பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!
இன்றைய அவசர உலகில் அலுவலகம், வீடு, நட்பு, உறவு என்று நாம் முக்கிய அங்கம் வகிக்கும் சமுதாயத்தின் அனைத்து இடங்களிலும் அதிகாரத்துக்கு வருவதற்கான போட்டி என்பது நாம் வெளிப்படையாகக் காணும் ஒன்றாகும்.
ஆங்கில எழுத்தாளர் ராபர்ட் க்ரீனின் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான அறிவுரைகள் 48 பற்றி இங்கு காண்போம். சாத்தான் ஓதும் வேதத்துக்கு ஒப்பாகவே தன்னுடைய இந்த 48 அறிவுரைகளைக் கருதினார் ராபர்ட் க்ரீன்.

ஏனெனில், அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான பாதை என்பது துரோகங்களால் வடிவமைக்கப்பட்டது என்று மிக உறுதியாக அவர் நம்பியதால், நேர்மையாக நடப்பது மட்டுமே வெற்றிக்கனியைப் பறிக்க உதவும் மந்திர சூத்திரம் என்று அவர் ஒருபோதும் போதிக்க விரும்பவில்லை.
எனவே, இந்தக் கட்டுரையைப் படிக்கும் நேயர்களின் நேர்மையைக் கெடுப்பது மற்றும் அவர்களுக்கு தப்பான வழிகாட்டுதலைக் காண்பித்தல் என்பது இந்தத் கட்டுரையின் நோக்கம் அன்று. எழுத்தாளர் ராபர்ட் க்ரீன் சொல்லி இருக்கும் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான 48 அறிவுரைகளின் சாராம்சத்தை வாசகர்களுக்கு விளக்குவது மட்டுமே இந்தக் கட்டுரையின் நோக்கம்.
இனி எழுத்தாளர் ராபர்ட் கிரீனின் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான 48 அறிவுரைகளைப் பற்றி பார்க்கலாம்.
1. தலைவனை தாண்டாதே
நாம் என்னதான் மெத்த படித்த மேதாவியாக, எல்லாம் அறிந்த புரிந்த அறிவுஜீவிகளாக இருந்தாலும் வேலை செய்யும் இடத்தில் நம் அணித்தலைவர், மேலாளர் போன்றவற்றின் கண்ணசைவுக்கு ஆடும் பொம்மைகளாக மட்டுமே இருக்க வேண்டியது மிக அவசியம். எப்போது நாம் நம் அணி தலைவனை / மேலாளரை விட நிறைய விஷயங்கள் தெரிந்த அறிவு ஜீவி என்று நமது மேதாவிலாசத்தை நாம் வேலை செய்யும் இடத்தில காட்ட ஆரம்பிப்போமோ, அப்போதிருந்து நமக்கான ஆப்பு தயாராகும்.

கண்டிப்பாக, தனக்கு கீழே வேலை செய்யும் ஒருவன் தன்னை விட புத்திசாலி, விவரம் தெரிந்தவன் என்பதை எந்த அணி தலைவராலும் மேலாளராலும் ஒத்துக்கொள்ளவே முடியாது. அவர்களுடைய ஈகோ அதற்கு இடம் கொடுக்க வாய்ப்பே இல்லை. அதனால் மக்களே ஐம்புலன்களையும் அடக்கிக்கொண்டு வேலை செய்யுங்கள். மேதாவி போல நீங்கள் உங்கள் மேலாளரிடம் பிலிம் காட்டினால் தலையில் தட்டி மூலையில் அமரவைக்கப்படுவீர்கள், புறக்கணிக்கப்படுவீர்கள்.
2. வேலைன்னு வந்தா நோ நண்பேன்டா
வேலை செய்யும் இடத்தில கிடைக்கும் நட்புக்களை ரொம்ப நம்ப வேண்டாம். ஏனெனில் வேலையிடத்தில் உங்கள் நண்பனாக நீங்கள் கொண்டாடும் ஆசாமிகளே உங்களுக்கு நேரிடையான மற்றும் மறைமுகப் போட்டியாளர்களாக இருக்கக் கூடும்.

அலுவலகத்தில் இருக்கும் சில பதவி சம்பந்தப்பட்ட சலுகைகளுக்கு போட்டி போடுவதில் சத்தமில்லாமல் உங்களை போட்டுக் கொடுத்து கவிழ்க்கும் வேலையை உங்கள் பணியிட நண்பர்கள் செய்வது மிகவும் சாத்தியமே. அதனால் வேலையிடத்திலான நட்புக்களை ஓரளவுக்கு மேல் தள்ளியே வையுங்கள். அவர்களிடம் உங்கள் பலம், பலவீனங்களை நெல்லிக்காய் மூட்டையை அவிழ்த்துக் கொட்டியது போல முழுவதுமாகப் பகிர வேண்டாம்.
3. முகமூடி மனிதர்களாக இருப்பது அவசியம்
நாம் எந்த சமயத்தில் என்ன பேசுவோம், என்ன செய்வோம், என்ன நினைப்போம், எந்தச் செயலுக்கு எப்படி உணர்வுகளைக் காட்டுவோம் என்ற எந்த ஒரு விஷயமும் நம் அணியில் இருப்பவர்களுக்குத் தெரியாமல் ஒரு மர்ம புன்னகையுடன் அமைதியாக மர்மமான முகமூடி மனிதர்களைப் போல கமுக்கமாக இருக்க வேண்டியது வெற்றிக்கான போராட்டத்தில் மிக முக்கிய தந்திரமாகும்.

உங்களை முழுமையாக அறியும் வாய்ப்பை உங்கள் அணியில் உள்ளவர்களுக்கு நீங்கள் கொடுத்தால் அது உங்களைத் தோற்கடிப்பதற்கான ஆயுதத்தை வடிவமைக்கும் யோசனைகளை நீங்களே அவர்களுக்கு கொடுப்பதற்குச் சமம். அதனால் வெற்றிக்கனியை பறிக்க வேண்டுமென்றால் முகமூடி மனிதர்களாக மாறுங்கள் நண்பர்களே!
4. அலுவலம் பேச்சுப்போட்டிக்கான மேடை இல்லை
உங்களை கருத்து கேட்கும்போது மட்டும் வாயைத் திறந்தால் போதுமானது நண்பர்களே. கூட்ஸ் வண்டிபோல பேசிக்கொண்டே இருக்கும் மனிதர்களின் பேச்சுக்கான மதிப்பு என்பது அணிதலைமையிடம் ரொம்பவே குறைவாக இருக்கும். அணித்தலைமை முடிவெடுக்க தடுமாறும் இக்கட்டான தருணங்களில், நாம் ரத்தின சுருக்கமாகப் பேசும் பொருள் பொதிந்த சில வார்த்தைகளே, நாம் பணி செய்யும் இடத்தில் நம் மரியாதையை, முக்கியத்துவத்தை வலுவாக்கும். அதனால் டீவி விவாதப் போட்டிக்குப் போகும் பேச்சாளர் போல பேசக் கிடைக்கும் வாய்ப்புகளில் எல்லாம் வார்த்தைகளைக் கொட்டித் தீர்க்க வேண்டாம்.

5. சொல்வாக்கும் செல்வாக்கும் ரொம்பவே முக்கியம்
அதிகாரத்தைக் கைப்பற்ற, தக்க வைக்க அலுவலகத்தில் நம் செல்வாக்கை வலுவாக வைத்துக்கொள்வது ரொம்ப முக்கியம். அதே போல சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் நம் எதிராளியின் செல்வாக்கைக் குறைக்கும் வேலையை சத்தமே இல்லாமல் செய்ய வேண்டாம். செல்வாக்கு இல்லாதவர்கள் அதிகாரத்தைக் கைப்பற்றுவது என்பது இயலாத காரியம்.
6. கவன ஈர்ப்பும் காரிய சித்தியும்
அலுவலகத்தில் எப்போதும் அடுத்தவர்களின் கவனத்தை ஈர்க்கும் நபராக இருப்பது அதிகாரத்தைக் கைப்பற்ற நினைப்பவர்கள் செய்ய வேண்டிய மிக முக்கியமான விஷயம். ஆனால், நல்ல விஷயங்களுக்காக மட்டுமே கவனிக்கப்பட வேண்டும் என்பதை நினைவில் வையுங்கள் நட்பூஸ்…
அலுவலத்தில் நடக்கும் நல்ல விஷயங்களில் உங்கள் பங்களிப்பை நிறைவாகச் செய்து உங்கள் அணித்தலைமையின் கவனத்தைத் தொடர்ந்து ஈர்த்த வண்ணம் இருங்கள். அதிகாரத்துக்கான போட்டியில் அது உங்களை உங்கள் போட்டியாளர்களுக்கு முன் வலிமையானவர்களாக நிலை நிறுத்தும்.

7. மற்றவர்களை உங்களுக்காக வேலை செய்ய வையுங்கள்
உங்கள் அணியில் இருக்கும் மற்றவர்களிடம் இருந்து வேலை வாங்கும் திறமையை வளர்த்துக்கொள்ளுங்கள். அது உங்கள் பணிச்சுமையைக் குறைத்து, உங்களை மேலும் அதிகாரமுள்ள பொறுப்புக்கு நகர வைக்கும்.
8. தூண்டிலின் பிடி உங்களிடம் இருக்கட்டும்
அதிகாரத்தை எட்டிப் பிடிப்பது என்பது மீன்பிடித்தலுக்குச் சமம். ஆனால், அந்தத் தூண்டிலில் விழும் மீனாக மற்றவர்கள் இருக்கட்டும். தூண்டில் எப்போதும் உங்கள் கைப்பிடியில் இருக்கட்டும். தூண்டிலில் விழும் மீனாக மற்றவர்களை வைத்திருங்கள். அடுத்தவர்கள் கையில் தூண்டில் போய், நீங்கள் அதில் மாட்டும் மீனாக இருக்க வேண்டாம்.

9. வாக்குவாதம் தவிர்த்து. காரியத்தில் வீரியம் காட்டவும்
அதிகாரத்தைக் கைப்பற்ற நினைப்பவர்கள் எப்போதும் நேர விரயத்துக்கு வித்திடும் அநாவசிய வாக்குவாதங்களைத் தவிர்த்து தன் காரியத்தில் மட்டுமே கண்ணாக இருப்பது மிக அவசியம்.
10. உற்சாகத் தொற்றாக உங்கள் சகாக்கள் இருக்கட்டும்
அலுவலகத்தில் எப்போதும் சச்சரவும் சண்டையாகவும் இருக்கும், அடிக்கடி புகார்களுக்கு உள்ளாகும் ஆசாமிகளை உங்கள் நட்பு வட்டத்தில் வைக்கவே கூடாது. அது உங்களைப் பற்றிய உங்கள் அணித்தலைமையின் பார்வையில் உங்களையும் ஒரு வில்லங்கமான ஆசாமியாகவே காட்டும். அதனால் யாரைப் பார்த்தாலும் நண்பேன்டா என்று உருகி ஓட வேண்டாம் நண்பர்களே!
எப்போதும் மற்றவர்களை உற்சாகப்படுத்தும் , தன்னம்பிக்கையுமாக இருக்கும் நபர்களை மட்டுமே உங்கள் நட்பு வட்டத்தில் வைக்கவும். அது உங்களையும் மிகவும் தன்னம்பிக்கை உடையவராக அடையாளப்படுத்தும்.
அடுத்தடுத்த கட்டுரையில் மீதம் இருக்கும் 38 அறிவுரைகளை பார்ப்போம்.
– விமலாதித்தன், Chief Information Security Officer, Bank Of Sharjah
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.