யானைகளை பாதுகாக்கும் நோக்கத்துடன் 2012 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு 12 ஆம் தேதி உலக யானைகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
ஆப்பிரிக்க, ஆசிய காடுகளில் நிலவும் பாதுகாப்பற்ற சூழலால் யானைகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. யானைகளை பாதுகாக்கும் வகையில் வனங்களில் இயற்கை வளம் குன்றாமல் பாதுகாப்பது அவசியம் என பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு நிறுவனம் (ஐயுசிஎன்) எச்சரிக்கை விடுத்துள்ளது.
உலத்தில் இதுவரை 22 வகை யானை இனங்கள் அழிந்து விட்டது. ஆதிகாலத்தில் 24 வகை யானைகள் வாழ்ந்துள்ளன. ஆனால் தற்போது, உலகில் ஆப்பிரிக்க, ஆசிய வகை யானைகள் மட்டுமே உள்ளன. ஆசிய யானைகள் சுமார் 55,000 வரை இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒரு யானை கூட்டம், ஆண்டுக்கு, 350 – 500 ச.கி.மீ., வரை உணவுக்காக பயணிக்கும். இந்தியாவில் உள்ள 101 யானை வழித்தடங்கள் கட்டுமானம், விவசாய நிலங்களால் குறுகி விட்டன. கடந்த ஆறு ஆண்டுகளில், மின்சாரம், ரயில், விஷம், வேட்டையால் மட்டும் நாட்டில் 2,330 யானைகள் இறந்துள்ளன என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 2019ம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில், தோராயமாக 31 ஆயிரத்து, 368 யானைகள் இந்தியாவில் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் சுமார் 3,500 யானைகளும் உள்ளதாக கடந்த ஆண்டு கணக்கெடுப்பு தெரிவிக்கின்றன, தற்போது யானைகள், அரியவகை விலங்குகள் பட்டியலில் உள்ளன. உலகின் பல்லுயிர்ச்சூழல் மேம்பட, அவற்றைப் பாதுகாக்க வேண்டிய கடமை நமக்கு உள்ளது.
தரைவாழ் விலங்குகளில் யானைதான் மிகப்பெரியது. தும்பிக்கை வடிவில் மூக்கை பெற்றுள்ள ஒரே விலங்கும் யானைதான். யானைகள் அதிகளவு தண்ணீர், உணவை உட்கொள்ளும். ஆகவே, தண்ணீர், உணவு அதிகமுள்ள காடுகளில் மட்டுமே யானைகள் வசிக்கும். யானைகளுக்கு காடு நல்ல வாழ்விடமாக அமைந்தால், அந்தக் காடு ஆரோக்கியமானதாக காணப்படுகிறது. ஒரு யானை சராசரியாக 60 முதல் 70 ஆண்டுகள் வரை உயிர் வாழ்கிறது. யானைக்கு தினசரி 200 முதல் 250 கிலோ உணவு தேவைப்படுகிறது, ஒரு நாளைக்கு 150 முதல் 220 லிட்டர் தண்ணீர் வரை குடிக்கிறது. காட்டில் யானைகள் விதைகளை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு பரப்புகிறது. காட்டில் பல்லுயிரினப் பெருக்கத்துக்கும் யானை வழிவகுக்கிறது.
காடுகளில் பார்த்தீனியம், உன்னிச்செடி உள்ளிட்ட பலனற்ற தாவரங்கள் அதிகரித்துள்ளதால், யானைகளுக்கு தேவையான புற்கள், பசுமை உணவுகள் கிடைப்பது அரிதாகிவிட்டது. பருவமழை பொய்த்தல், காலநிலை மாற்றம், வறட்சி போன்றவற்றால் உணவு மற்றும் தண்ணீர் தேடி மலையோர குடியிருப்புகளை நோக்கி யானைகள் கூட்டமாக வருகின்றன. இதனால் மலையோர கிராமங்களுக்கு புகும் யானைகள் பழக்கமில்லாத ஆழமான பள்ளங்களில் விழுவது, ரயில் தண்ட வாளங்களை கடப்பது, மின்வேலியில் சிக்குவது போன்றவற்றால் அதிக அளவில் உயிரிழப்பு ஏற்படுகின்றன.
யானைகளின் வாழ்விடங்களில் ஏற்படும் நாகரிக வளர்ச்சிப் பணிகள், காடுகளில் வெட்டப்படும் மரங்கள், அதிகரிக்கும் குவாரிகள், வழிப்பாதைகள் ஆக்கிரமிப்பு மற்றும் தந்தத்துக்காக யானைகள் வேட்டையாடப்படுதல் ஆகியவை யானைகள் அழிவுக்கு முக்கிய காரணங்களாகக் கருதப்படுகின்றன. இதை தடுக்கப்பட வேண்டும் என்பதே இத்தினத்தின் நோக்கம். எனவே, அனைத்து காலங்களிலும் வனங்களில் யானைக்கு தேவையான உணவு கிடைக்கும் வகையில் பழ மரங்களை உருவாக்க வேண்டும். வனத்துக்குள் ஆழ் குழாய்களும் அருகிலேயே தண்ணீர் தொட்டிகளும் ஏற்படுத்தி, வன விலங்குகளுக்கான தண்ணீர் தேவையைப் போக்க வேண்டும். வனங்களில், மனித இடையூறை கட்டுப்படுத்த வேண்டும். இதன் மூலம் யானைகளை அழிவிலிருந்து தடுக்கலாம்