உலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான கூகுள் அதன் வீடியோ ஷேரிங் பிளாட்பார்மான ‘யூடியூப்’ தளத்தில் தவறான தகவல்களை தவிர்ப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக சீனாவுடன் தொடர்பில் உள்ள சுமார் 2,500க்கும் மேற்பட்ட யூடியூப் சேனல்களை நீக்கியுள்ளதாக கூகுள் தெரிவித்துள்ளது.
‘தற்போது நீக்கப்பட்டுள்ள சேனல்கள் அனைத்தும் ஸ்பேம் மெசேஜ்கள் மற்றும் அரசியல் சாராத தவறான தகவல்களையும், நம்பகமற்ற செய்திகளையும் பகிர்ந்து வந்தன. அதனால் அந்த சேனல்களை நீக்கியுள்ளோம்.
ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்களில் நாங்கள் மேற்கொண்ட விசாரணையில் சீனாவின் ஆதிக்கம் கொண்டிருந்த இந்த சேனல்களை நீக்கியுள்ளோம்’ என கூகுள் நிறுவனம் அதன் காலாண்டு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கடந்த ஏப்ரலில் சமூக ஊடக பகுப்பாய்வு நிறுவனமான ‘கிராஃபிகா’ தவறான தகவல்களை பரப்பும் சேனல்கள் என அடையாளம் காணப்பட்ட சேனல்களையே தற்போது கூகுள் நீக்கியுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையில் தற்போது இணக்கமில்லாத நிலையில் கூகுள் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவிலும் சீன மொபைல் அப்ளிகேஷனான டிக்-டாக் பயன்பாட்டிற்கு தடை விதிக்க அந்நாடு திட்டமிட்டு வருகிறது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM