மும்பை இந்தியன்ஸ் – சிறுவரலாறு:

ஐபிஎல் கோப்பைகளை அதிக முறை வென்றிருக்கும் அணியாக கெத்துகாட்டுகிறது மும்பை இந்தியன்ஸ். இந்தியா – பாகிஸ்தான் போல, இங்கிலாந்து – ஆஸ்திரேலியா போல ஐபிஎல்-ன் பரம எதிரிகளாக மும்பையும், சென்னையும் மோதுவதை ரசிக்கிறார்கள் கிரிக்கெட் ரசிகர்கள். நடப்பு சாம்பியனான மும்பை, 2013, 15, 17, 19 என ஒற்றை இலக்க ஆண்டுகளில் எல்லாம் தொடர்ந்து சாம்பியன் பட்டத்தை வென்றுவந்திருக்கிறது.

Mumbai Indians

சச்சின் கேப்டனாக தலைமையேற்று ஆடத்தொடங்கிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு, ரசிகர்கள் மும்பையில் மட்டும் உருவாகவில்லை, இந்தியா முழுவதும் உருவானார்கள். சச்சின் என்ற மிகப்பெரிய பிம்பம் பெரும்பான்மையான ரசிகர்களை மும்பை இந்தியன்ஸ் அணியின் பக்கம் ஈர்த்தது . சச்சின் ஆடியும் கப் அடிக்கமுடியாமல் திணறி வந்த மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பான்ட்டிங் தலைமையேற்று அவரது ஃபார்மும் கவலைக்கிடமாக, யாரும் எதிர்பாராத வண்ணம் மண்ணின் மைந்தன் ரோஹித் ஷர்மாவை நோக்கி கேப்டன் பதவி வந்தது. கேப்டனான முதல் ஆண்டே சாம்பியன்ஷிப் கோப்பையைக் கையில் ஏந்திய ரோஹித் ஷர்மா மொத்தம் நான்கு முறை கோப்பையை கையில் ஏந்திவிட்டார். ஐந்தாவது முறையாக கோப்பையைக் கையில் ஏந்தத்துடிக்கும் மும்பைக்கு இந்தமுறை பிரச்னைகளும், சவால்களும் எக்கச்சக்கமாக இருக்கின்றன.

பிரச்னை ஒன்று – அரபு ராசி!

2014 அரபு மைதானங்களில் நடைபெற்ற 5 போட்டிகளில் தோற்று, மும்பை பெரும் சறுக்கலைச் சந்தித்தது. இந்த முறையும் ஐபிஎல் போட்டிகள் கொரோனா காரணமாக அரபு மைதானங்களில் நடப்பதால், 2014 மாதிரி ஒரு நிலைமை மீண்டும் வந்துவிடுமோ என ரசிகர்கள் சற்று கலங்கிப் போய்தான் இருக்கின்றனர். மேலும், இந்த ஆண்டு மலிங்கா எனும் மாவீரன் இல்லாததது மும்பைக்கு சற்று சறுக்கல். இதுவரை நடந்த 12 சீசன்களில் மலிங்கா ஆடாத முன்று வருடங்களிலும், மும்பை அணி பிளே ஆஃப் சுற்றுக்குக்கூடத் தகுதிபெறவில்லை.

பும்ரா, போல்ட்

இதுவரை மும்பை அணிக்காக 122 போட்டிகளில் விளையாடி 170 விக்கெட்டுகளை எடுத்து மும்பை அணிக்காக மட்டும் அல்ல, ஐபிஎல் வரலாற்றிலேயே அதிக விக்கெட்டுகள் எடுத்துள்ள பெளலர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் மலிங்கா. இவர் இல்லாமல் டெத் ஒவர்களில் யார் பந்து வீசுவார்கள் என்பதில் தொடங்கி பல்வேறு கேள்விகள் இருக்கின்றன. அப்படி வீசினாலும் மலிங்கா அளவுக்கு துல்லியமாக வீசமுடியுமா எனப்பல கேள்விகளுக்கு விடை இல்லை. மலிங்கா இல்லாததால் பும்ராவுக்கு கூடுதல் பிரஷர். அதை பும்ரா எப்படி சமாளிக்கப்போகிறார் என்பதில் இருக்கிறது மும்பையின் வெற்றிகள்.

பிரச்னை இரண்டு – ஸ்பின்னர்கள் இல்லை!

மும்பை அணி ஹர்பஜன் சிங்கிற்குப் பிறகு ஒரு தரமான ஸ்பின்னர் இல்லாமல்தான் ஆடிக்கொண்டிருக்கிறது. மயாங்க் மார்க்கண்டே, ராகுல் சஹார், குர்னால் பாண்டியா போன்ற அனுபவம் குறைந்த ஸ்பின்னர்களை வைத்து மட்டுமே மும்பை இந்தியன்ஸ் அணி ஆடிவந்தது. இந்தியா போன்ற மைதானங்களில் இந்தப் பிரச்னையை தங்களது பேட்டிங்கின் மூலமும், வேகப்பந்து வீச்சின் மூலமும் சமாளித்து வந்த மும்பை அணியால் ஸ்பின்னிற்கு ஒத்துழைக்கும் அரபு மைதானங்களில் அதே உக்தியைக் கையாள முடியாது. இதுதான் பெரும் சவாலாக இருக்கும்.

