நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெறுவதையொட்டி மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் நான்கு முக்கிய அவசரச் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். குறிப்பாக வட மாநிலங்களில் இந்தப் போராட்டங்கள் சூடு பிடித்துள்ளன. மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள், வட்டாட்சியர் அலுவலகங்கள் போன்றவற்றில் புது டெல்லி, அரியானா, பஞ்சாப் எனப் பல மாநிலங்களில் போராட்டங்கள் சூடு பிடித்துள்ளன.

விவசாயிகள் போராட்டம்

இதுதொடர்பாக அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு(AIKSCC) செயலாளர் அவிக் சகாவிடாம் பேசியபோது, “மின்சார திருத்த மசோதா 2020, அத்தியாவசிய பொருள்கள் அவசரச்சட்ட மசோதா 2020, வேளாண் விளைபொருள்கள் வணிக ஊக்குவிப்பு அவசர சட்ட மசோதா 2020, விவசாய ஒப்பந்த சட்ட மசோதா 2020 ஆகிய அவசரச் சட்ட மசோதாக்களை மத்திய அரசு கைவிடுமாறு பஞ்சாப், ஹரியானா, உத்திரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த சுமார் 5,000 விவசாயிகள் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். புதுடெல்லி, ஹரியானா, பஞ்சாப் என்று வெவ்வேறு இடங்களில் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்து வருகிறோம். ஹரியானாவில் நடைபெற்ற போராட்டத்தை ஒடுக்கும் விதமாக பி.ஜே.பி ஆளும் ஹரியானா மாநில அரசு விவசாயிகளை சிறைப்பிடிக்கிறது, தாக்குதல் நடத்துகிறது. ஆனாலும் எங்கள் போராட்டம் ஓயாது. இன்று பஞ்சாபிலும் எங்கள் போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறோம். தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் கூட்டத் தொடரில் விவசாயிகளுக்கு எதிரான இந்தச் சட்ட மசோதாக்களை நிறைவேற்றக் கூடாது. இது தொடர்பாக எம்.பிக்களுக்கு கடிதம் எழுதியுள்ளோம். விவசாயிகளுக்கு எதிரான எந்தச் சட்டத்தையும் கொண்டு வரக் கூடாது என்பதே எங்கள் கோரிக்கை” என்றார்.

அகில இந்திய விவசாயிகள் சங்க போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவின்(AIKSCC) மாநில ஒருங்கிணைப்பாளர் கே.பாலகிருஷ்ணனிடம் பேசியபோது, “கொரானா ஊரடங்கு காரணமாக இந்திய விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், ஏழை மக்கள் வாழ்வாதாரம் இழந்து நெருக்கடியில் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் இந்த அவசரச் சட்ட மசோதாக்களைப் பிறப்பித்தது மத்திய அரசு. இந்தச் சட்டங்கள் சிறு, குறு, நடுத்தர விவசாயிகளை ஒழித்து பெருமுதலாளிகளுக்கும் கார்ப்பரேட்டுகளுக்கும் ஆதரவாக பி.ஜே.பி அரசாங்கம் செயல்படுகிறது என்பதையே காட்டுகிறது. இதை எதிர்த்து கடந்த ஆகஸ்ட் 9-ம் தேதி ‘வெள்ளையனே வெளியேறு’ என்ற போராட்டத்தை நினைவுகூறும் வகையில் ‘கார்ப்பரேட்டுகளே விவசாயத்தை விட்டு வெளியேறு’ என்று போராட்டத்தை முன்னெடுத்தோம். அதைத் தொடர்ந்து இப்போது இந்தப் போராட்டங்களை ஆரம்பித்துள்ளோம். தமிழ்நாடு தவிர பெரும்பான்மையான மாநில விவசாயிகள் இந்தப் போராட்டங்களில் கலந்துகொண்டு வருகிறார்கள்.

விவசாயம்

இந்த முக்கிய அவசரச் சட்ட மசோதாக்களைப் பற்றி குறிப்பிடுவேண்டுமென்றால்,

மின்சார திருத்த மசோதா 2020: தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலங்கானா, பஞ்சாப் ஆகிய ஐந்து மாநிலங்களில் இலவச மின்சாரம் நடைமுறையில் இருக்கிறது. புதிய சட்டத்தால் விவசாயத்துக்குப் பயன்படுத்தும் மின்சாரத்துக்குக் கட்டணம் செலுத்த வேண்டி வரும். மின்சாரத்தை உற்பத்தி செய்யும் நிறுவனங்களே விலையை நிர்ணயிக்கும். அதனால், விவசாயம் மற்றும் வீடுகளில் பயன்படுத்தும் மின்சாரத்துக்கு அதிகத் தொகை செலுத்த நேரிடும். இந்த இலவச மின்சாரத்தைப் பிடுங்குவதால் விவசாயிகள் மாதம் ரூ.2,000 முதல் 5,000 வரை கட்ட வேண்டிய சூழ்நிலை ஏற்படும். ஏற்கெனவே அதலபாதாளத்தில் இருக்கும் விவசாயம், மேலும் நலிவடையும்.

