கேரள விமான விபத்தில் மீட்புப்பணியில் ஈடுபட்டவர்களுக்கு கேரள காவல்துறை நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ளது.
துபாயில் இருந்து 191 பேருடன் கேரள மாநிலம் கோழிக்கோடு வந்த, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், தரை இறங்கும் போது இரண்டாக
உடைந்தது. இந்த விபத்தில் விமானி உள்பட 18 பேர் பலியானார்கள். பலர் படுகாயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டுள்ளனர். விமானம் விபத்துக்குள்ளான சம்பவம் கேரளா முழுவதும் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
கனமழை பெய்து கொண்டிருந்த இரவில் விமான விபத்து ஏற்பட்டாலும் மீட்புப்பணி துரிதமாகவே நடைபெற்றது. மீட்புப்பணியில் சிஐஎஸ்எஃப்
வீரர்கள், தீயணைப்புத்துறையினர், விமான நிலைய ஊழியர்கள் மட்டுமின்றி 20-30 பொதுமக்களும் ஈடுபட்டனர். அனைவரும் துரிதமாக
செயல்பட்டே விபத்தில் சிக்கியிருந்தவர்கள் அனைவரும் மீட்கப்பட்டனர்.
இந்நிலையில் விமானவிபத்தில் இருந்து மீட்கப்பட்ட சிலருக்கு கொரோனா பாசிட்டிவ் என்பதால் மீட்புப்பணியில் ஈடுபட்டவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளவேண்டுமென அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர். இதனையடுத்து மீட்புப்பணியில் ஈடுபட்டவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர்.
இது குறித்து தெரிவித்துள்ள மாநில சுகாதாரத்துறை, அவர்களின் உதவியை கேரளா என்றுமே மறக்காது. ஆனாலும் அவர்கள் முன்னெச்சரிக்கையுடன் பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளது. இந்நிலையில் மீட்புப்பணியில் ஈடுபட்டவர்களுக்கு கேரள காவல்துறை நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ளது. அவர்கள் தங்கியுள்ள இடத்திற்குச் சென்ற காவலர்கள் அவர்களை வரிசையாக நிற்க வைத்து சல்யூட் அடித்து மரியாதை செலுத்தினர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM