நாகை அருகே விடுதி ஊழியர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டார்.
நாகப்பட்டிணம் மாவட்டம் வேளாங்கண்ணியில் பல விடுதிகள் உள்ளன. இந்த விடுதிகளில் வெளிமாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களைச் சேர்ந்த நபர்கள் பணிபுரிந்து வருகின்றனர். கொரோனா ஊரடங்கு காரணமாக விடுதிகள் அனைத்தும் மூடப்பட்டதால் ஊழியர்கள் தங்களது சொந்த ஊருக்கு திரும்பியுள்ள நிலையில் குறைவான ஊழியர்கள் அந்தந்த விடுதிகளில் தங்கி லாட்ஜ் பராமரிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் வேளாங்கண்ணி மாதாகுளம் அருகே செயல்படும் தனியாருக்குச் சொந்தமான ஜான்சன் பார்க் என்ற தனியார் விடுதியில் வெளி ஊரை சேர்ந்த நபர்கள் பணி புரிந்து வருகின்றனர். இந்த நிலையில், அந்த விடுதியில் வேலை செய்துவந்த கேரளா மாநிலம் கொல்லம் மாவட்டத்தை சேர்ந்த சேர்ந்த முகேஷ் என்பவர், சேலத்தைச் சேர்ந்த சதீஷ் என்பவரை தன்னுடன் வேலைக்கு சேர்த்துள்ளார்.
வேலைபார்த்து வந்த சதீஷ் தொடர்ந்து முகேஷிடம் குடித்துவிட்டு தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று மாலை விடுதியில் இருந்த இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் வாய்த்தகராறு கைகலப்பாக மாறவே, முகேஷ் தான் வைத்திருந்த கத்தியால் சதீஷின் இடது பக்க மார்பு, இடது பக்க விலா மற்றும் இடது முன்கை ஆகிய இடங்களில் கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார். இரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த சதீஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதனிடையே சண்டையை சமாதானம் செய்து தடுக்க முயன்ற வேளாங்கண்ணி அதிமுக நகர செயலாளர் சாம்சன் பிராங்க்ளினின் வயிற்றில் கத்தியால் குத்தபட்டதால், அவர் நாகை அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதனிடையே கொலை செய்த முகேஷ், வேளாங்கண்ணி காவல் நிலையத்தில் சரணடைந்தார். சம்பவ இடத்திற்கு வந்த வேளாங்கண்ணி போலீசார் சதீஷின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஊரடங்கு நேரத்திலும் தமிழக அரசின் உத்தரவை மீறி வேளாங்கண்ணி பகுதியில் பல விடுதிகள் திறக்கப்பட்டு இருப்பதாக குற்றச்சாட்டு எழந்துள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM