குழந்தையின் உயிர்காக்கும் வேலி தாய்ப்பால். அதுவே ஒரு குழந்தையின் முதல் நோய் தடுப்பு மருந்தாகவும் அமைகிறது. இன்று உலக தாய்ப்பால் வாரத்தின் மூன்றாம் நாள். ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் 7ம் தேதி வரை உலக தாய்ப்பால் வாரம் கொண்டாடப்படுகிறது. கொரோனா காலத்தில் தாய்ப்பாலின் ஈடுஇணையற்ற பங்கு குறித்தும், தாயும் சேயும் எப்படி நோயிலிருந்து பாதுகாத்துக் கொள்வது என்பது குறித்தும் மகப்பேறு மற்றும் பெண்கள் நல மருத்துவர் சசித்ரா தாமோதரனுடன் கலந்துரையாடினோம். அவர் கூறிய விளக்கங்களை இங்கு பார்க்கலாம்.

தாய்ப்பாலில் இருக்கக்கூடிய தன்னிகரற்ற நன்மைகள், ஏன் தாய்ப்பால் ஒரு வரப்பிரசாதம் ஆகியவை குறித்து முதல் பகுதியில் எழுதப்பட்டுள்ளது. அதை கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள்

தாய்ப்பாலுக்கு இணையான சிறந்த உணவு இவ்வுலகில் உண்டோ?- உலக தாய்ப்பால் வாரம் (பகுதி 1) https://bit.ly/39NWYIK

கொரோனா காலத்தில் தாய்ப்பாலின் ஈடுஇணையற்ற மகத்துவம் குறித்த ஒரு பகுதி இரண்டாம் பகுதியில் எழுதப்பட்டுள்ளது. அதை கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள்.

கொரோனா காலமும்… தாய்ப்பாலின் ஈடுஇணையற்ற மகத்துவமும்…- உலக தாய்ப்பால் வாரம் (பகுதி 2) https://bit.ly/3hXlXfw

image

கொரோனாவால் ஒரு குழந்தை பாதிக்கப்பட்டால் அந்நோயை எதிர்த்து போராடும் ஊட்டச்சத்து தாய்ப்பாலில் உள்ளதா?

Anti-Viral, Anti-Bacterial போன்ற கூறுகள் தாய்ப்பாலில் அதிகம் இருப்பதால் அவை எல்லாம் ஒன்றிணைந்து குழந்தைக்கு நல்ல நோய் எதிர்ப்பு சக்தியை தருகின்றன. அந்த நோய் எதிர்ப்பு சக்தியின் காரணமாக கொரோனா போன்ற எல்லா வைரஸ்களிலும் இருந்து குழந்தையை காக்க வல்லது தாய்ப்பால்.

எடை குறைவாக உள்ள தாய்மார்களுக்கு தாய்ப்பால் சுரப்பில் பிரச்னை இருக்குமா?

ஒரு தாயின் எடைக்கும் தாய்ப்பால் சுரப்பிற்கும் எந்த தொடர்பும் இல்லை என பல ஆய்வுகளில் நிரூபணமாகியுள்ளது. ஆனால், ஊட்டச்சத்து குறைவாக காணப்படும் தாய்மார்களுக்கு நிச்சயமாக தாய்ப்பால் குறைவாக சுரக்கும். ரத்த சோகையும் ஒரு காரணமாக அமைகிறது. ஊட்டச்சத்து மிகுந்த கீரைகள், காய்கறி, பழங்கள் எடுத்துக்கொள்வது சிறந்தது. இயற்கை தரும் எந்த உணவும் நமக்கு எதிரானது இல்லை. மேலும், புரதச்சத்து மிகுந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக, முட்டை, மீன், கீரைகள், பருப்பு வகைகள் போன்றவை தாய்ப்பால் சுரப்பில் பெரும் பங்கு வகிக்கின்றன. அதிக களோரிகள் மிகுந்த எண்ணெய் உணவுகளை தவிர்க்க வேண்டும்.

image

கொரோனா காலத்தில் குழந்தைகளை எப்படி நோயிலிருந்து காத்து பராமரிப்பது?

தற்காலத்தில் நாம் எந்த நோயுடன் போராடி வருகிறோம் என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். கொரோனா என்பது ஒருவரிடமிருந்து மற்றவரிடம் எளிதில் பரவக்கூடிய தொற்று. ஆகவே, சிறு குழந்தைகளுக்கு நாம் ஆரம்பத்திலேயே சில நல்ல பழக்கங்களை கற்றுக்கொடுக்க வேண்டும். முதலாவதாக, கைகளை அடிக்கடி கழுவுவது, மாஸ்க் அணிவது, இருக்குமிடத்தை சுத்தமாக வைத்துக்கொள்வது, தனிமனித இடைவெளி போன்றவற்றை குழந்தைகளுக்கு புரியும் விதத்தில் கற்றுக்கொடுக்க வேண்டும். இரண்டாவது, குழந்தைகளுக்கு தடுப்பு மருந்துகளை காலம் தாழ்த்தாமல் முறையாக செலுத்திவிட வேண்டும். சுலபமாக சொல்லப்போனால், ஒரு குழந்தைக்கு முதல் தடுப்பு மருந்து என்னவென்றால், அது தாய்ப்பால். தாய்ப்பாலை விட ஒரு குழந்தைக்கு முதல் சிறந்து தடுப்பு மருந்து எதுவுமில்லை.

கொரோனாவில் இருந்து குணமடைந்த தாய், தாய்ப்பால் கொடுக்கும் முன் செய்யவேண்டியவை என்ன?

கொரோனாவில் இருந்து குணமடைந்துவிட்டாலும் மீண்டும் தொற்று பாதிக்குமா இல்லையா என்பதை நம்மால் யூகிக்க முடியாது. எனவே, நோயிலிருந்து மீண்ட தாய், தன் குழந்தைக்கு நோய் தாக்காமல் இருக்க கை கழுவுதல், முகக்கவசம் அணிதல் ஆகியவற்றில் கண்டிப்பாக கவனம் செலுத்திவிட்டு குழந்தைக்கு பாலூட்டலாம். ஒருவேளை, ஒரு தாய் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தால், தாய்ப்பால் வங்கி பெருமளவு கைகொடுக்கிறது. தாய்ப்பால் தானம் கொடுக்க உதவும் தாய்மார்கள் முன்வந்து கொடுக்கும் தாய்ப்பால், முறையான பரிசோதனைக்குப் பின் சேகரிக்கப்பட்டு குழந்தைக்கு அளிக்கப்படுகிறது. எனவே, தாயை பிரிந்து பசியால் வாடும் குழந்தைகளுக்கு தாய்ப்பால் வங்கி ஒரு சிறந்த வரப்பிரசாதம்.

image

பால் சுரக்கும் தாய்மார்களின் மனநிலையில் குடும்பச் சூழல் எந்த அளவிற்கு பங்கு வகிக்கிறது?

தாய்ப்பால் சுரப்பில் காரணமாக விளங்கும் ஹார்மோன்களில் முக்கியமானது ஆக்ஸிடோசின் ஹார்மோன். இதை ஹாப்பி ஹார்மோன் (Happy Harmones) என்கிறார்கள். ஆக்ஸிடோசின் ஹார்மோனின் அளவு அதிகமாக இருந்தால் தானாகவே பால் சுரப்பும் அதிகமாக இருக்கும். தாயும் மகிழ்ச்சியாக இருப்பார். எனவே, ஒரு தாய் தன்னை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ளவில்லை என்றால் மனஅழுத்தம் காரணமாக இயற்கையாகவே ஆக்ஸிடோசின் ஹார்மோன் அளவு குறையும். ஹார்மோனின் அளவு குறைகையில் தாய்ப்பால் சுரப்பும் குறைந்துவிடுகிறது. ஆகவே, குடும்பச் சூழல் இதில் மிகப்பெரிய பங்கு வகிக்கிறது. மிக அவசியமானதும் கூட. குடும்பச் சூழல் மகிழ்ச்சியாக இருந்தால்தான் தாயும் மகிழ்ச்சியாக இருப்பார், தாய்ப்பால் சுரப்பும் பிரச்னையின்றி இயல்பாக இருக்கும். பொதுவாகவே பேறு காலத்திற்கு பின் ‘பிரசவத்திற்கு பிந்தைய மனஅழுத்தம்’ (Postpartum Depression)-னிற்கு ஆளாவது அதிகம். தூக்கம் கெடுவது, தனக்கான நேரத்தை ஒதுக்கமுடியாமல் போவது போன்றவை இதில் அதிகம். இது போன்ற சூழ்நிலையை கையாள குடும்பச் சூழலும், குறிப்பாக கணவரும் உறுதுணையாக இருத்தல் அவசியமாகிறது.

