கடவுளின் தேசம் என அழைக்கப்படும் கேரளாவில், கடந்த 2018 மற்றும், 2019ம் ஆண்டுகளில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பில் ஆயிரக்கணக்கனோர் உயிரிழந்தனர், லட்சக்கணக்கானோர் வீடுகளையும் உடமைகளையும் இழந்து தவித்தனர். அந்த சோக வடுக்கள் புணரமைப்பு பணிகள் மூலம் சரி செய்து கொண்டிருந்த நேரத்தில் 2020ம் ஆண்டு கொரோனா நோய் தொற்று தாண்டவமாட உறைந்து போனது கேரளா. தற்போது பெய்து வரும் கன மழை, மூன்றாவது வெள்ளப்பிரளயத்திற்கு வித்திட்டு விடுமோ என்ற அச்சமும் பீதியும் கலந்து மக்களை அதிர்ச்சியில் உறைய வைத்திருக்கிறது.

image

கேரளாவில் கடந்த ஜூனில் துவங்க வேண்டிய தென்மேற்கு பருவமழை, ஜூலை வரை ஏமாற்றினாலும், ஆகஸ்ட் முதல் தேதியில் இருந்து பருவமழை தீவிரமடையும் என திருவனந்தபுரம் வானிலை மையம் முன்னறிவிப்பு செய்திருந்தது. அதன்படியே சாரலாய் துவங்கியது மழை. மூன்றாம் தேதி வாக்கில், வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக மாற வாய்ப்பிருப்பதால் மாநிலம் முழுமைக்கும் பரவலாக மிக கன மழைக்கும், அதி தீவிர கன மழைக்கும் வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் முன்னறிவிப்பு செய்தது. அதை மெய்ப்பிக்கும் விதமாக மாநிலம் முழுவதும் கடந்த நான்கு நாட்களாக கன மழை வெளுத்து வாங்கிக் கொண்டிருக்கிறது.

image

குறிப்பாக தமிழக கேரள எல்லையை இணைக்கும் இடுக்கி மாவட்டத்தில் கொட்டி வரும் மழையால் முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 15 அடி உயர்ந்திருக்கிறது. இடுக்கி மாவட்டத்தின் மிகப்பெரிய அணையான இடுக்கி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. குட்டி அணைகள் நிரம்பி வருவதால் மலங்கரா, கல்லார்குட்டி அணைகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திறக்கப்பட்டுள்ளன. மாவட்டத்தில் குமுளி அருகே 65ம் மைல், சாஸ்தாநடை பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டு 100க்கும் அதிகமான ஏக்கர் விவசாய நிலங்கள் சேதமடைந்துள்ளன. நல்வாய்ப்பாக உயிர்சேதம் ஏற்படவில்லை.

அதே நேரம் இடுக்கியின் மூணாறு அருகே ஏற்பட்ட நிலச்சரிவில் தொடர்குடியிருப்பில் 80 பேர் மண்ணுக்குள் புதைந்த துயரம் நிகழ்ந்துள்ளது. 12 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். இறந்தவர்கள் உடல்களை மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.

பத்தனம்திட்டா மாவட்டத்தில் பெய்த கன மழையால் பம்பா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வனத்திற்குள் திடீர் நிலச்சரிவு ஏற்பட்டிருக்கலாம் எனவும், அதனால் தான் இத்தனை வெள்ளம் பம்பா ஆற்றில் வரக் காரணம் என கூறப்படுகிறது. இதனால் தான் நதியில் பெரிய மரங்கள் இழுத்துவரப்படுகின்றன. திரிவேணி பாலம் மூழ்கும் அளவிற்கு பம்பா நதியில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. மழை வெள்ளத்தால் பத்தனம்திட்டா மாவட்டத்தின் நகர்பகுதிகள், வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. கக்கி, ஆனத்தோடு அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அச்சன்கோவில் நதியிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

image

வயநாடு மாவட்டத்தில் பூஞ்சரிமுட்டம் என்ற ஆதிவாசி காலனியில் ஏற்பட்ட நிலச்சரிவில் இரண்டு வீடுகள் இடிந்து விழுந்தன. உயிர்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. வாளாடு- புத்தூர் சாலையில் மண் இடிந்து போக்குவரத்து முடங்கியுள்ளது. கோட்டயம் மாவட்டத்தில் கன மழையால் ஆங்காங்கே லேசான நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளது. பாலா, ஈராற்றுபேட்டை நகர்பகுதிகள். குடியிருப்புகளில் வெள்ளம் புகுந்துள்ளது. மழை தொடர்வதால் நிலச்சரிவு அச்சத்தில் உள்ளனர் மக்கள்.

image

கோழிக்கோட்டில் சாலியாறு, இருபத்திபுழா ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. செம்புக்கடவு பாலம் மூழ்கியதால் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. எர்ணாகுளம் மாவட்டத்தில் கன மழை தொடர்வதால் குடியிருப்பு பகுதிகள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. இதற்காக தற்சமயம் ஏழு வெள்ள நிவாரண முகாம்கள் துவக்கப்பட்டு மக்கள் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறாக கேரளாவின் 14 மாவட்டங்களிலும் மழை தீவிரமடைந்துள்ளது. அதோடு நாளை இடுக்கி, திருச்சூர், பாலக்காடு, வயநாடு மாவட்டங்களில் அதி தீவிர மழைக்கான “ரெட் அலர்ட்”டும், இதர மாவட்டங்களுக்கு மிக கன மழைக்கான “ஆரஞ்ச்” அலர்ட்”டும் விடுத்து திருவனந்தபுரம் வானிலை மையம் முன்னெச்சரிக்கை செய்துள்ளது. மழையும் கேரளா மாநிலம் முழுக்க பரவலாக தொடர்வதால் மூன்றாவது வெள்ள பிராய அச்சத்தில் உள்ளனர் கடவுளின் தேசத்து மக்கள்!

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.