திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த அக்ராபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் நாகராஜன், கூலித்தொழிலாளி. இவரின் மனைவி தரணி. இவர்களுக்கு முரளி என்ற ஓர் மகனும், 17 வயதில் பரிமளா என்ற ஓர் மகளும் உள்ளனர். தந்தையைப் போன்றே முரளியும் கூலி வேலை செய்கிறார். பரிமளா, பெரணமல்லூரில் உள்ள மாமன் வீட்டில் தங்கியிருந்து அங்குள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் இந்த ஆண்டு ப்ளஸ் டூ முடித்தார்.

கணிதப் பிரிவு எடுத்திருந்த அந்த மாணவி 600-க்கு 502 மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்றுள்ளார். உயர்கல்விப் படிக்க விரும்பிய பரிமளாவுக்கு குடும்ப வறுமை தடையாக இருந்தது. ‘‘மேற்படிப்பு வேண்டாம்; ஏதாவது வேலைக்குச் சென்றால் குடும்பச் சுமையாவது குறையும்’’ என்று பெற்றோரும் மாணவியின் ஆசைக்கு முட்டுக்கட்டை போட்டுள்ளனர்.
இருந்தாலும், தன்னம்பிக்கையைக் கைவிடாத அந்த மாணவி திருவண்ணாமலை கலெக்டர் கந்தசாமிக்கு கடிதம் மூலமாக வேண்டுகோள் விடுத்தார். கலெக்டரின் பார்வைக்கு கடிதம் கிட்டியது. இந்த நிலையில், நேற்று மாலை மாணவியின் வீட்டுக்கு திடீரென நேரில் சென்று இன்ப அதிர்ச்சி கொடுத்தார் கலெக்டர் கந்தசாமி.

இனிப்பு, பழங்களை கொடுத்து மாணவியை வாழ்த்திய கலெக்டர், “என்ன படிக்க விரும்புகிறாயோ, தாராளமாக படி. கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணம் உட்பட முழு செலவையும் மாவட்ட நிர்வாகமே ஏற்றுக்கொள்ளும்’’ என்று உறுதி அளித்தார். மாணவி, “நான், பி.எஸ்ஸி வேதியியல் படித்து கலெக்டராகி உங்களைப் போன்று மக்களுக்காக சேவை செய்ய வேண்டும்’’ என்று பூரிப்புடன் கூறினார்.
மாணவிக்குச் சொந்த வீடு இல்லாததை முன்கூட்டியே அதிகாரிகள் மூலம் விசாரணை நடத்தி தெரிந்துகொண்ட கலெக்டர் கந்தசாமி, `பசுமை வீடு’ திட்டத்தின்கீழ் வீடு கட்டுவதற்கான ஆணையையும் வழங்கி நெகிழ வைத்தார். மாணவியும் அவரின் பெற்றோரும் கலெக்டருக்கு நன்றித் தெரிவித்துக் கொண்டனர்.