கரீபியன் ப்ரீமியர் லீகில் சாதாரணமாக படுமொக்கையாக முடிந்திருக்க வேண்டிய ஒரு ஆட்டம், செம சிறப்பான பௌலிங்கால் வரலாற்று சிறப்புமிக்க ஆட்டமாக முடிந்துள்ளது. டேரன் சமி தலைமையிலான லூசியா அணி, பார்படாஸ் ட்ரைடென்ட்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சிபிஎல் #CPL வரலாற்றிலேயே முதல்முறையாக வெற்றிகரமாக 92 ரன்களை டிஃபண்ட் செய்து சாதித்துள்ளது.

#CPL

முதலில் பேட் செய்த லூசியா அணியில் நஜிபுல்லா சத்ரனும், பவுச்சரும் மட்டும் ஏதோ கொஞ்சம் பேட்டை உபயோகப்படுத்தி இரட்டை இலக்கத்தில் ரன்கள் அடிக்க மற்ற அனைவருமே பேட்டுக்கு வலித்து விடுமோ எனப் பயந்து இரக்க குணத்துடன் ஆடி பெவிலியனுக்கும் பிட்ச்சுக்குமான போக்குவரத்தில் இருந்தனர். அதிலும் கேப்டன் சமி எல்லாம் ‘அட…ஏன்ப்பா நீங்க பௌலிங் போட்டு கேட்ச் பிடிச்சு கஷ்டபட்டுகிட்டு… நானா ரன் அவுட் ஆகிக்கிறேன் போங்க’ என்பது போல ரன் அவுட் ஆகி திரும்பிப் பார்க்காமல் போய்க்கொண்டேயிருந்தார். கடந்த போட்டியில் பொல்லார்டிடம் அடிபட்டு நொந்து நூடுல்ஸான ஹேடன் வால்ஷ் இந்த முறை 4 ஓவர்கள் வீசி 19 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை எடுத்து மிரட்டினார்.

இப்போது இருக்கும் டி20 யுகத்தில் 93 எல்லாம் ஒரு டார்கெட்டே இல்லை. பவர்ப்ளேயிலேயே அடித்து முடித்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. எனவே இந்த போட்டி எப்படியும் பாப்பம்பட்டி vs ஏப்பம்பட்டி மேட்ச் மாதிரிதான் இருக்கும் என நினைத்தவர்களுக்கு இரண்டாம் பாதியில் காத்திருந்தது ட்விஸ்ட். சென்னை 28 பார்ட் 2 வில் வைபவ் டீமிடம் வேண்டுமென்றே தோற்கும் ஷார்க்ஸ் டீமை ஜெராக்ஸ் எடுத்தது போல அப்படியே ஆடியது பார்படாஸ் ட்ரைடென்ட்ஸ். இத்தனைக்கும் சார்லஸ், ஹோப், மேயர் என டாப்கிளாஸ் டாப் ஆர்டர், முரட்டடி ஆல்ரவுண்டர்கள் என ஸ்டார்களை உள்ளடக்கிய அணி ட்ரைடென்ட்ஸ்.

#CPL

93 ரன் டார்கெட்டுக்கு ஏற்றவாறு பர்படாஸின் ஓப்பனர்கள் நல்ல தொடக்கமே கொடுத்தனர். முதல் 6 ஓவர்களில் 31-1. அடுத்த 14 ஓவர்களில் 62 ரன் மட்டுமே அடிக்க வேண்டும். தேவைப்பட்ட ரன்ரேட் 5 க்கும் குறைவு. அப்படியிருந்தும் கோட்டைவிட்டது பார்படாஸ். டெஸ்ட் மேட்ச்களின் நியுபாலை பழசாக்குவதற்கு ஓப்பனர்கள் ஆடும் இன்னிங்ஸைப் போல ஆடிக்கொண்டிருந்தனர். 9-வது ஓவருக்கு மேல் ஒரு பவுண்ட்ரி கூட அடிக்கவில்லை. என்ன கொடுமை என்றால் இந்த ஓவர்களில் ஆடியது எல்லாம் அதிரடிக்கு பெயர் போன ஆல்ரவுண்டர்கள். ஹோல்டர், ரஷித்கான், கோரி ஆண்டர்சன், நர்ஸ், யங் என எல்லாரும் மிக எளிதாக விக்கெட்டைப் பறிகொடுத்தனர்.

