலர்ச்சி.

இதற்குள் என்னவள் பேச்சுக்குரல் கேட்டு எழுந்து வந்திருந்தாள். என்ன என்று கேட்பதுபோல் பார்த்தாள். சொன்னேன். வெளியில் எட்டிப் பார்த்து பள்ளம் நிரப்பப் பட்டதுகண்டு திருப்தி காட்டினாள். பிறகு, ”எவ்வளவு கொடுத்தீங்க?” என்றாள்.

” அம்பது.”

யோசித்தவள் அந்தப் பையனைப் பார்த்தாள்.

பையனிடம் “சாப்பிட்டியா?” என்று கேட்டாள்.

Representational Image

அவன் இல்லை என்று தலையாட்டினான்.

” ஏங்க, பசியில இருக்கறவரை வேல செய்யச் சொல்லலாமா” என்று கடிந்து கொண்டவள் உள்ளே சென்று ஒரு பிஸ்கட் பாக்கெட்டையும் இரண்டு வாழைப் பழங்களையும் கொண்டுவந்து கொடுத்தாள்.

அதை வாங்கிக் கொண்டவர் பையனிடம் பிஸ்கட்டை கொடுத்தார்.

எனக்கு சங்கடமாக இருந்தது.

“தம்பி ரெண்டு விஷயத்துக்காக என்னை மன்னிக்கணும்.”

அவர் திகைத்துப் போய் என்னைப் பார்த்தார்.

“என்னங்கய்யா… பெரிய வார்த்தையெல்லாம் சொல்றீங்க”

” பசியோட இருக்கற உங்ககிட்ட வேலை வாங்கிட்டேன். அதேமாதிரி வேலைக்கு எவ்வளவு கூலிங்கறதையும் உங்ககிட்ட கேக்காம நானா முடிவு செஞ்சிட்டேன். உங்கள வேலை வாங்கறதுக்கும் கூலிய நிர்ணயம் பண்றதுக்கும் நான் யாரு…”

அவர் மனம் கலங்கிவிட்டதை முகம் காட்டியது.

“அப்படியெல்லாம் சொல்லாதீங்கய்யா. ஒருத்தரும் திரும்பிக்கூட பாக்க மாட்டாங்க. நீங்க தாராளமா காசு கொடுத்திட்டீங்க.”

“ஆனா… நான் உங்களை வேலைபார்க்கச் சொன்னதுக்குக் காரணம் இருக்கு.”

என்ன என்று கேட்பதுபோல் பார்த்தார்.

“இந்தப் பையன் யாரு… படிக்க வைக்கலியா… இவனை ஏன் கூட்டிக்கிட்டு அலையுறீங்க..?”

“என் மகன்தானுங்க. அம்மா இல்லீங்க. ஹாஸ்டல்ல விட்டிருக்கேன். ஸ்கூல் எல்லாம் அடைச்சிருக்கில்ல… ஆஸ்டலையும் மூடிட்டாங்க. எனக்கும் வேலை இல்ல. நான் திருப்பூர்ல வேலைபார்த்துக்கிட்டு இருந்தேன். லாக்டௌனால வேலை எல்லாம் நின்னு போச்சு. இங்க சர்ச்சில இருக்கிற சாமியாரு எங்க ஊருக்காரரு. அவரைப் பாக்கணும்னு கஷ்டப்பட்டு ஒரு காய்கறி வண்டியில வந்திட்டோம். ஆனா சர்ச்சையும் பூட்டிட்டாங்க. சாமியாரும் ஊர்ப்பக்கம் போயிட்டாரு. என்ன பண்றதுன்னு தெரியல.

ரெண்டு நாளாச்சு. ஊருக்கும் போக முடியல… இ பாஸ் வேணும்னு சொல்றாங்க. ரயில்வே ஸ்டேஷன்ல வெளியில படுத்தோம். அங்கேயும் தங்கக் கூடாதுன்னு விரட்டிட்டாங்க. இந்தப் பையனுக்குச் சாப்பாடு கொடுக்கணுமில்ல… அதான் சுத்திச் சுத்தி வர்றேன்…”

அதைக் கேட்டுக்கொண்டிருந்த என்னவள் பதறியபடி,

“முதல்ல சாப்பிடுங்கப்பா… பிறகு பேசலாம்” என்றவள், என் பக்கம் திரும்பி, “ஏங்க அவங்க சாப்பிடலைங்கிறாங்க… நீங்க என்னடான்னா பேசிக்கிட்டே இருக்கீங்க” என்றாள்.

Poverty

அவளை நன்றியுடன் பார்த்த அவர்,

“இருக்கட்டும்மா… இன்னம் ரெண்டு வீட்டுக்குப் போய் பார்த்துட்டு அப்புறமா சாப்பிடுறேன்” என்றார்.

இப்போது நான் குறுக்கிட்டு, “நான் சொல்ல வந்ததே அதப்பத்தித்தான். அய்யா… நீங்க மட்டும் வந்திருந்தா ஏதாச்சும் காசு போட்டு அனுப்பியிருப்பேன். ஆனா பையனையும் கூட்டிக்கிட்டு வந்திட்டீங்க. அந்தப் பையனைப் பாருங்க… பிஞ்சு முகம். நல்லது கெட்டது அவனுக்குத் தெரியுமா..? இந்த வயசில அவன் முன்னாடி இப்படி நீங்க வீடு வீடா போனிங்கன்னா, இப்படி யாசகம் பண்ணினா சாப்பாடு கிடைச்சுரும்னு மனசில பதியுமில்ல..? அதுக்கு பதிலா உழைச்சா காசு கிடைக்கும்னு சொல்லித் தாங்க. அதான் உங்கள வேலை செய்யச் சொன்னேன். இப்ப நான் கொடுத்த காசு பிச்சை இல்ல. அது நீங்க சம்பாதிச்ச, உங்களுக்குச் சொந்தமான காசு.

இதை இந்தப் பையன் பாத்து வளர்ந்தாதான் நாளைக்கு உழைச்சு சாப்பிடணும்னு எண்ணம் வரும். அதைத்தான் நான் சொல்றேன். உங்களுக்கு வேலை கொடுக்குற அளவுக்கு நான் ஒண்ணும் பெரிய ஆளெல்லாம் இல்ல. பிச்சைங்குற வார்த்தைய சொன்னதை மன்னிச்சுக்கோங்க” என்றேன்.

அவர் கண்கள் கலங்கிவிட்டன.

“அய்யா பெரிய வார்த்தை எல்லாம் சொல்லாதீங்க. ஒவ்வொருத்தரும் இப்படி வாசல்ல வந்து நின்னாலே, ‘ஒடம்பு நல்லாத்தானே இருக்கு… உழச்சு தின்னா என்ன … இப்படிப் பிச்சை எடுக்கிறியே’ன்னு கேப்பாங்க ஆனா இப்படி அடுத்தவங்க மனசு நோகாம நாசூக்கா சொல்றீங்க. எனக்கும் புரியுது. இனிமே இப்படி வீடு வீடா போகமாட்டேன்யா. என்ன கஷ்டம்னாலும் உழச்சு சாப்பிடுவேன்” என்றவர் நான் கொடுத்த பணத்தை பையன் கையில் கொடுத்தார்.

“தம்பி… இது வேலபாத்து சம்பாதிச்ச காசு. இதுலதான் நாம சாப்பிடணும். என்ன கஷ்டம்னாலும் வேலை பாத்துத்தான் சாப்பிடணும்” என்று கூறியவர், என்னை நன்றியுடன் பார்த்தார். என்னவளைப் பாத்தேன். அவள் என்னை ஆமோதிப்பதுபோல் ஒரு பார்வை பார்த்தாள்.

இதை அல்லவோ டைரிக் குறிப்பில் ஏற்ற வேண்டும்!

கமலநாபன்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.