விலையில்லாப் பாடப்புத்தகங்களை தனது பள்ளியில் படிக்கும் 57 மாணவர்களுக்கு, சொந்த வாகனத்தில் 110 கிலோமீட்டர் தூரம் பயணித்து வழங்கியதோடு, மாணவர்களுக்கு அவரவர் வீட்டின் அருகே வைத்து பாடம் நடத்திய அரசுப் பள்ளி ஆசிரியருக்கு, பெற்றோர்களிடம் இருந்து பாராட்டுகள் குவிந்து வருகிறது.

கரூர் மாவட்டம், க.பரமத்தி ஒன்றியத்தில் இருக்கிறது தொட்டியபட்டி. கரூர் மாவட்டத்தின் மேற்கு எல்லையாக திருப்பூர் மாவட்டத்தை ஒட்டி இருக்கும் ஊர் இது. இந்தக் கிராமத்தில், ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது.
இந்தப் பள்ளியில், 67 மாணவர்கள் கல்வி பயின்று வந்தனர். கடந்த கல்வி ஆண்டில் 5- ம் வகுப்பு படித்து முடித்த மாணவர்கள் வெளியில் போக, தற்போது 2- ம் வகுப்பு முதல் 5- ம் வகுப்பு வரை, 2020 – 21 ம் கல்வி ஆண்டில் கல்வி பயில்கின்றனர்.

தற்போது, கொரோனா கால விடுமுறையால், மாணவர்கள் பள்ளிக்கு வர இயலவில்லை. இந்தப் பள்ளியில் படிக்கும் 57 மாணவர்களுக்கும் வழங்க ஏதுவாக, தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை சார்பில் விலையில்லாத இலவச பாடப்புத்தகங்களும், புத்தகப்பைகளும் அனுப்பிவைக்கப்பட்டது. கொரோனா காலம் என்பதால், புத்தகங்களை வாங்க மாணவர்களையும், அவர்களது பெற்றோர்களையும் பள்ளிக்கு வரவழைக்க, இந்தப் பள்ளி தலைமை ஆசிரியர் மூர்த்திக்கு விருப்பமில்லை.
Also Read: கரூர்: `4 ஆசிரியர்கள் இல்லை; ப்ளஸ் ஒன்னில் 100 சதவிகிதத் தேர்ச்சி’ – சாதித்த அரசுப் பள்ளி
ஏழ்மைநிலையில் உள்ள பல மாணவர்களின் பெற்றோர்களிடம் வாகன வசதி இல்லாததால், பள்ளிக்கு வர சிரமப்படுவார்கள் என்று தலைமை ஆசிரியர் நினைத்திருக்கிறார். அதன்காரணமாக, பள்ளியில் படிக்கும் 13 கிராமங்களைச் சேர்ந்த 57 மாணவர்களின் வீடுகளுக்கே, தனது சொந்த கார் மற்றும் ஆம்னி வேன் மூலம் புத்தகங்களை கொண்டுப் போய் வழங்கி, மாணவர்களையும், அவர்களது பெற்றோர்களையும் நெகிழவைத்திருக்கிறார் தலைமை ஆசிரியர் மூர்த்தி.

இதற்காக, மூர்த்தி 110 கிலோமீட்டர் தூரம் வரை பயணித்திருக்கிறார். புத்தகங்களை வழங்கியதோடு, கையோடு மாணவர்களுக்கு சாலையிலேயே வைத்து சில பாடங்களை நடத்தி, `இதுபற்றி நாளை ஆன்லைன் மூலம் டெஸ்ட் வைப்பேன்’ என்று கூறிவந்திருப்பது, பெற்றோர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிருக்கிறது.
தொட்டியப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் தலைமை ஆசிரியர் மூர்த்தியிடம் பேசினோம்.
“விலையில்லா பாடப்புத்தகமும், புத்தகப்பையும் விநியோகிக்க வேண்டும் என்ற பள்ளிக்கல்வித் துறையின் அரசாணைக்கு இணங்க, நான் நேராக சென்று புத்தகங்களை கொடுக்க முடிவு செய்தேன். அதற்காக, எனது கார் மற்றும் ஒரு ஆம்னி வேனில் புத்தகங்களை எடுத்துக்கிட்டு, ஒவ்வொரு மாணவர் வீடாக போய் வழங்கத் தொடங்கினோம். 57 மாணவர்கள் வீடுகளுக்கும் நேரில் சென்று புத்தகங்கள் மற்றும் புத்தகப் பைகளை வழங்கினோம். அதோடு, புதிய புத்தகத்தில் உள்ள முதல் பாடத்தை மாணவர்களின் வீடுகளிலும், மர நிழல் மற்றும் கோயில் அருகில் என கிடைத்த இடத்தில் நின்று, மாணவர்களையும், பெற்றோர்களையும் உற்சாகப்படுத்த பாடம் நடத்தினேன். அதோடு, `1 முதல் 5 – ம் வகுப்பு வரையில் தேவையான பாடங்களை கல்வி தொலைக்காட்சியில் தினமும் மாலை 5 முதல் 7 மணிக்குள் ஒளிப்பரப்புவாங்க’ என்ற தகவலை ஒவ்வொரு மாணவரிடமும் சொன்னேன்.

தவிர, பாடப்புத்தகத்தில் உள்ள க்யூ.ஆர் கோடை ஆன்ட்ராய்டு போன் மூலமாக ஸ்கேன் செய்து, அதில் எப்படி பாடம் சம்பந்தப்பட்ட வீடியோக்களைப் பார்ப்பது, அதுசம்பந்தப்பட்ட மதிப்பீடுகளை தெரிந்துகொள்வது எப்படி என்று ஒவ்வொரு மாணவருக்கும், பெற்றோருக்கும் சொல்லிக்கொடுத்தேன். சில மாணவர்கள் வைத்திருக்கும் ஆன்ட்ராய்டு மொபைலில் க்யூ.ஆர் கோடை ஸ்கேன் பண்ணும் ஸ்கேனர் இல்லாமல் இருந்தது. அதை பிளேஸ்டோர் போய் எப்படி இன்ஸ்டால் பண்ணுவது என்றும் சொல்லிக்கொடுத்தேன்.
Also Read: கரூர்: கேலிகிராஃபி; 7 நாள்; 7 வீடியோக்கள்! – அசத்தும் அரசுப் பள்ளி ஆசிரியர்
மேலும், தினமும் மாணவர்கள் படிக்கும் பாடங்களை, பள்ளியின் வாட்ஸ்அப் குரூப்பில் எடுத்து பதிவிடுமாறு, அவர்களின் பெற்றோர்களிடம் கேட்டுக்கொண்டேன். தினமும் வீட்டுப் பாடங்களை நானும் வாட்ஸ்ஆப் மூலம் மாணவர்களுக்கு வழங்குவதாகத் தெரிவித்தேன். அதோடு, வாட்ஸ்அப் மூலம் மாணவர்களின் கல்வியைத் தொடர்ந்து மேம்படுத்துவதாக உறுதிக்கொடுத்துட்டு வந்தேன். இதற்காக, தொட்டியப்பட்டி, தேவனம்பாளையம், வள்ளியம்மாள் நகர், வாய்க்கால்செட்டு, சடையப்ப நகர் என்று 13 ஊர்களில் வசிக்கும் மாணவர்களை சந்திக்க, மொத்தம் 110 கிலோமீட்டர் தூரம் பயணித்திருக்கிறேன்.

மாவட்டத்தின் கடைக்கோடி கிராமத்தில் இருக்கும் என் மாணவர்கள் அனைவரும் எளிய பின்புலங்களை கொண்டவர்கள். பல பெற்றோர்களிடம் செல்போன் வாங்கக்கூட வசதியில்லை. அப்படிப்பட்ட சூழலில் இருக்கும் மாணவர்கள் ஒவ்வொருவரையும், கொரோனா, ஊரடங்கு என்ற எல்லா இயற்கைத் தடைகளையும் கடந்து, ஆன்லைன் கிளாஸ்கள் மூலம் கல்வியில் செம்மைப்படுத்துவேன். இதற்காக, அடிக்கடி மாணவர்களை நேரில் சந்திக்கவும் இருக்கிறேன். கொரோனானால, இந்தப் பிள்ளைகளின் கல்வி சிதைந்துவிடக்கூடாது இல்லையா?” என்று அக்கறையோடு கேட்டு முடித்தார்.