கோரி ஆண்டர்சன் ஆதி காலத்தில் அடித்த ஒரு சதத்தை வைத்துக்கொண்டு இன்னும் உலகம் முழுக்க சுற்றிக்கொண்டிருக்கிறார். ஸ்பின்னை எதிர்கொள்ள அப்படி தடுமாறுகிறார்.

டேரன் சமியின் கேப்டன்சியின் ராஜதந்திரங்கள்தான் லூசியா அணி 92 ரன்களை டிஃபெண்ட் செய்யக்காரணம். விண்டீஸ் பிட்ச்களில் 130-140 வரையிலான ஸ்கோர் என்றால் டிஃபண்ட் செய்யலாம் என்றிருந்ததை ஒரே மேட்ச்சில் எப்படிப்பட்ட லோ ஸ்கோராக இருந்தாலும் டிஃபண்ட் செய்யலாம் என மாற்றிவிட்டார். விக்கெட் கீப்பரையும் சமியையும் தவிர அணியில் எல்லாருமே பந்துவீசுகிறார்கள். ஆனால், அவர்களை எப்படி பயன்படுத்துகிறார் என்பதில்தான் சமியின் கேப்டன்சி பக்குவம் இருக்கிறது. 92 ரன்களை டிஃபென்ஸ் செய்யும் நேரத்தில் தனது கரியரில் இதுவரை பந்துவீசியிருக்கவே செய்யாத ஜாவெல் கிளென்னை பந்துவீச வைத்து ரிஸ்க் எடுத்தார். 39 ரன்களில் ஆடிக்கொண்டிருந்த ஜான்சன் சார்லஸின் விக்கெட்டை எடுத்தது கிளென்தான். 2 விக்கெட்களை வீழ்த்தியதோடு மட்டுமில்லாமல் 19-வது ஓவரில் வெறும் 4 ரன்களை மட்டுமே கொடுத்து வெற்றி பெற உறுதுணையாக இருந்தார் கிளென். விக்கெட்டுகள் இருந்தும் 20 ஓவர்களில் 89 ரன்கள் மட்டுமே அடித்து தோல்வியடைந்தது பார்படாஸ்.

#CPL

ஸ்பின் பெளலிங்தான் வொர்க் அவுட் ஆகிறது என்றதும் 10வது ஓவரில் இருந்து வெறும் ஸ்பின்னர்ஸை மட்டுமே பயன்படுத்தினார் சமி. சேஸ், நபி, கிளென், ஜாகிர் கான் என நான்கு ஸ்பின்னர்களைத் தொடர்ந்து ரொட்டேட் செய்துகொண்டேயிருந்தார். கிளென் மேல் சமி நம்பிக்கை வைத்தது ரிஸ்க் போலத்தெரிந்தாலும் அதற்கான காரணத்தை போஸ்ட் மேட்ச் ப்ரசன்டேஷனில் சொன்னார் சமி. ”நெட் பிராக்டீஸில் சிறப்பாகப் பந்துவீசினார் கிளென். இந்தப் போட்டியில் வெற்றிபெற இன்னொரு ஸ்பின்னர் வேண்டும் என்கிற நிலையில்தான் திடீரென கிளென்னின் நெட் பிராக்டீஸ் பெளலிங் ஞாபகம் வந்து அவரிடம் பந்தைக் கொடுத்தேன். 2 விக்கெட்டுகள் எடுத்துவிட்டார்” என்றார் சமி.

Also Read: 500 விக்கெட் எடுத்த பிராவோ… தொடும் தூரத்தில் நரேன்… விரட்டி வரும் ரஷித்கான்! #T20SuperStars

கடைசி இரண்டு நாள்களில் மட்டும் தங்கள் கைகளில் இருந்த மேட்ச்சை அப்படியே தூக்கி எதிரணியருக்கு தாரை வார்த்துள்ளது ஹோல்டரின் பார்படாஸ். பொல்லார்ட் ஒரு பக்கம் பேட்டிங்கில் வைத்து வெளுத்தெடுக்க…நேற்றைய ஆட்டத்தில் டேரன் சமி தனது சகாக்கள் மூலம் 92 ரன்னை டிஃபன்ட் செய்து பௌலிங் மூலம் சுளுக்கெடுத்திருக்கிறார்.

எது எப்படியோ பார்படாஸின் சொதப்பலால் ரசிகர்களுக்கு கடந்த 2 நாள்களாக நல்ல கிரிக்கெட்டெயின்மென்ட்!

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.