image

பேறு காலத்திற்கு முன்னும் பின்னும் ‘ஜங்க் ஃபுட்’ உண்டால் பால் சுரப்பில் என்னென்ன தாக்கத்தை அவை ஏற்படுத்துகின்றன?

ஜங்க் உணவுகளில் இருக்கும் பெரிய பிரச்னை, களோரிகள். களோரிகள் அதிகமாக இருப்பதால் வரக்கூடிய பிரச்னைகள் ஏராளம். பேறு காலத்தில் ஒரு தாய் அடிக்கடி ஜங்க் உணவுகளை எடுத்துக்கொண்டால் அது பெரும் விளைவுகளை ஏற்படுத்திவிடும். ஊட்டச்சத்தை குறைப்பதால் தாய்ப்பால் சுரப்பையும் குறைத்துவிட்டு, அவர்களை உடல் பருமனாகவும் மாற்றிவிடும். எனவே அதுபோன்ற உணவுகளை முற்றிலுமாக தவிர்ப்பது நல்லது.

image

பிரசவத்திற்கு பிந்தைய மனஅழுத்தத்தை (Postpartum Depression)கையாள்வது எப்படி?

இதில்தான் குடும்பச் சூழலின் பங்கு அதிகம். ஒரு தாய்க்கு சுகப்பிரசவம் என்றால், அது எதிர்பாராத வலியைத் தரக்கூடும். எது செய்தாலும் அதில் வலி உணரப்படும் என்பதால் அந்த வலியே ஒரு தாய்க்கு மனஅழுத்தத்தை கொண்டு சேர்க்கும். தனக்கான நேரம் குறையும்போது தன்னம்பிக்கையை அது குறைக்கும். ‘என்னடா இது..’ என்பது போன்ற வறட்சியை அளிக்கும். இந்த இடத்தில்தான் குடும்ப உறுப்பினர்கள் பக்கபலமாக நின்று வேலைகளில் பங்கெடுத்து தாயிடம் மனம்விட்டு பேச வேண்டும். பாலூட்டும் தாயும் தனது கணவரிடம் மனம்விட்டு பேசுவது, நல்ல உணவு, ஆறுதலான வார்த்தைகள், பிடித்த புத்தகம், பிடித்த பாடல்கள் ஆகியவை செய்வது நல்ல உணர்வை தரும். இவை எல்லாவற்றையும் செய்தும் பலனில்லை எனில், மருத்துவரிடம் கவுன்சிலிங் தாய்க்கு கண்டிப்பாக தேவை என்பதை புரிந்துகொள்ள வேண்டும். எந்த நிலையிலும் குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டலாம். ஆனால், இதுபோன்ற பிரவத்திற்கு பிந்தைய மனஅழுத்தம் சமயத்தில் குழந்தைக்கு உடல்ரீதியான துன்புறுத்தல் ஏற்படலாம் என்பதால் தாய்ப்பால் கொடுக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள். ஆகவே, இவை எல்லாவற்றையும் கண்டறிந்து சரி செய்வதில்தான் குடும்பச் சூழல் முக்கியமாகிறது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.