ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளான கோழிக்கோடு விமான நிலையம், டேபிள் டாப் ரன்வே கொண்டது. அது என்ன டேபிள் டாப் ரன்வே ?
விமான ஓடுதளம், உயரமான மலைக்குன்றின் மீது அமைத்திருப்பதையே டேபிள் டாப் ரன்வே என்று அழைப்பார்கள். இந்தியாவில் இத்தகைய ஓடுதளம் கொண்ட விமான நிலையங்கள் மூன்று உள்ளன. கோழிக்கோடை தவிர்த்து, கர்நாடகா மாநிலத்தில் உள்ள மங்களூரு விமான நிலையம், மிசோரமில் உள்ள லெங்புய் விமான நிலையங்களிலும் கோழிக்கோடு போல், டேபிள் டாப் ரன்வே உள்ளன.
இந்த உயரமான விமான நிலையம் இருக்க கூடிய பகுதியைச் சுற்றிலும் பள்ளத்தாக்குகள் அல்லது உயரம் குறைவான பகுதிகள் இருக்கின்றன. மிகவும் அனுபவம் வாய்ந்த விமானிகள் மட்டுமே, டேபிள் டாப் ஓடுதளங்களில் விமானத்தை இயக்க முடியும். சிறிது கவனம் சிதறினாலும், விபத்து நிச்சயம். குறைந்த அளவு ஓடுதளத்தை மட்டுமே பயன்படுத்தி விமானத்தை தரையிறக்கவும், டேக் ஆஃப் செய்யவும் கைதேர்ந்த விமானிகள் மட்டுமே இதுபோன்ற விமான நிலையங்களில் பணியில் ஈடுபடுத்தப்படுபவர்.
மங்களூர் விமான நிலையத்தில் 2010 ஆம் ஆண்டு மே மாதத்தில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ஒன்று ஓடுதளத்தை தாண்டிச்சென்று விபத்துக்குள்ளானது. அப்போதே இதுபோன்ற உயரத்திலுள்ள டேபிள் டாப் விமான நிலையங்களில் மேலும் பாதுகாப்பு அம்சங்களை உருவாக்கி பலப்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதையடுத்து மங்களூர் விமான நிலையத்தில் கூடுதல் நீளமுள்ள புதிய ஓடுதளம் அமைக்கப்பட்டது. தற்போது கோழிக்கோடு விமான விபத்து, பத்தாண்டுகளுக்கு முன்பு நடந்த மங்களூர் விமான விபத்தை நினைவுபடுத்தும் வகையில் அமைந்துள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM