“தற்போது பொதுமுடக்கம் இருக்கும் நிலையில், கல்வியை மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் மாற்றும் நோக்கத்தோடு கொண்டுவரப்படுவதுதான் புதிய கல்விக்கொள்கை. வெளித்தோற்றத்துக்கு மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில்கொண்டு அறிமுகப்படுத்தும் திட்டமாகத் தெரிந்தாலும், இது பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது” என்று புதிய கல்விக்கொள்கை பற்றி இன்றைய ‘இந்து தமிழ் திசை ” நாளிதழில் எழுதியுள்ள கட்டுரையில் தூத்துக்குடி தொகுதி மக்களவை உறுப்பினர் கனிமொழி விமர்சித்துள்ளார்.
“கற்பித்தல் முறையில், கல்வியின் நோக்கத்தில் மாற்றம் வேண்டும் என்பதிலும் அடுத்த தலைமுறைக்கான கல்வி, எதிர்கால அறிவியல் மாற்றங்கள், சிந்தனை முறைகள் இவற்றை உள்ளடக்கியதாக மாறும் வாழ்வாதார மதிப்பீடுகளை, வாய்ப்புகளை கருத்தில் கொண்டதாக இருக்கவேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் மாற்றம் என்ற பெயரில் இந்துத்துவ மதிப்பீடுகளை திணிப்பதை ஏற்கமுடியாது” என்று குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாடு, கேரளா போல தொடக்கக்கல்வியை சிறப்பாகச் செயல்படுத்தி வரும் மாநிலங்கள், தங்களின் உரிமையை எதற்காக மத்திய அரசிடம் விட்டுக்கொடுக்கவேண்டும்? என்று கேள்வி எழுப்பிய கனிமொழி, ” மூன்றாம் வகுப்பிலேயே பொதுத்தேர்வு என்றால் மாணவர் எப்படி படிப்பைத் தொடர்வார்கள்? புதிய கல்விக்கொள்கை மாணவர்களை படிக்கத் தூண்டுகிறதா? இல்லை, படிப்பைக் கைவிட்டு தொழில் செய்யச் சொல்லி ஊக்குவிக்கிறதா?” என்றும் கேட்டுள்ளார்.
மேலும், “நீட்டைக் கொண்டுவந்து மருத்துவப் படிப்பை மேல்தட்டு நகர்ப்புற மாணவர்களுக்கானதாக மாற்றியது மத்திய அரசு. மேலும் இன்று புதிய கல்விக்கொள்கையை ஏற்றுக்கொண்டால், கிராமத்தில் இருந்து அரசுப்பள்ளிகளில் படித்துவரும் ஒடுக்கப்பட்ட மாணவர்கள் கல்லூரிக்குள் காலே எடுத்துவைக்கமுடியாத ஒரு சூழல் ஏற்படும்” என்று கூறியுள்ள கனிமொழி, புதிய கல்விக்கொள்கையை அறிமுகப்படுத்தும் இந்த கட்டத்திலேயே நாம் ஒன்றுபட்டு எதிர்க்கவேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM