பாஜகவில் தான் இணையவில்லை எனவும், திமுக தலைமை தன் மீது நடவடிக்கை எடுத்தால் பரவாயில்லை எனவும் அக்கட்சி எம்.எல்.ஏ கு.க.செல்வம் தெரிவித்துள்ளார்.
சட்டமன்ற உறுப்பினராகவும், திமுக தலைமை நிலைய செயலராகவும் கு.க.செல்வம் இருந்து வருகிறார். சென்னை திமுக மேற்கு மாவட்ட செயலாளர் ஜெ.அன்பழகன் மறைவுக்கு பிறகு அந்த பொறுப்பு இளைஞர் அணியைச் சேர்ந்த சிற்றரசு என்பவருக்கு வழங்கப்பட்டது. அதனால், கு.க.செல்வம் அதிருப்தியில் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகனுடன், கு.க.செல்வம் டெல்லி சென்றிருந்தார். அங்கு பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவின் வீட்டிற்கு சென்ற அவர் அங்கு பேச்சுவார்த்தை நடத்தினார். இதற்கிடையே அவர் பாஜகவில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது.
இந்நிலையில் ஜே.பி.நட்டாவை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கு.க.செல்வம், தான் பாஜகவில் இணைய வரவில்லை என்றார். தமிழ்க்கடவுள் முருகனை அவதூறாக பேசியவர்களை திமுக தலைவர் ஸ்டாலின் கண்டிக்க வேண்டும் எனத் தெரிவித்தார். அத்துடன் திமுகவில் தனக்கு அதிருப்தி இல்லை எனவும், ஆனால் திமுக தலைமை தன்மீது நடவடிக்கை எடுத்தால் பரவாயில்லை எனவும் அவர் கூறினார்.