திருவனந்தபுரம் யு.ஏ.இ தூதரக பார்சல் வழியாகத் தங்கம் கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஸ்வப்னா சுரேஷ் ஜாமின் கேட்டு என்.ஐ.ஏ நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். இந்த மனு மீதான விசாரணை தொடர்ந்து நடந்து வந்தது. அப்போது, முதல்வர் பினராயி விஜயனை தனக்கு நன்றாகத் தெரியும் என்று என்.ஐ.ஏ விசாரணையில் ஸ்வப்னா சுரேஷ் கூறியிருந்ததாகவும், முதல்வர் அலுவகத்தில் செல்வாக்காக இருந்தா எனவும், ஸ்வப்னாவுக்கு சிவசங்கரன் வழிகாட்டியாக இருந்தார் எனவும் விசாரணையில் தெரிய வந்துள்ளதாக என்.ஐ.ஏ சார்பில் வாதாடிய வழக்கறிஞர் கூறியுள்ளார்.
இதைக் கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு எதிரான அஸ்திரமாக எதிர்கட்சிகள் பயன்படுத்தின. இந்த நிலையில் கொரோனா சம்பந்தமாக வழக்கம்போல நேற்று மாலை செய்தியாளர்களை சந்தித்தார் முதல்வர் பினராயி விஜயன். அப்போது ஸ்வப்னா, முதல்வர் அலுவலகத்தில் செல்வாக்காக இருந்ததாக வெளியான தகவல் குறித்தும், அவர் முதல்வரை தெரியும் எனக் கூறியது பற்றியும் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பொறுமையாக பதிலளித்த பினராயி விஜயன் கூறுகையில், “இதில் நான் தனியாக சொல்ல எதுவும் இல்லை. நான் ஏற்கனவே சொன்னதுபோல என்.ஐ.ஏ இந்த வழக்கை விசாரிக்கட்டும். விசாரணைக்காக அவர்கள் எங்குவேண்டுமானாலும் செல்லட்டும். முதல்வர் அலுவலகத்துடன் தொடர்பு இருந்ததாக என்.ஐ.ஏ சொன்னதா? அல்லது பத்திரிகைள் சொன்னதா? முதல்வரை தெரியும் என அவர் சொன்னதாகக் கேட்கிறீர்கள், முதல்வரை உங்களுக்கு தெரியாதா.
செய்தியாளர்களுக்கும், செய்தி நிறுவனங்களுக்கும் என்ன வேண்டும்? தங்கம் கடத்தலுக்கு முதல்வர் கூட்டு நின்றார் என சொல்ல வேண்டுமா. இதைப்பற்றி மக்களுக்கு தெரியும்” என்றவரிடம் செய்தியாளர்கள் இதுபற்றி சில கேள்விகளை முன்வைத்தனர். அந்தக் கேள்விகளுக்கு பதில் சொல்லும்போது டென்சனானார் பினராயி விஜயன். அவர், “நீங்கள் தனி ரீதியை உருவாக்க முயல்கிறீர்கள். என்ன அடிப்படையில் கேரள முதல்வராக இருக்கும் என்னை சந்தேகிக்கும் வகையில் செய்தி கொடுக்கிறீர்கள். என்ன ஆதாரத்தின் அடிப்படையில் செய்தி கொடுக்கிறீர்கள். அரசியல் ரீதியாக என்னை தகர்க்கும் சக்திகளுடன் நீங்கள் நிற்கிறீர்களா? பத்திரிகை தர்மத்தை நீங்கள் கடைப்பிடிக்க வேண்டும்.

இந்த விஷயத்தில் நீங்கள் செய்தி வெளியிட்ட ரீதி என்னையும், என் அலுவலகத்தையும் அவமானப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. தங்கம் கடத்தலில் நாங்கள் கூட்டு நிற்கிறோம் என்று சொல்ல வேண்டும் என்பதையா நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள். இதுதான் பத்திரிகை தர்மமா. என் கட்சியைச் சேர்ந்தவர் ஆட்சிக்கு வந்தால் தற்கொலை செய்வோம் என்று கூறியவர்கள் உண்டு. நாங்கள் ஆட்சிக்கு வந்ததால் கேரளத்திற்கு தோஷம் வந்ததா. எங்கள் ஆட்சியில் எத்தனையோ நன்மைகளை எண்ணி எண்ணி சொல்லலாம்.
Also Read: கேரளா: `தூதரக அதிகாரியுடன் இணைந்து ரியல் எஸ்டேட்?’ – ஸ்வப்னா லாக்கரில் சிக்கிய பணம், தங்கம்
இது தேச பாதுகாப்பு சம்பந்தப்பட்ட வழக்கு என்பதால் அரசு தெளிவான நடவடிக்கையை எடுத்துள்ளது. அதனால்தான் முதன்மைச் செயலாளர் பதவியில் இருந்து சிவசங்கரன் நீக்கப்பட்டார். இந்த நடவடிக்கைகளில் நீங்கள் திருப்தி அடையவில்லை. உங்களுக்கு அல்ல, இங்கு சொல்லி விடுபவர்களுக்கு திருப்தி இல்லை. நான் இந்த நாற்காலியை விட்டு சென்றுவிட்டல் அவர்களுக்கு திருப்தி ஏற்படும். ஆனால் அது நடக்காது” என்றார்.