புதுக்கோட்டை மாவட்டம் மலையூர் பெருமாள் கோயில் பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி கருப்பையா. கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது தோட்டத்திற்கு அருகே அறுந்து விழுந்துகிடந்த மின்கம்பியைத் தெரியாமல் மிதித்தால், மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். எஜமானைக் காப்பாற்றச் சென்ற அவரது நாயும் அவருடன் சேர்ந்து உயிரிழந்தது. இறந்துபோன கருப்பையாவுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள்.

இறந்துபோன கருப்பையா மற்றும் அவரது நாய்

கடந்த 5 வருடங்களுக்கு முன்பு கருப்பையாவின் மனைவி உயிரிழந்த நிலையில், தற்போது கருப்பையாவும் இல்லை. தாய் மற்றும் தந்தையை இழந்து பிள்ளைகள் இருவரும் தவித்து வருகின்றனர். இந்தநிலையில், இவர்களின் நிலையறிந்த புதுக்கோட்டை மாவட்ட ஆலங்குடி நகர விஜய் மக்கள் இயக்கத்தினர் நேரடியாக அவர்களின் வீட்டிற்குச் சென்று விசாரித்தனர்.

Also Read: `ஏழைகளுக்கு மளிகைப் பொருட்கள்; ஆதரவற்றோருக்கு உணவு!’ -ஊரடங்கில் பசியாற்றிய விஜய் மக்கள் இயக்கம்

தொடர்ந்து, அந்தக் குடும்பத்திற்கு காய்கறி உள்ளிட்ட மளிகைப்பொருட்கள் மற்றும் ரொக்கப்பணம் ரூ.5,000 கொடுத்தனர். தொடர்ந்து, அந்தப் பிள்ளைகளின் படிப்பிற்கு தங்களால் முடிந்த உதவிகளைச் செய்வதாகத் தெரிவித்து அவர்களை நெகிழ்ச்சியடைய வைத்தனர்.

விஜய் மக்கள் இயக்கத்தினர்

இதுபற்றி விஜய் மக்கள் இயக்கம் மாவட்டத் தலைவர் பர்வேஸ் கூறும்போது,“தாய் மற்றும் தந்தை இருவரையும் இழந்து நிர்க்கதியாக சாப்பாட்டிற்கே பிள்ளைகள் கஷ்டப்படுவதாகத் தகவல் சொன்னாங்க. மனசுக்கு ரொம்பவே கஷ்டமாக இருந்துச்சு.ரெண்டு பேருமே படிக்கிற பிள்ளைகள். இப்போதைக்கு சாப்பாட்டிற்கே கஷ்டப்படுறாங்கன்னு சொன்னதால,அவர்களுக்குத் தேவைப்படுகிற அத்தியாவசியப் பொருட்களைக் கொடுத்திருக்கோம். ஆனாலும், அதோட விடக்கூடாது அவங்க கல்விக்கு எங்களால முடிஞ்ச உதவிகளைச் செய்யணும். பிள்ளைகளின் மேற்படிப்புக்குத் தேவையான உதவிகளைச் செய்யத் திட்டமிட்டிருக்கிறோம்” என்றார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.