டெல்லி கேப்பிடல்ஸ் – சிறு வரலாறு

ஆர்சிபி கப் அடிக்கவில்லை என்பார், பஞ்சாப் கப் அடிக்கவில்லை என்பார், டெல்லியின் வரலாறு அறியாதோர். டெல்லி டேர்டெவில்ஸாக இருந்து டெல்லி கேப்பிட்டல்ஸ் ஆனவர்கள் இதுவரை இறுதிப்போட்டிக்குக்கூடச் சென்றதில்லை என்பதுதான் துயர்மிகு செய்தி.

2008, 2009 ஐபிஎல் போட்டிகளில் செம ஃபைனலில் இடம்பிடித்தவர்கள், அதன்பிறகு 2012-ல்தான் ப்ளே ஆஃபுக்குள் நுழைந்தார்கள். அந்த சீஸனில் லீக் போட்டிகளின் முடிவில் டெல்லிதான் டேபிள் டாப்பர்ஸ். ஆனால், ப்ளே ஆஃபில் தோல்வியடைந்தவர்கள் அதன்பிறகு 6 ஆண்டுகள் ஆர்சிபி, பஞ்சாப் அணிகளுடன் கடைசி இடத்துக்குப் போட்டிபோட்டுக் கொண்டிருந்தார்கள்.

Sehwag

கடந்த ஆண்டுதான் டெல்லி டேர்டெவில்ஸ் டெல்லி கேப்பிடல்ஸாக உருமாறி, ஷ்ரேயாஸ் ஐயர் கேப்டன்சியில், ரிக்கி பான்ட்டிங் பயிற்சியில், செளரவ் கங்குலி அட்வைஸில் எனப்பல புது விஷயங்கள் உள்ளே சேர்ந்து ப்ளே ஆஃபுக்குள் நுழைந்தது. 2008-ல் வீரேந்திர ஷேவாக் தலைமையில் விளையாடிய டெல்லி அணிக்கு சாம்பியனாகும் அத்தனை அம்சங்களும் அழகாகப் பொருந்தியிருந்தன. ஷேவாக் – கம்பீர் ஓப்பனிங், மெக்ராத் – முகமது ஆசிஃப் பெளலிங், டிவில்லியர்ஸ், டேனியல் வெட்டோரி, தில்ஷான் எனப்பல பவர் ப்ளேயர்கள் இருந்தார்கள். ஆனால், செமி ஃபைனலோடு பயணம் முடிந்தது. 12 சீசன்களாக பல பவர் ப்ளேயர்களோடு ஆடிய டெல்லியால் ஏன் இதுவரை இறுதிப்போட்டிக்குக் கூடத் தகுதிபெறமுடியவில்லை. பிரச்னை என்ன?!

பிரச்னை ஒன்று – கேப்டன்களின் நிலையாமை!

கோப்பையை வெல்லமுடியாமல் திணறும் பல அணிகளுக்கும் இருக்கும் அதே பிரச்னைதான் டெல்லிக்கும். 12 சீசன்களில் இதுவரை 12 கேப்டன்களைப் பார்த்துவிட்டது டெல்லி. ஷேவாக், ஜெயவர்தனே, ஜாகிர் கான், கெவின் பீட்டர்சன், டூமினி, கெளதம் கம்பீர் எனப்பலரும் மாறி மாறி ஆட்சி நடத்தியிருக்கிறார்கள். ஒவ்வொரு கேப்டனும் ஒரு டீமை செட் செய்வார். அடுத்து அவர் மாறியவுடன் அணியும் மாறும், என செட்டாகாத டீமே தொடர் தோல்விகளுக்குக் காரணம். டெல்லிக்கென ஒரு கோர் டீம் இதுவரை உருவாகவேயில்லை. இதுவரை 170 போட்டிகளில் விளையாடியுள்ள டெல்லி அணிக்கு, ஷேவாக்தான் அதிகபட்சமாக 86 போட்டிகளில் விளையாடியிருக்கிறார். 120, 150 போட்டிகள் எல்லாம் ஒரு வீரர், ஒரே அணிக்காக விளையாடியிருக்கும் ஐபிஎல்-ல் ஷேவாக்கின் சாதனையே டெல்லிக்கு அதிகபட்சம்.

Ricky ponting, Shreyas Iyer

பிரச்னை இரண்டு – ஓவர் இளமை!

டெல்லி அணி இளைஞர்களுக்கு அதிகம் வாய்ப்பளிக்கக் கூடிய அணி. அதுதான் அவர்களின் பலமும், பலவீனமும். நெருக்கடியான சூழல்களின்போது அதை எதிர்கொள்ளக்கூடிய பக்குவமான சீனியர்கள் இல்லாததால் வெற்றிபெறவேண்டிய பல போட்டிகளை தோல்வியில் முடித்திருக்கிறார்கள். அணிக்குள் ஒரு சீனியர் முக்கியம் என்பதை மிகவும் தாமதமாகவே உணர்ந்திருக்கிறது டெல்லி.

பிரச்னை மூன்று – தடுமாறும் பெளலிங் யூனிட்!

தென்னாப்பிரிக்காவின் ககிஸோ ரபாடா மட்டுமே அணிக்குள் இருக்கும் முக்கிய பெளலர். வீக்காக இருந்த ஸ்பின்னிங் டிபார்ட்மென்ட்டை சரிசெய்ய இந்த ஆண்டுதான் பஞ்சாபில் இருந்து அஷ்வினை தூக்கிவந்திருக்கிறார்கள். பெயர் சொல்லக்கூடிய பெளலர்கள் பலர் அணிக்குள் இருந்தும் அவர்கள் யாரும் அணிக்காக பர்ஃபார்ம் செய்யாதது டெல்லியின் வெற்றிகளைப் பறித்தது.

