தனக்கு திமுகவில் இருப்பது பிடிக்கவில்லை என ஆயிரம் விளக்கு தொகுதி எம்.எல்.ஏ கு.க.செல்வம் தெரிவித்துள்ளார்.
ஆயிரம் விளக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் சட்டமன்ற உறுப்பினர் கு.க.செல்வம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், “திமுக அனுப்பிய கடிதம் இன்னும் எனக்கு வந்து சேரவில்லை. கடிதம் வந்ததும் பதில் அனுப்புவேன். அதில் என்ன விளக்கம் கேட்கப்பட்டுள்ளதோ அதற்கு பதில் அளிப்பேன்.
அவர்கள் என்னை நீக்குவதற்கு 10 நாட்களுக்கு முன்னதாகவே தலைமைக் கழக செயலாளர், செயற்குழு உறுப்பினர் பொறுப்புகளில் இருந்து எடுப்பது என்றால் எடுத்துக்கொள்ளுங்கள் என கூறி விட்டேன். எனக்கு திமுகவில் இருக்க பிடிக்கவில்லை. அதனால் தான் பொறுப்பில் இருந்து எடுத்துவிடுங்கள் எனக் கூறிவிட்டேன்.
உழைப்பவர்களுக்கு இந்த கட்சியில் மரியாதை இருக்காது. நான் உழைக்க வேண்டும் என நினைக்கிறேன். மாவட்டச் செயலாளர் பொறுப்பு வழங்கவில்லை என்பது காரணமல்ல. குடும்ப அரசியல் கட்சியில் இருப்பது மட்டுமே காரணம். நான் வேறு யாரையும் என்னுடன் வாருங்கள் என அழைக்கவில்லை. வயதாகிவிட்டது, உடல்நிலை சரியில்லை, பணம் இல்லை என்பதால் என்னை ஒதுக்கினார்கள். கட்சியில் வளர்ச்சி இல்லை என்ற காரணத்தினாலும் விலக முடிவு செய்தேன்” எனத் தெரிவித்தார்.