அத்தியாவசிய பொருள்கள் திருத்தச் சட்ட மசோதா: அரிசி, கோதுமை, வெங்காயம், உருளைக்கிழங்கு, பருப்பு, பயறு வகைகள், எண்ணை வித்துக்கள் ஆகிய விளைபொருட்களை அத்தியாவசியப் பொருள்கள் பட்டியலிலிருந்து நீக்க இந்தச் சட்ட மசோதா பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு உணவுப் பொருள்களைப் பதுக்கி வைக்க முடியாது. ஆனால் இப்போது பதுக்கி வைத்து விலைவாசியை ஏற்றி கார்ப்பரேட்டுகளும் பெரும் வியாபாரிகளும் கொள்ளை லாபம் அடிக்க முடியும். இதனால் விலைவாசி உயரும். விவசாயிகள், நுகர்வோர் என அனைத்துத் தரப்பு மக்களும் பாதிக்கப்படுவார்கள்.

வேளாண் விளைபொருள் விற்கும் சட்ட மசோதா: இச்சட்டத்தின் மூலம் மாநில மற்றும் மாவட்ட கூட்டுறவு ஒழுங்குமுறை விற்பனை சங்கங்கள் கார்ப்பரேட்டுகளின் கைகளுக்குச் சென்றுவிடும். அரசாங்க ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் செல்லாக்காசு ஆகிவிடும். அரசாங்கமும் கார்ப்பரேட் வியாபாரிகளும் ஒன்றுசேர்ந்து விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை (சி2+50%) கொடுக்க முடியாத நிலை ஏற்படும். இதனால் விவசாயிகள் விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டு விவசாயிகள் நிலத்தை விற்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படுவார்கள்.

ஒப்பந்த விவசாயச் சட்ட மசோதா: கார்ப்பரேட் முதலாளிகளுக்கும், விவசாயிகளுக்கும் இடையே என்ன பயிர் விளைவிக்க வேண்டும் என்ற ஒப்பந்தம் உருவாக்கப்படும். மக்களுக்குத் தேவையான உணவுப் பயிர்களைச் சாகுபடி செய்வது கைவிடப்பட்டு கொள்ளை லாபம் மட்டுமே தரக்கூடிய பயிர்களைப் பயிரிட வேண்டும் என்ற நிலை ஏற்படும். இதோடு ரசாயன உரங்களையும் பூச்சிக்கொல்லிகளையும் பயன்படுத்த நிர்ப்பந்திக்கப்படும். இதனால் மண் மலடாகும். இயற்கை விவசாயம் அழியும். மழை வெள்ளம், வறட்சியால் சேதம் ஏற்பட்டால் கார்ப்பரேட்டுகள் விவசாயிகளின் நட்டத்துக்கு உதவி செய்ய முடியாத நிலை ஏற்படும். பிறகு விவசாயிகள் கடனாளியாகி நிலத்தை கார்ப்பரேட்களிடம் இழக்க நேரிடும்.

விவசாயம்

மேலே சொல்லிய நான்கு சட்டங்களும் விவசாயிகளின் விவசாயத்தை ஒழிப்பதில்தான் போய் முடியும். தமிழ்நாட்டில் 50 சதவிகித விவசாயிகள் 20 சதவிகிதமாகக் குறைந்து 30 சதவிகித விவசாயிகள் நிலத்தை இழந்து ஏதிலிகளாக, நகரத்தை நோக்கி புலம்பெயரும் பரிதாப நிலைக்கு தள்ளும்.

இந்த கொரோனா காலத்தில் விவசாயிகளுக்கு உடனடியாக பணம் கையில் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று பெரிய பெரிய பொருளாதார நிபுணர்களே வலியுறுத்தி வருகிறார்கள். மாதம் ரூ.6,000 இந்த கொரோனா முடியும் வரை வழங்க வேண்டும். அப்போதுதான் மக்களின் வாங்கும் சக்தி அதிகரிக்கும். விவசாய விளைபொருள்களும் அதிகம் விற்னையாகும். விவசாயிகளிடமும் பணம் புரளும்” என்றார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.