மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த சில தினங்களாகப் பெய்யும் தொடர் மழையின் காரணமாகக் குற்றாலம் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. சில்லென்ற காற்றும் சாரல் மழையும் பெய்து மனதுக்கு இதமாக இருக்கிறது. மழையின் காரணமாக மெயின் அருவி, ஐந்தருவி ஆகியவற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டிருக்கிறது.

பழைய குற்றாலம் அருவி, புலியருவி ஆகியவற்றிலும் தண்ணீர் கொட்டுகிறது. வழக்கமாக, குற்றாலம் சீஸன் சமயங்களில் கூட்டம் அலைமோதுவது வழக்கம். சீஸனை அனுபவிப்பதற்காகவே சென்னை உள்ளிட்ட வெளியூர்களில் இருந்து மக்கள் வருவதை வழக்கமாக வைத்திருந்தார்கள்.
Also Read: அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வாய்ப்பு… குற்றாலம் அருகே குக்கிராமத்தில் அசத்தும் ஐ.டி. நிறுவனம்!
கொரோனா பரவல் காரணமாகப் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் வெளியூர்களில் இருந்து மக்கள் வரவில்லை. சமூக விலகல் காரணமாக உள்ளூர் மக்களையும் குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதிக்கவில்லை. அதனால், அருவிகள் ஆர்ப்பரித்தபோதிலும் ஆள் நடமாட்டமின்றி வெறிச்சோடிக் காணப்படுகிறது.

பொதுமக்கள் வராததால் குற்றாலம் சீஸனை நம்பிக் கடைகளை ஏலம் எடுத்திருந்த வியாபாரிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இந்த ஆண்டு தங்களின் வருமானம் முழுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக ஹோட்டல் உரிமையாளர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள், கடைக்காரர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில், ஐந்தருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டபோது காட்டாற்று வெள்ளத்தில் இழுத்து வரப்பட்ட காட்டுப்பன்றி அருவியின் மேலிருந்து விழுந்துள்ளது. தாடையில் பலத்த அடி பட்டதால் விழுந்ததும் இறந்துவிட்டது.

ஐந்தருவி பகுதியில், பாதுகாப்புக்கு நின்ற போலீஸார் இதுபற்றி வனத்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். வனத்துறை அதிகாரிகள் தலைமையில் வந்த குழுவினர், காட்டுப்பன்றியை வனப்பகுதிக்குள் கொண்டு சென்று புதைத்தனர்.