கோவையில் உயிரிழந்ததாக நம்பப்படும் இலங்கை சர்வதேச போதைப்பொருள் கடத்தல் மன்னன் அங்கொட லொக்காவின் முதற்கட்ட பிரேத பரிசோதனை அறிக்கையில் அவரது கை மற்றும் கால் விரல் நகங்கள் நீல நிறத்தில் இருந்தது தெரிய வந்துள்ளது.
நிழல் உலக தாதா அங்கொட லொக்கா பிரேதப் பரிசோதனைக்குப் பின்னர் அளிக்கப்பட்ட சான்றிதழ் தற்போது வெளியாகியுள்ளது. கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்குப் பின்னர் கொடுக்கப்பட்ட அறிக்கையில், 5 ஆம் தேதி பிரேத பரிசோதனை செய்யப்பட்டதாகவும், அப்போது அவரது கைவிரல் நகம் மற்றும் கால் விரல் நகங்கள் நீல நிறத்தில் இருந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதனால், அங்கொட லொக்கா விஷம் கொடுத்து கொல்லப்பட்டாரா என்ற கோணத்தில் சிபிசிஐடி போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். இருப்பினும் விரிவான இரசாயன அறிக்கை வெளியான பின்னரே அங்கொடா லொக்கா மரணம் இயற்கையானதா அல்லது கொலையா என்பது தெரியவரும் என்று சிபிசிஐடி காவல்துறையினர் தெரிவித்தனர்.
மேலும் கோவையில் உயிரிழந்தது அங்கொட லொக்கா தான் என்பதை உறுதி செய்ய 2017-ஆம் ஆண்டு சென்னையில் போலி பாஸ்போர்ட் வழக்கில் அங்கொட லொக்கா கைதானபோது பெறப்பட்ட கைரேகையையும், கோவையில் அங்கொட லொக்கா தங்கியிருந்த வீட்டில் கைப்பற்றப்பட்ட கைரேகையை ஒப்பிட்டு பார்க்கப்படும் என்றும் ஒன்றுக்கும் மேற்பட்ட கைரேகைகள் வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்டதால் லொக்காவின் கூட்டாளிகள் தொடர்பான தகவல் கிடைக்கலாம் என்று அதிகாரிகள் கூறினர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM