தான் வெற்றிகரமான கேப்டனாக இருப்பதற்கு காரணம் இதுதான் என சில காரணங்களை இந்திய அணியின் துணைக் கேப்டன் ரோகித் சர்மா பகிர்ந்துள்ளார்.
இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான ரோகித் சர்மா ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்கு கேப்டனாக இருக்கிறார். அவர் தலைமையிலான மும்பை அணி நான்கு முறை ஐபிஎல் கோப்பையை வென்று சாதித்துள்ளது. மேலும் கோலி இல்லாத நேரங்களில் இந்திய அணிக்கு கேப்டனாக பொறுப்பேற்று பல போட்டிகளில் வெற்றியை தேடி கொடுத்துள்ளார்.
இப்போதும் கூட கோலியை ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கு கேப்டனாகவும், டி20 போட்டிகளுக்கு ரோகித் சர்மாவை கேப்டனாகவும் நியமிக்க வேண்டும் என்ற கருத்து நிலவுகிறது. அதற்கு ஏற்ப ஒவ்வொரு ஐபிஎல் போட்டிகளிலும் கேப்டனாக ரோகித் சர்மாவின் செயல்பாடுகள் பலரையும் ரசிக்கும் விதமாக இருக்க தொடங்கியதும் காரணம்.
இந்நிலையில் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த ரோகித் சர்மா “நீங்கள் ஒரு அணிக்கு கேப்டனாக இருக்கும்போது, அந்த அணியிலேயே நீங்கள்தான் முக்கியத்துவும் இல்லாத நபர் என எனக்கு நானே நினைத்துக்கொள்வேன். அப்படியிருந்தால்தான் மற்ற வீரர்கள் உங்களுக்கு முக்கியமானவர்களாக தெரிவார்கள். ஒவ்வொரு கேப்டனும் ஒவ்வொரு முறையான அனுகுமுறையை கடைப்பிடிப்பார்கள். என்னுடையது இதுதான்” என கூறியுள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM