சாத்தான்குளம் காவல் நிலைய இரட்டைக் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சிறப்பு உதவி ஆய்வாளர் பால்துரை இன்று அதிகாலை மரணமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

`அரசு மருத்துவமனையில் உயிருக்குப் போராடும் தன் கணவரை காப்பாற்றுங்கள்’ என்று சிறப்பு உதவி ஆய்வாளர் பால்துரை மனைவி மதுரை காவல்துறை ஆணையாளரிடம் மனு அளித்து விட்டு சென்ற இரண்டாவது நாளில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
சாத்தான்குளம் காவல் நிலைய இரட்டைக்கொலை வழக்கில் ஆய்வாளர், உதவி ஆய்வாளர்கள் உட்பட காவல்துறையினர் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் சிறப்பு உதவி ஆய்வாளரான பால்துரைக்கு கைது செய்த சில நாள்களில் கொரோனா பாதிக்கப்பட்டு உடல் நலமில்லாமல் போனது. மதுரை அரசு மருத்துவமனை கொரோனா சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்

இந்த நிலையில்தான் தன் கணவர் உயிருக்கு ஆபத்து என்று அவர் மனைவி மங்கையர்திலகம் மதுரை மாநகர காவல்துறை ஆணையாளர் அலுவலகத்தில் கடந்த 8-ம் தேதி மனு அளித்தார். அப்போது நம்மிடம் பேசியவர், “அவருக்கும் இந்தக் கொலை வழக்குக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. தட்டார்மடத்தில் பணியாற்றியவர், சாத்தான்குளத்துக்கு ஒரு வாரம் மட்டும் மாற்றப்பட்டார். இந்த வழக்கில் எந்தக் குற்றமும் செய்யாத என் கணவரை பழி வாங்குகிறார்கள். தற்போது அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
நல்ல சிகிச்சை இல்லாமல் கைகால் இயங்க முடியாத நிலையில் உள்ளார். கட்டுப்பாட்டிலிருந்த சர்க்கரை அளவு சிறைக்கு சென்றபின் அளவுக்கதிகமாகி உள்ளது. இதய நோயும் உள்ளது. மதுரை அரசு மருத்துவமனையில் சரியான கவனிப்போ, சிகிச்சையோ இல்லை. அவருக்கு தண்ணீர் கொடுக்க கூட எங்களை விட மறுக்கிறார்கள். எங்கள் சொந்த செலவில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கத் தயாராக இருக்கிறோம். அதனால் அவரை தனியார் மருத்துவமனைக்கு மாற்ற அதிகாரிகள் உதவி செய்ய வேண்டும். இல்லையென்றால் அவர் உயிருக்கு ஏதாவது ஆகிவிடும்’’ என்றார்.

பால்துரை, அரசு மருத்துவமனை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று அதிகாலை மரணமடைந்தார். இது அவர் குடும்பத்தினரிடம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பரபரப்பான வழக்கில் கைது செய்யப்பட்ட சிறப்பு உதவி ஆய்வாளர் கொரோனாவால் இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.