லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள துறைமுகத்தில் மிகவும் பயங்கரமான வெடி விபத்து சம்பவம் நேற்று நடந்தது. இதுதொடர்பாக சமூக வலைதளங்களில் பரவி வரும் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சம்பவத்தின் கொடூரத்தை விளக்கும் விதமாக உள்ளன. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதுவரை சுமார் 100 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 4,000-க்கும் அதிகமான மக்கள் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மக்களுக்கு ஆபத்து தரக்கூடிய வகையில் 6 ஆண்டுகளாகச் சேமித்து வைக்கப்பட்ட 2,750 டன் அமோனியம் நைட்ரேட் வெடித்ததால் இந்த விபத்து நடைபெற்றுள்ளது என்று லெபனான் அதிபர் மைக்கேல் ஆன் தெரிவித்துள்ளார்.

உலகையே உலுக்கியுள்ள இந்தச் சம்பவம் தொடர்பான அதிர்ச்சியில் இருந்து பலரும் இன்னும் மீளவில்லை என்றே கூறலாம். மிகவும் சங்கடமான சூழ்நிலையில் இருக்கும் லெபனானுக்கு உலக நாடுகள் பலவும் தங்களது ஆதரவையும் வருத்தத்தையும் தெரிவித்துவருகின்றன. இந்த நிலையில் கவர்னர் மார்வன் அபவுத், “வெடி விபத்தால் சுமார் 2,50,000 முதல் 3,00,000 மக்கள் வரை தங்களது வீடுகளை இழந்துள்ளனர் என நினைக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். மேலும், இந்த விபத்தில் சுமார் 3 பில்லியன் டாலர் முதல் 5 பில்லியன் டாலர் மதிப்பிலான சேதம் ஏற்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார். எனினும், அதிகாரிகள் அதிகாரபூர்வமாக எதையும் கணக்கிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. பெய்ரூட் துறைமுகத்தில் இருந்த தானியக்கிடங்கும் இந்தச் சம்பவத்தில் கடுமையாகப் பாதிப்படைந்துள்ளது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Also Read: BeirutBlast : `இந்தியா முதல் இத்தாலி வரை!’ – லெபனானுக்கு துணை நிற்கும் நாடுகள்