ஹர்திக் பாண்டியா

2020 சவால்கள்- பேட்டிங் ஆர்டர் என்ன?!

தென்னாப்பிரிக்க கேப்டன் டிகாக், பிக்பேஷ் புகழ் கிறிஸ் லின் இருவரும்தான் ரோஷித் ஷர்மாவோடு ஓப்பனிங் இணைந்து ஆட மும்பை இந்தியன்ஸ் கையில் வைத்திருக்கும் சாய்ஸஸ். கரீபியன் லீகில் லின் பெரிதாக ஆடவில்லை. கரீபியன் பிட்ச்களைப்போலவே அரபு பிட்ச்களும் அதிரடி பேட்ஸ்மேன்களை சோதிக்கும் பிட்ச்கள் என்பதால் லின்னுக்கு பெரும்சோதனைக் காத்திருக்கிறது. அதனால் டிகாக் – ரோஷித் இருவரும்தான் ஓப்பனிங் பேட்ஸ்மேன்களாக இருப்பார்கள் என எதிர்பார்க்கலாம். சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா என மிடில் ஆர்டரில் முழுக்க முழுக்க இந்திய வீரர்களைக் கொண்டே மும்பை நிரப்பிவிடும். பொல்லார்ட் பேட்டிங், பெளலிங் என இரண்டிலுமே செம ஃபார்மில் இருக்கிறார். பொலார்ட்தான் இந்தமுறை மும்பையின் பெரும்பலமாக இருப்பார். ஆனால், ஹர்திக் பாண்டியா தன்னுடைய பழைய ஃபார்மில் வந்தால் மட்டுமே அவருக்குத் தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்கும். ரோஹித்தும், பயிற்சியாளர் ஜெயவர்தனேவும் டிக் அடிக்கும் ப்ளேயிங் லெவன் லிஸ்ட்டில்தான் வெற்றிகள் ஒளிந்திருக்கிறது.

ஸ்பின் டு வின்:

மும்பை இந்தியன்ஸ் அணி இந்த முறை அரபு மைதானங்களில் ஐபிஎல் போட்டிகள் நடக்கும் என்று கனவிலும் நினைத்திருக்க மாட்டார்கள். அப்படி நினைத்திருந்தால் சுமாரான ஸ்பின் கூட்டணியை உருவாக்கியிருக்க மாட்டார்கள். ராகுல் சஹார், குர்னால் பாண்டியாதான் மும்பை அணிக்குள் இருக்கும் டாப் ஸ்பின்னர்ஸ் . குர்னால் பாண்டியா அவ்வப்போது விக்கெட் எடுத்தாலும் தொடர்ந்து கன்சிஸ்டென்ட்டாக வீசக்கூடிய பெளலர் அல்ல. ராகுல் சஹாருக்கும் பெரிய அனுபவம் கிடையாது. இந்த இருவரை மட்டுமே நம்பி எப்படி 14 லீக் போட்டிகளையும் சமாளிக்கப்போகிறார்கள் என்பதுதான் சவால்.

க்ருணால் பாண்டியா

மலிங்கா இடம்?!

சமீபகாலமாக இந்தியாவுக்கு மிகச்சிறப்பாகப் பந்துவீசிவருபர் ஜஸ்பிரித் பும்ரா. கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளிலும் சிறப்பான பங்களிப்பைக் கொடுத்தார். இறுதிப்போட்டியில் சென்னையை வீழ்த்தியதிலும் இவரது பங்களிப்பு முக்கியமானது. மலிங்கா இறுதிப்போட்டியில் சொதப்பியபோது பும்ராதான் கைகொடுத்தார். பும்ராவோடு ட்ரென்ட் போல்ட்டா அல்லது மும்பைக்கு சில ஆண்டுகளாக விஸ்வாசமாக இருக்கும் மெக்லீனிகனா என்பதை ஐபிஎல்-ன் முதல்கட்டப்போட்டிகளில் சோதித்துப்பின்னர் ப்ளேயிங் லெவனை செட் செய்வார்கள் என எதிர்பார்க்கலாம்.

Also Read: மலிங்கா இல்லாத மும்பை ப்ளே ஆஃப்கூட தாண்டியதில்லை… இந்த முறை எப்படி? #MumbaiIndians

மும்பை இந்தியன்ஸின் பலமே ஒரு செட்டான ப்ளேயிங் லெவன் என்பதுதான். பேட்டிங் ஆர்டரில் அவர்களுக்கு எந்தக் குழப்பமும் இல்லை. இந்த ஆண்டு மலிங்கா இல்லாததும், திறமையான ஸ்பின்னர்கள் இல்லாததுமே பெரும் பின்னடைவு. இந்த இரண்டு ஏரியாவையும் சமாளித்துவிட்டால் ஐந்தாவது முறையாக கப் அடித்து தோனிக்கு டஃப் கொடுக்கலாம்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.