குமரி மாவட்டத்தில் கின்னஸ் சாதனைக்காக 80 கிலோ எடை மற்றும் 13 மீட்டர் நீளம் கொண்ட ராட்சத பிரஷை பயன்படுத்தி ஓவியம் வரைந்த இளைஞருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
குமரி மாவட்டம் மாஞ்சாலுமூடு பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி ஸ்ரீராஜ் (29). சிறுவயது முதலே ஓவியம் வரைவதில் அதிக நாட்டம் கொண்டிருந்த இவருக்கு ஓவியத்தில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற எண்ணமும் இருந்து வந்தது. ஆனால் அவரது வறுமை அதற்கு இடம் கொடுக்கவில்லை. எனினும் விடாமுயற்சியை கைவிடாமல் தொடர்ந்து பல சாதனைகள் செய்து வருகிறார் ஸ்ரீராஜ்.
அதில் முதலாவதாக அவர் நடத்திய சாதனை 25 அடி உயரம் மற்றும் 20 அடி அகலமும் கொண்ட அப்துல்கலாம் ஓவியத்தை சார்க்கோட் பென்சில் மூலம் வரைந்து சாதனைபடைத்தார். அதனை தொடர்ந்து ஒன்றரை லட்சம் உடைந்த கண்ணாடி துண்டுகளை கொண்டு ராட்சத கிறிஸ்துமஸ் தாத்தா உருவத்தை உருவாக்கி வெற்றி கண்டார். இதனை தொடர்ந்து கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற வேண்டும் என்ற எண்ணம் மனதிற்குள் உதித்ததை தொடர்ந்து அதற்கான பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்தார்.
இந்த நிலையில் 13 மீட்டர் நீளம் கொண்ட ஆர்டிஸ்ட் பாயின்ட் பென்சில் கொண்டு சமூக சீர்திருத்தவாதி ஐயங்காளியின் ஓவியத்தை தீட்ட முடிவு செய்தார். முதலில் அதற்கான பொருட்களை சேகரித்து 80 கிலோ எடை மற்றும் 13 மீட்டர் நீளம் கொண்ட ராட்சத பிரஷை தயார் செய்தார். ஏற்கனவே இது போன்ற ஒரு சாதனை 11 மீட்டர் நீளம் கொண்ட பிரஷை பயன்படுத்தி தான் செய்யபட்டுள்ளது.
அந்த சாதனையை முறியடிக்கும் வகையில் ஸ்ரீராஜ் தான் உருவாக்கிய ராட்சத பிரஷை ஜே.ஷி.பி இயந்திரம் உதவியுடன் கண்ணுமாமூடு அரசு பள்ளி வளாகத்தில் வைத்து வரையத் துவங்கினார். இதனை தமிழக மற்றும் கேரள கின்னஸ் சாதனை குழு துறை அரசு அதிகாரிகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனத்தார் கண்காணித்தனர்.
இந்த ஓவியத்தை ஸ்ரீராஜ் ஜே.சி.பி இயந்திர உதவியுடன் 48 நிமிடங்களில் வரைந்து முடித்தார். தற்போது அவர் வரைந்த இந்த ஓவியம் கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற வேண்டி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இவரின் அசாத்திய திறமையை ஊர்மக்களும் நண்பர்களும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM