கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் கிரிக்கெட்டின் தாய் நாடான இங்கிலாந்தில் சர்வதேச போட்டிகள் நடைபெற்று வருகின்றன. வெஸ்ட் இண்டீஸ் அணியோடு டெஸ்ட் தொடரில் விளையாடியது இங்கிலாந்து. பின்னர் அயர்லாந்துடன் ஒருநாள் போட்டியில் விளையாடிய இங்கிலாந்து தற்போது பாகிஸ்தான் அணியுடன் மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
கடந்த ஐந்தாம் தேதியன்று ஆரம்பமான முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் அசார் அலி பேட்டிங்கை தேர்வு செய்தார்.
வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான இங்கிலாந்து ஆடுகளத்தில் நிதானமாக ஆடினர் பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள். முதல் இன்னிங்ஸில் 109 ஓவர்களில் 326 ரன்களை பாகிஸ்தான் அணி ஸ்கோர் செய்தது. ஷான் மசூத், பாபர் அசாம் மற்றும் ஷதாப் கானின் பேட்டிங் பாகிஸ்தான் அணிக்கு கைகொடுத்தது.
பின்னர் ஆடிய இங்கிலாந்து 219 ரங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. பேட்ஸ்மேன் போப் மட்டும் இங்கிலாந்து அணிக்கு ஆறுதல் கொடுத்தார். மற்ற அனைத்து வீரர்களும் பாகிஸ்தானின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் வீழ்ந்தனர். யாசிர் ஷா பாகிஸ்தானுக்காக நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.
தற்போது 150 ரன்கள் முன்னிலையோடு இரண்டாவது இன்னிங்க்ஸை பாகிஸ்தான் விளையாடி வருகிறது. முதல் இன்னிங்ஸில் ரன் குவிப்பில் ஈடுபட்ட மசூத்தின் விக்கெட்டை இங்கிலாந்து பவுலர் பிராட் வீழ்த்திவிட்டார். இருந்தாலும் இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற 75 சதவிகிதம் வாய்ப்புகள் இருப்பதாக கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர். இரண்டு நாட்கள் ஆட்டம் மீதம் உள்ளது.