1,700 ஆண்டுகள் பழைமையான சமணர் படுக்கை அருகே உள்ள பாறைகள் வெடி வைத்து தகர்ப்பு.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் 1700 ஆண்டுகள் பழமையான பிராமி கல்வெட்டு மற்றும் சமண படுக்கைகள் உள்ள மலைக்குன்றை சுற்றி உள்ள பாறைகளை வெடிவைத்து தகர்த்து வருவது வரலாற்று ஆர்வலர்கள் மற்றும் ஜெயின் சமூகத்தினரிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
செஞ்சியில் 50 கி.மீ. சுற்றுவட்டாரப் பகுதிகளில் சமண சமயம் செழித்து விளங்கியதற்கான வரலாற்றுச் சின்னங்கள், கல்வெட்டுகள், சமண முனிவர்கள் தங்கி தவம் செய்த இடங்கள், சமணப்பள்ளிகள், மற்றும் செஞ்சி சிறுகடம்பூரில் உள்ள 24 தீர்த்தங்கர்களின் உருவச் சிற்பங்கள், குகைகள் உள்ளிட்ட பல்வேறு தடயங்கள் காணப்படுகின்றன.
செஞ்சியை அடுத்த நெகனூர்பட்டி கிராமத்தில் விவசாய நிலங்களுக்கு நடுவே புறம்போக்கு நிலத்தில் சமண முனிவர்கள் வாழ்ந்ததற்கு அடையாளமாக சிறு குகை உள்ளது. இந்த குன்றை சுற்றி, ஒன்றன்மீது ஒன்றாக அடுக்கப்பட்ட பாறைகளாலான அடுக்கம்பாறை என்ற குன்றும் உள்ளது.
பாறையின் அடிப்பகுதியில் கி.பி. 5-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு உள்ளது. இதில், “”பொரும் பொகழ் செக்கந்தி தாயியறு செக்கந்தண்ணி செயிவித்த பள்ளி” எனப் பொறிக்கப்பட்டுள்ளது. இதற்கான பொருள் பெரும்புகை கிராமத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற செக்கந்தண்ணி என்ற பெண் இந்தக் குகையில் தங்கியிருந்து ஆகார தானம், கல்வி தானம், மருத்துவ தானம், அடைக்கல தானம் ஆகியவற்றை மக்களுக்கு செய்து வந்ததாகத் தெரிவிக்கிறது. மலைப்பள்ளி எனப்படும் இந்தப் பகுதியில் முனிவர்களுக்கு சேவை செய்து படுக்கைகளை அமைத்துள்ளனர்.
இங்குள்ள கல்வெட்டில் முதலில் பிராமி எழுத்துகளும், பின்னர் வட்டெழுத்துகளும், இதைத் தொடர்ந்து தமிழ் எழுத்துகளின் தொடக்க கால எழுத்துகளும் இடம் பெற்றுள்ளன. இதே போன்ற கல்வெட்டுகள் செஞ்சி பகுதியில் பறையம்பட்டு, தொண்டூர் ஆகிய பகுதிகளில் உள்ளன.
இந்த நிலையில், நெகனூர்பட்டி கிராமத்தில் சமணர் படுக்கை பகுதியில் உள்ள பாறைகளை மர்ம நபர்கள் வெடி வைத்து தகர்த்துள்ளனர். ஏற்கெனவே இதைச் சுற்றியுள்ள பாறைகளை வெட்டி எடுத்து விற்பனை செய்து வருவது வாடிக்கையாகியுள்ளது.
இதை அறிந்த தமிழ்நாடு சமண சமய அறக்கட்டளை, தமிழ்நாடு சமண தலைமை பீடமான செஞ்சியை அடுத்த மேல்சித்தாமூர் ஜினகஞ்சி மடம் சார்பில், நெகனூர்பட்டியில் பாதுகாப்பற்றற நிலையில் இருக்கும் 1,700 ஆண்டுகள் பழைமையான இந்த வரலாற்று பொக்கிஷத்தை மத்திய தொல்லியல் துறையும், தமிழக அரசும் இரும்பு வேலி அமைத்து பாதுகாக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டது.
இது சம்பந்தமாக செஞ்சி வட்டாட்சியர் கோவிந்தராஜன் சம்பவம் நடந்த இடத்தில் ஆய்வு செய்து வெடி வைத்த நபர்கள் மீது வளத்தி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்படும் என தெரிவித்தார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM