சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. இந்தத் தேர்வில் மொத்தம் 829 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்றும் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. 11 பேரின் முடிவுகள் நிலுவையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2019-ம் ஆண்டு சிவில் சர்வீசஸ் தேர்வில் முதன்முறையாகக் கொண்டுவரப்பட்ட ஈ.டபிள்யூ.எஸ் ஒதுக்கீட்டின் அடிப்படையில் 78 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளனர். இந்தத் தேர்வில் வெற்றி பெற்ற அனைவரும் தங்களது வெற்றியைக் குடும்பத்துடன் கொண்டாடி வருகின்றனர். பிரதமர் உள்ளிட்ட அதிகாரிகளும் வெற்றி பெற்றவர்களுக்கு தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

ஹரியானாவில் உள்ள சோனிபட் பகுதியைச் சேர்ந்த விவசாயி ஒருவரின் மகனான பிரதீப் சிங் என்பவர் முதலிடம் பிடித்துள்ளார். இவர் ஏற்கெனவே ஐ.ஆர்.எஸ் அதிகாரியாகப் பணியாற்றி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தத் தேர்வில் பெண்களில் பிரதீபா வர்மா என்பவர் முதலிடம் பிடித்துள்ளார். இவர் உத்தரப் பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்தவர். தேர்வில் வெற்றி பெற்றது தொடர்பாக பிரதீப் சிங், “கனவு நினைவான நாள் இது. மிகவும் ஆச்சர்யம் அளிக்கும் மகிழ்ச்சியான நிகழ்வு. ஐ.ஏ.எஸ் அதிகாரியாக வர வேண்டும் என்பது எப்போதும் என்னுடைய விருப்பமாக இருந்தது. சமூகத்தில் மிகவும் பாதிப்படைந்த மக்களுக்காக நான் பணியாற்ற விரும்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார். இவர் நான்கு முறை தேர்வை எழுதியுள்ளார் என்பதும் கவனிக்கத்தக்கது.
Also Read: ` திறனறி தேர்வில் அப்படியென்ன இருக்கிறது?!’ – டி.என்.பி.எஸ்.சி முதல் யு.பி.எஸ்.சி வரை
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலைச் சேர்ந்த மாணவர் கணேஷ் குமார் என்பவர் ஐ.ஏ.எஸ் தேர்வில் தமிழக அளவில் முதலிடமும் இந்திய அளவில் ஏழாவது இடமும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கெனவே ஒருமுறை தேர்வு எழுதி தோல்வியடைந்த நிலையில் இரண்டாவது முறையாகத் தேர்வு எழுதி வெற்றியடைந்துள்ளார். மதுரையைச் சேர்ந்த மாற்றுத்திறன் கொண்ட பூரண சுந்தரி என்ற பெண்ணும் இந்தத் தேர்வில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார். சிறுவயதிலேயே பார்வைத் திறன் குறைபாட்டால் பாதிப்படைந்த இவர் கடினமாக உழைத்து இந்த வெற்றியை அடைந்துள்ளார்.
பிரதமர் மோடி வெற்றி பெற்றவர்களைப் பாராட்டும் விதமாக தனது ட்விட்டர் பக்கத்தில், “சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்ற இளைஞர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். பொதுச் சேவை செய்வதன் மூலம் கிடைக்கும் உற்சாகமான மற்றும் திருப்தியான வாழ்க்கை உங்களுக்கு காத்திருக்கிறது. உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். இந்தத் தேர்வில் விரும்பிய முடிவைப் பெறாத இளைஞர்களுக்கும் ஒன்றைச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். வாழ்க்கையில் பல வாய்ப்புகள் நிறைந்துள்ளன. நீங்கள் ஒவ்வொருவரும் கடினமாக விடா முயற்சியுடன் உழைக்கக்கூடியவர்கள். உங்களின் எதிர்காலத்துக்கும் எனது வாழ்த்துகள்” என்று தெரிவித்துள்ளார்.

தேர்வு முடிவுகள் தொடர்பாக வெளியான பெயர் பட்டியலில் 420 வது இடத்தில் ராகுல் மோடி என்ற பெயர் இடம்பெற்று இருந்தது. தற்போது இந்தப் பெயரும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அரசியல் களத்தில் எதிரெதிர் திசையில் நிற்கும் பா.ஜ.க கட்சியைச் சேர்ந்த பிரதமர் நரேந்திர மோடியின் பெயரும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராகுல் காந்தியின் பெயரும் இடம்பெறும் `ராகுல் மோடி’ என்ற பெயரில் ஒருவர் வெற்றி பெற்றுள்ளது நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதைப் பகிர்ந்து நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் தங்களது கருத்துக்களை வேடிக்கையாகப் பதிவு செய்து வருகின்றனர்.
Also Read: நேர்முகத் தேர்வுக்கு உதவும் பாசிட்டிவ் பதில்கள்! – டி.என்.பி.எஸ்.சி முதல் யு.பி.எஸ்.சி வரை