வகித்த பொறுப்புகளில் இருந்து கு.க.செல்வம் இன்று முதல் விடுவிக்கப்படுகிறார் என முக.ஸ்டாலின் அறிவித்துள்ளார்
இது குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட செய்திக்குறிப்பில், திமுக தலைமை நிலைய அலுவலகச் செயலாளர் மற்றும் தலைமை செயற்குழு உறுப்பினர் கு.க.செல்வம் , அவர் வகித்த பொறுப்புகளில் இருந்து இன்று முதல் விடுவிக்கப்படுகிறார் என அறிவித்துள்ளார். மேலும், கழக கட்டுப்பாட்டை மீறி, கழகத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வருவதால் அவரை கழகத்திலிருந்து தற்காலிகமாக நீக்கி வைப்பதுடன், அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து ஏன் நீக்கக் கூடாது என அவருக்கு விளக்கம் கேட்டு கடிதமும் அனுப்பட்டுள்ளது என திமுக தலைமை கழகம் அறிக்கை வெளியிட்டுள்ளது
முன்னதாக பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகனுடன், கு.க.செல்வம் நேற்று டெல்லி சென்றிருந்தார். அங்கு பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவின் வீட்டிற்கு சென்ற அவர் அங்கு பேச்சுவார்த்தை நடத்தினார். இதற்கிடையே அவர் பாஜகவில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது.
இந்நிலையில் ஜே.பி.நட்டாவை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கு.க.செல்வம், தான் பாஜகவில் இணைய வரவில்லை என்றார். தமிழ்க்கடவுள் முருகனை அவதூறாக பேசியவர்களை திமுக தலைவர் ஸ்டாலின் கண்டிக்க வேண்டும் எனத் தெரிவித்தார். அத்துடன் திமுகவில் தனக்கு அதிருப்தி இல்லை எனவும், ஆனால் திமுக தலைமை தன்மீது நடவடிக்கை எடுத்தால் பரவாயில்லை எனவும் அவர் கூறினார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM