‘’ரஷ்யாவில் கண்டறியப்பட்டதாக கூறப்பட்டுள்ள வேக்சின் phase II, phase III முடிந்து சந்தைக்கு வந்தால் மட்டுமே அதை அறிவியல் உலகம் ஏற்கும்’’ என்று தெரிவித்துள்ளார் அரசு மருத்துவர் ஃபரூக் அப்துல்லா.
உலகிலேயே முதல்முறையாக கொரோனா வைரஸ் தடுப்பு மருந்துக்கு அனுமதி வழங்கியுள்ளது ரஷ்யா நாட்டு அரசு. மனிதர்கள் மீது இந்த தடுப்பு மருந்தை பரிசோதித்து இரண்டு மாதங்களுக்கு உள்ளாகவே இந்த தடுப்பு மருந்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதுவே கொரோனாவுக்கான உலகின் முதல் தடுப்பு மருந்து என்றும், தேவையான அனைத்து பரிசோதனைகளும் முடிந்துவிட்டதாக ரஷ்யாவின் அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அரசு பொதுநல மருத்துவர் ஃபரூக் அப்துல்லா கூறும்போது, ‘’ரஷ்யா இந்த விசயத்தில் தேவையற்ற வேகத்தை காட்டுகிறதோ என்ற எண்ணம் எழாமல் இல்லை. காரணம் ஜூன் மாத இறுதியில் மனிதர்களிடையே நடத்தும் முதற்கட்ட பரிசோதனைகளான Phase I trial ஐ ஆரம்பித்தது ரஷ்யா
ஆரோக்கியமான உடல் நிலையில் இருக்கும் இருபதுக்கும் குறைவானவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு அவர்களுக்கு அலர்ஜி / தடுப்பூசியால் மரணம் போன்றவை நேருகிறதா? இந்த தடுப்பூசி பாதுகாப்பானது தானா? என்று சோதிக்கப்பட்டது
ஜூலை 15-ஆம் தேதி நிறைவுற்ற அந்த phase I trial முடிவில் தடுப்பூசி பாதுகாப்பானது என்ற முடிவு எட்டப்பட்டது. ஜூலை 13-இல் இருந்து Phase II trial தொடங்கியிருக்கிறது.
இன்னும் கொஞ்சம் அதிகமான மக்களுக்கு தடுப்பூசியை கொடுத்து உண்மையாக நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டுகிறதா? என்று பார்க்க வேண்டும். அதற்கு குறைந்த பட்சம் ஒரு மாதம் முதல் மூன்று மாதம் வரை காத்திருந்து பரிசோதனை செய்ய வேண்டும்.
அடுத்து Phase III trial இருக்கிறது. அதில் சில ஆயிரம் பேருக்கு தடுப்பூசியை கொடுத்து எதிர்ப்பு சக்தி தோன்றி நோயை தடுக்கிறதா? என்று சோதிக்க வேண்டும். இதற்கு சில மாதங்கள் தேவைப்படும்
உலக அளவில் இந்த மூன்றாம் கட்ட நிலையில் மூன்றே வேக்சின்கள் மட்டுமே உள்ளன. ரஷ்யா phase 1 trial மட்டுமே முடித்து விட்டு தடுப்பூசி கண்டுபிடித்து விட்டதாகக் கூறுவது, ஒரு பெண் சிறுநீர் கர்ப்ப பரிசோதனை அட்டையில் இரண்டு கோடுகளை பார்த்து விட்டு உடனே குழந்தை பிறந்து விட்டது என்று வெளியே கூறுவதற்கு ஒப்பானதாகும்
பரிசோதனையில் இரண்டு கோடுகள் வந்தால் கர்ப்பமாக இருக்கலாம். அதற்குப்பிறகு ஸ்கேன் செய்ய வேண்டும். பத்து மாதம் சுமந்து பிறகு தான் குழந்தையை ஈன்றெடுக்க முடியும். அது போலத்தான் ஒரு தடுப்பூசி கண்டுபிடிப்பும் கட்டாயம் அதற்குரிய கால அளவை கண்டிப்பாக அது கேட்கும்.
யாராலும் ஓரளவுக்கு மேல் விரைவு காட்ட முடியாது. எனவே ரஷ்யாவில் கண்டறியப்பட்டதாக கூறப்பட்டுள்ள வேக்சின் phase II, phase III முடிந்து சந்தைக்கு வந்தால் மட்டுமே அதை அறிவியல் உலகம் ஏற்கும். அதுவரை அது கருவறையில் வளரும் சிசுவுக்கு மட்டுமே சமம். ஒருபோதும் அது பிறந்த குழந்தை ஆகாது’’ என்று தெரிவித்துள்ளார்.