Kagiso Rabada

2020 சவால்கள் – பேட்டிங் ஆர்டர்!

உள்நாட்டு பேட்ஸ்மேன்களையே அதிகம் நம்பியிருக்கும் ‘மேக் இன் இந்தியா’ அணி டெல்லி என்பதில் பெருமை கொள்ளலாம். ஷிகர் தவான், ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பன்ட், பிரித்வி ஷா என இந்தியாவின் ஸ்டார்கள் அத்தனைபேரும் டெல்லியில்தான் இருக்கிறார்கள். இதுபோதாதென இப்போது அஜிங்கியா ரஹானேவையும் அணிக்குள் சேர்த்திருக்கிறார்கள். டாப் 6 பேட்ஸ்மேன்களைக்கூட முழுமையாக இந்திய வீரர்களைக்கொண்டே நிரப்பக்கூடிய வல்லமை கொண்ட அணியாக இருக்கிறது டெல்லி.

இது இல்லாமல் கரீபியனின் ஷிம்ரான் ஹெட்மெயர், ஆஸ்திரேலிய வீரர்கள் மார்கஸ் ஸ்டாய்னிஸ், டேனியல் சாம்ஸ் ஆகியோர் இருக்கிறார்கள். ஜேசன் ராய் டெல்லி அணியில்தான் இருக்கிறார். ஆனால், அவர் இந்த ஆண்டு ஐபிஎல்-ல் கலந்துகொள்வதில்லை என்று முடிவெடுத்துவிட்டதால் கடந்த ஆண்டு பிக்பேஷ் லீகில் கலக்கிய 22 வயதேயான ஆல் ரவுண்டர் டேனியல் சாம்ஸுக்கு ரிக்கி பான்ட்டிங் வாய்ப்பளிப்பார் என எதிர்பார்க்கலாம்.

விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேனாக ரிஷப் பன்ட் இருக்க, ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் கேரியும் அணியில் இருக்கிறார். இதனால் பேட்டிங் லைன் அப்புக்கு டெல்லியிடம் ஏகப்பட்ட சாய்சஸ் இருக்கிறது. இதை எப்படி சரியாக அமைக்கப்போகிறது என்பதில்தான் பான்ட்டிங் – ஷ்ரேயாஸ் ஐயரின் சாமர்த்தியங்கள் இருக்கின்றன.

Shreyas Iyer

ஸ்பின் டு வின் :

அமித் மிஷ்ராவோடு இந்தமுறை அஷ்வினும் சேர்ந்திருக்கிறார். ஒருவர் லெக் ஸ்பின்னர், மற்றொருவர் ஆஃப் ஸ்பின்னர். இதில் சமீபமாக அஷ்வின் லெக் ஸ்பின்னும் முயல்வதால் அவரை எந்தவகை ஸ்பின்னர் என அடையாளப்படுத்துவது கொஞ்சம் சிரமம்தான். இந்தியாவின் முன்னணி ஸ்பின்னரான அஷ்வினின் சமீபத்திய பர்ஃபாமென்ஸும் பெரிதாக எடுபடவில்லை. ஆனால், ஸ்பின் எடுபடக்கூடிய அரபு பிட்ச்களில் போட்டிகள் நடப்பதால் அஷ்வின் இந்த ஆண்டு அதிசயங்களை நிகழ்த்துவார் என எதிர்பார்க்கலாம். இவர்களுக்கு பக்கபலமாக அக்சர் பட்டேலும், நேபாளத்தின் சந்தீப் லாமிசேனும் இருக்கிறார்கள். சந்தீப் தொடர்ந்து எல்லா நாட்டு டி20 லீக் போட்டிகளிலும் விளையாடிவருவதால் அவருக்கு ப்ளேயிங் லெவனில் இடம் கிடைக்கும் என எதிர்பார்க்கலாம்.

டெத் ஓவர்ஸ்!

ரபாடாவைத்தவிர டெத் ஓவர்களில் சிறப்பாகப் பந்துவீசக்கூடிய வேகப்பந்து வீச்சாளர்கள் அணியில் இல்லை. இஷாந்த் ஷர்மா, கிறிஸ் வோக்ஸ், மார்க்கஸ் ஸ்டாய்னிஸ் ஆகியோரைக் கொண்டுதான் டெல்லி சமாளிக்க வேண்டும். டெத் ஒவர்களில் வேகப்பந்து வீச்சாளர்கள் கைகொடுத்தால்தான் டெல்லி அணியால் ரன்கள் அதிகம் போகாமல் தடுக்கமுடியும். அதனால் டெத் ஓவர்களிலும் ஸ்பின்னர்களைக் கொண்டே டெல்லி சமாளிக்குமா என்பதைப் பொருத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

Amit Misra, Ashwin, Axar Patel

டெல்லி பேட்டிங்கில் பட்டையைக் கிளப்பிவிடும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், அவர்களின் பெளலிங் யூனிட் எப்படி பர்ஃபார்ம் செய்யப்போகிறது என்பதுதான் ட்விஸ்ட். பான்ட்டிங்- ஷ்ரேயாஸ் கூட்டணி இந்தப் பிரச்னையை எப்படிக் கையாள்கிறது என்பதில்தான் டெல்லியின் எதிர்காலம் இருக்கிறது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.