அயர்லாந்தை தளமாகக் கொண்ட பேஸ்புக் ஊழியர் ஒருவர் டெல்லி காவல்துறையினருக்கு அளித்த எச்சரிக்கையால், ஊரடங்கால் நிதி நெருக்கடியில் சிக்கிக்கொண்ட இளைஞர் ஒருவர் தற்கொலை செய்யவிருந்தது தடுக்கப்பட்டுள்ளது.
27 வயது இளைஞர் ஒருவர் கொரோனா ஊரடங்கால் தற்கொலை எண்ணத்திற்கு தள்ளப்பட்டு, தொடர்ந்து பேஸ்புக்கில் வீடியோ வெளியிட்டு வந்தார். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த ஃபேஸ்புக் ஊழியர் அவரது தற்கொலையை தடுக்க முயற்சித்தார். அந்த தற்கொலை எண்ணம் கொண்ட இளைஞரின் பேஸ்புக் ஐடி டெல்லியை குறிப்பிட்டது என்பது தெரியவந்தது. உடனே, அவரது ஃபேஸ்புக் ஐ.டியில் கொடுக்கப்பட்டிருந்த செல்ஃபோன் நம்பரை டெல்லி காவல்துறையிடம் கொடுத்து இளைஞரின் தற்கொலை எண்ணம் குறித்த தகவலை கொடுக்கிறார்.
அந்த எண்ணிற்கு டெல்லி காவல்துறையினர் தொடர்பு கொண்டபோது சுமதி என்ற பெண் பேசியுள்ளார். எனது கணவர்தான் அவர். எனது ஃபேஸ்புக்கை அவர்தான் பயன்படுத்துகிறார். எனக்கும் அவருக்கும் பிரச்சனையாகி இரண்டு வாரத்திற்கு முன்பு மும்பை சென்றுவிட்டார். அங்கு, அவர் சிறிய ஹோட்டலில் சமையல் வேலை செய்கிறார் என்று கூறியதோடு, அந்த இளைஞரின் நம்பரையும் கொடுத்துள்ளார். அந்த செல்நம்பருக்கு ஃபோன் செய்தபோது நாட் ரீச்சபிள் என்று வந்துள்ளது. இதனால், பதட்டமடைந்த டெல்லி காவல்துறை மும்பை காவல்துறையை அணுகியது. அந்த, நேரத்தில்தான் தற்கொலை இளைஞர் தனது அம்மாவுக்கு வேறொரு எண்ணிலிருந்து பேசியுள்ளார். உடனே, அந்த நம்பவரை வாங்கிய மும்பை போலீஸார் அந்த இளைஞருக்கு போன் செய்து அன்போடு சமாதானப்படுத்தியதோடு, அதிகாலை 1:30 மணிக்கே அவரது வீட்டிற்குச் சென்று சமாதானப்படுத்தியுள்ளார்கள்.
”ஊரடங்கால் எங்கள் வீட்டில் வறுமை. குழந்தை வேறு பிறந்ததால் அதை வளர்க்கவேண்டும் என்ற கவலை வந்துவிட்டது. மனைவி வேறு சண்டை போட்டார். என்ன செய்வது என்பது தெரியவில்லை. அதனால்தான், தற்கொலை முடிவுக்கு வந்தேன். ஆனால், ஃபேஸ்புக் நிறுவனம், காவல்துறை என எல்லோருமே என் உயிரின் மீது அக்கறை கொண்டு காப்பாற்றியிருக்கிறீர்கள். நிச்சயமாக இனி தற்கொலை செய்துகொள்ளமாட்டேன்” என்று தற்கொலை முடிவை கைவிட்டுள்ளார், அந்த இளைஞர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM