தமிழக இளைஞர்களைப் புறக்கணித்து வடமாநில இளைஞர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதைக் கண்டித்து தமிழ் அமைப்பினர் பொன்மலை ரயில்வே பணிமனையை முற்றுகையிட்டுத் தொடர் போராட்டம் நடத்திவரும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனை தொழில்நுட்பப் பிரிவில் பீகார், ராஜஸ்தான், ஒரிஷா உள்ளிட்ட வட மாநிலங்களைச் சேர்ந்த சுமார் 588 பேர் புதிதாகப் பணி நியமனத்துக்குத் தேர்வாகியுள்ளனர். இவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணி பொன்மலையில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கொரோனா பொது முடக்கக் காலத்தில் திடீரென நடைபெறும் நியமனத்தில் முறைகேடு இருப்பதாகக் கூறி அப்ரண்டீஸ் பயிற்சி பெற்றோர் மற்றும் தமிழ் அமைப்புகள் போராட்டம் நடத்திய பிறகு, சான்றிதழ் சரிபார்ப்பு பணி நிறுத்தப்பட்டது.
பணி நியமனம் குறித்த அதிகாரபூர்வ தகவல் எதையும் ரயில்வே நிர்வாகமும் தெரிவிக்கவில்லை. தெற்கு ரயில்வே பணிமனையில் பயிற்சி முடித்தவர்களுக்கு உடனடியாகப் பணி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்த் தேசிய பேரியக்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முன்னதாக, கறுப்புக் கொடியுடன் பேரணியாக வந்து பொன்மலை ரயில்வே பணிமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டம் காரணமாகப் பொன்மலை பணிமனை முன்பு ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர். அப்போது, அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் காவல்துறையினர் கைது செய்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்த்தேசிய பேரியத்தின் மாநகரச் செயலாளர் இலக்குவனிடம் பேசினோம். ”திருச்சி பொன்மலை பணிமனையில் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 1,500 பேர் உட்படத் தமிழகத்தைச் சேர்ந்த 2,500-க்கும் மேற்பட்டோர் இதுவரை அப்ரெண்டிஸ் முடித்துள்ளனர்.

ஆனால், தமிழ்நாட்டில் இவர்களுக்கு வேலை வழங்காமல் வடமாநிலத்தவர்களுக்கு தொடர்ந்து வேலையை வழங்கி வருகின்றனர். பொன்மலை ரயில்வே தொழிற்சாலையில் ஆர்.ஆர்.பி மூலம் கிரேடு 3 தொழில்நுட்ப பணியாளர்கள் 540 பேருக்கு வேலை வழங்கிடச் சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் தற்பொழுது நடந்து வருகின்றன. இந்த 540 பேரில் 15 பேர் மட்டுமே தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். மற்றவர்கள் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள். இங்குதான் எங்களுக்குச் சந்தேகமே எழுகிறது.

கொரோனா ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் தமிழ்நாட்டில் அண்டை மாநிலங்களுக்குச் செல்ல இ-பாஸ் கிடைக்காமல் மக்கள் அல்லாடி வருகின்றனர். இந்நிலையில் இவர்கள் வடமாநிலங்களிலிருந்து எப்படி வந்தார்கள் என்பது காவல் துறையினருக்குத் தெரியவில்லை. ரயில் அல்லது விமானத்தில் வந்திருந்தாலும் திருச்சியில் 14 நாள்கள் தனிமைப்படுத்தப்பட்டார்களா என்ற கேள்விக்கும் பதில் இல்லை. மண்ணின் மக்கள் படித்துவிட்டு எந்த வேலையும் இல்லாமல் வீட்டில் இருக்கிறார்கள். அவர்களுக்கு முதலில் வேலை வழங்க வேண்டும். வடமாநிலத்தவர்களை உடனடியாக இங்கிருந்து அனுப்ப வேண்டும். இல்லையேல் தொடர் போராட்டம் நடத்துவோம்” என்று எச்சரித்தார்.