நகர்புறங்களை விட கிராமப்புறங்களில், மாஸ்க் அணிவதில் மக்கள் சுணக்கம் காட்டுவதாக தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக சுகாதரத்துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இதன் தொடர்ச்சியாக நெல்லை வந்த அவர் நோய் தொற்று அதிகம் பாதித்து கட்டுப்பாட்டு பகுதியாக உள்ள பாளையங்கோட்டை ஆயுதப்படை காவலர் குடியிருப்பு பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். நோய் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த அவர் அப்பகுதி மக்களிடமும் நோய் குறித்த விழிப்புணர்வு பற்றி கேட்டறிந்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,
தமிழகம் முழுவதும் நோய் தடுப்பு பணிகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நாள் ஒன்றுக்கு 7 ஆயிரம் பேர் பாதிப்பு என இருந்தது தற்போது 5 ஆயிரமாக குறைந்துள்ளது. மற்ற மாநிலங்களை ஒப்பிடும் பொழுது தமிழகம் முழுவதும் இதுவரை 28 லட்சம் கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது.
தற்போது நாள் ஒன்றுக்கு 60 ஆயிரம் பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இறப்பு விகிதமும் 1.62 விழுக்காடாக குறைந்துள்ளது தமிழகம் முழுவதும் 95 ஆயிரம் பேர்தான் சிகிச்சையில் உள்ளனர். மேலும் நோய் குணப்படுத்தவும் , இறப்பு விகிதத்தைக் குறைக்கவும் சித்தா, ஆயுர்வேதா, ஓமியோபதி என 12 வழிமுறைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 75 ஆயிரம் படுக்கைகள் கொரோனா பாதித்தவர்களுக்கு இருந்துவந்தது. தற்போது முதல்வர் அதனை 1 லட்சத்து 18 ஆயிரம் படுக்கைகளாக உயர்த்தியுள்ளார். 75 கோடி ரூபாய் மதிப்பில் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டத்தைப் பொறுத்தவரை நாள் ஒன்றுக்கு சராசரியாக 1500 பரிசோதனைகள் எடுக்கப்பட்டது, தற்போது 2000 ஆயிரமாக உயர்த்தப்பட்டள்ளது. இங்கு 2576 படுக்கை வசதிகள் உள்ளது, ஆனால் 2125 பேர் நோய் தொற்றுக்கு ஆளாகி சிகிச்சையில் உள்ளனர். நெல்லை மாநகரத்தில் 2500 தெருக்களில் 500 தெருக்களில் நோய் தொற்று கண்டறியபட்ட பகுதியாக இருந்த நிலையில் தற்போது 160 தெருக்களாக குறைந்துள்ளது.
14 தெருக்கள் மிகவும் கட்டுபடுத்தபட்ட பகுதியாக உள்ளது. நகர் புறங்களைவிட கிராமப்புறங்களில் குறிப்பாக தென்மாவட்ட பகுதிகளில் மக்கள் மாஸ் அணிவதில் சுனக்கம் காட்டுகின்றனர். இதற்கு போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் நோய் தொற்று குறைந்து வருவதாகவும் தெரிவித்தார்.
இந்த ஆய்வின் போது மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ், மாநகராட்சி ஆணையர் கண்ணன் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.