பிறந்த குழந்தைக்கு அடிப்படையான உணவு தாய்ப்பால். முதல் சிறந்த தடுப்பு மருந்தும் கூட. இன்று உலக தாய்ப்பால் வாரத்தின் இரண்டாம் நாள். ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் 7ம் தேதி வரை உலக தாய்ப்பால் வாரம் கொண்டாடப்படுகிறது. கொரோனா காலத்தில் தாய்ப்பாலின் பங்கு குறித்தும், தாயும் சேயும் எப்படி நோயிலிருந்து பாதுகாத்துக்கொள்வது என்பது குறித்தும் மகப்பேறு மற்றும் பெண்கள் நல மருத்துவர் சசித்ரா தாமோதரனுடன் கலந்துரையாடினோம். அவர் கூறிய விளக்கங்களை இங்கு பார்க்கலாம்.

தாய்ப்பாலில் இருக்கக்கூடிய தன்னிகரற்ற நன்மைகள், ஏன் தாய்ப்பால் ஒரு வரப்பிரசாதம் ஆகியவை குறித்து முதல் பகுதியில் எழுதப்பட்டுள்ளது. அதை இங்கே கொடுக்கப்பட்டுள்ள லிங்கில் கிளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள்.

https://bit.ly/39NWYIK

தாய்ப்பால் கொடுக்க சரியான முறை என்ன? எத்தனை மணி நேரத்திற்கு ஒருமுறை தாய்ப்பால் கொடுத்தல் அவசியம்?

குழந்தை பிறந்த உடனேயே தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்பது பொதுவாக அனைவரும் அறிந்தது. ஆனால் ஒரு நாளைக்கு எத்தனை முறை கொடுக்க வேண்டும் என்பது குறிந்த விழிப்புணர்வு குறைவு. முதலில், குழந்தை பிறந்த 48 மணி நேரத்தில் இருந்து 72 மணி நேரம் வரை 2 மணி நேரத்திற்கு ஒருமுறை தாய்ப்பால் ஊட்டுவது மிகவும் அவசியம். அதன் பிறகு, குழந்தை எப்போதெல்லாம் பசியால் அழுகிறதோ அப்போது தாய்ப்பால் ஊட்டவேண்டும். அதற்கு பெயர் டிமாண்ட் ஃபீடிங் (Demand Feeding) ஆகும். குழந்தைக்கு தாய்ப்பால் போதுமானதாக அல்லது சரியாக உள்ளது என்பதை குழந்தையின் நல்ல தூக்கம், உடல் எடை கூடுவது போன்றவை மூலம் தெரிந்துகொள்ளலாம்.

image

ஒரு தாய்க்கு எந்த நிலை சரியாகவும் வசதியாகவும் உள்ளது என்பதை முதலில் அறிய வேண்டும். அதுவே சிறந்தது. இதில் சில முறைகள் உள்ளன, அதில் முக்கியமானது, கிரேடல் முறை (Cradle Method Feeding) ஆகும். குழந்தையை முறையாக தாயின் மார்போடு அணைத்து தாய்ப்பால் ஊட்டுவதே இந்த முறை. இந்த முறை ஏன் சிறந்தது என்றால், இது தாய்க்கும் சேய்க்கும் ஒரு உறவு பாலத்தை உண்டாக்குகிறது. படுத்துக்கொண்டு குழந்தைக்கு பாலூட்டுவதை தவிர்க்க வேண்டும். Latching முறையும் அடிப்படையாகவே முக்கியமாகிவிடுகிறது. இந்த முறையில், ஒரு தாய், தனது மார்பகத்தை பிடித்து குழந்தைக்கு பாலூட்டுவதால் காம்புப்பகுதியில் காயம் ஏற்படுவதை தவிர்க்க முடிகிறது, குழந்தைக்கும் தன்னிறைவை தருகிறது.

மார்பகங்களில் பால் கட்டுவதை (Breast Engorge)தடுப்பது எப்படி? அவ்வாறு ஆனால், அதிலிருந்து எப்படி மீள்வது?

முதலில், ஒரு தாய்க்கு தனது மார்பகங்களில் ஏன் பால் கட்டிவிடுகிறது என்பதை புரிந்துகொள்ள வேண்டும். அதற்கு சில காரணங்கள், சரியான முறையில் குழந்தையை அணைத்து பாலூட்டாதது, குழந்தைக்கு பால் பற்றாக்குறையாக இருப்பதாக நினைத்து தாய்ப்பாலை கொடுக்காமல் தள்ளிப்போடுவது போன்றவை முக்கிய காரணங்கள். இதில் முக்கிய பங்கு வகிப்பது குடும்பச் சூழல். நல்ல எண்ணங்களும், மகிழ்ச்சியாக இருப்பதும் அவசியம். பால் கட்டும் பட்சத்தில் அதிலிருந்து மீள மார்பகங்களில் உத்தரம் கொடுக்க வேண்டும். அல்லது மென்மையாக மசாஜ் செய்து பால் கொடுத்தால் அவை மார்பகங்களில் வலியைக் குறைக்கும். இதில் எந்த முறையும் பலனளிக்கவில்லை எனில், மருத்துவரை அணுகுவது சிறந்தது. மேலும், இந்த சூழ்நிலைகளில் Breast Pumps பயன்படுத்துவது இன்னும் சுலபமாக இருக்கும்.

image

தாய்ப்பால் குறைவாக சுரக்க என்ன காரணம்? அதை சரி செய்வது எப்படி?

பெண்களுக்கு பால் குறைவாக சுரக்கிறது என்பது மாயை. பால்சுரப்பு என்பது இயற்கை அளித்துள்ள வரம். அதனால், பால்சுரப்பு குறைவு என்பது மனம் சார்ந்த பிரச்னை. இருப்பினும், பால் சுரப்பது குறைவாக உள்ளது என்றால் அது, அந்த தாய்க்கு உடல்ரீதியான சில பிரச்னைகளும் காரணமாக இருக்கலாம். ஆனால் இதுதான் காரணம் என எந்த ஆய்விலும் உறுதி செய்யப்படவில்லை. உணவு பழக்க முறைகளில் கவனமாக இருக்க வேண்டும். தூக்கமின்மை, முறையற்ற உணவு பழக்கங்கள் பால் சுரப்புகளை குறைக்கலாம் என்பதால் தாய்மார்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஒரு தாய்க்கு ‘இது என்னுடைய குழந்தை, என்னால் முழுமையாக பாலூட்ட முடிவும்’ என்ற அந்த உணர்வும், நல்ல குடும்பச் சூழலும் நல்ல பால் சுரப்பை தரும்.

image

தாய்ப்பால் நன்றாக சுரக்க என்ன மாதிரியான பயிற்சிகள் தேவை?

தாய்ப்பால் நன்றாக சுரக்க தேவை, மனரீதியாக ஒரு தாய் தன்னை முதலில் தயார்படுத்திக் கொள்வது. கருவுற்றிருக்கும் 4 அல்லது 5 மாதத்திலிருந்தே பயிற்சி தேவைப்படும். தமிழகத்திலும் பெரும்பாலான மடுத்துவமனைகளிலும் இது தொடர்பான பல வழிகாட்டுதல்களை மருத்துவர்கள் தருகிறார்கள். முதலில் கவுன்சிலிங் தரப்பட்டு, தாய்ப்பால் குறித்தும் மார்பகங்கள் பற்றிய புரிதலை ஏற்படுத்தும் வகையிலும் சொல்லிக்கொடுக்கப்படுகிறார்கள். கவுன்சிலிங் 3 வகையாக பிரிக்கப்படுகிறது. மனரீதியாக தயார்படுத்துதல், பாலூட்டும் முறை, உணவு பழக்கம் ஆகியவை உணர்த்தப்பட்டு தாயை தயார்படுத்திவிடுவார்கள்.

image

கொரோனா சமயத்தில் தாய் உடல்நலக் குறைவால் அவதிப்பட்டாலோ அல்லது கொரோனாவுக்கான சில அறிகுறிகள் தென்பட்டாலோ தாய்ப்பால் கொடுக்கலாமா? குழந்தைக்கு அது பாதிப்பை ஏற்படுத்துமா?

கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒரு தாய், குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கலாம். ஒரு தாய் அறிகுறிகளே இல்லாமல் கொரோனா தொற்றுக்கு ஆளானால், சுத்தமாக தன்னை வைத்துக்கொண்டு (சுத்தமான இடம், அடிக்கடி கைகழுவுதல், முகக்கவசம் அணிதல், கையுறை அணிதல்) குழந்தைக்கு நேரடியாக தாய்ப்பால் கொடுக்கலாம். மூச்சுத்திணறல் போன்ற எல்லா அறிகுறிகளோடும் ஒரு தாய் கொரோனா தொற்றுக்கு ஆளானால், பிரஸ்ட் பம்ப் (Breast Pump) கொண்டு தாய்ப்பாலை ஒரு பாட்டிலில் சேகரித்து குழந்தைக்கு கொடுக்கலாம். தாய்ப்பால் மூலம் தொற்று பரவாது என்ற ஆய்வுகள் ஆறுதலை தருகின்றன. பிறந்த குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்திக்கான அடித்தளத்தை அமைப்பதே தாய்ப்பால்தான். எனவே, கொரோனாவில் இருந்து குழந்தையை காக்கும் ஆயுதமும் தாய்ப்பாலிடம் உள்ளது. முதலில் நாம் புரிந்துகொள்ள வேண்டியது, எந்த நிலையிலும் கொரோனா பாதித்த தாயின் தாய்ப்பால் மூலம் கொரோனா பரவாது என எல்லா ஆய்வுகளிலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எனவே, தாய்ப்பால் சாதகமே தவிர, பாதகமில்லை என்பதை நாம் உணர வேண்டும். பொதுவாகவே குழந்தைகளிடம் எதிர்ப்பு சக்தி உள்ளதால் தாய்ப்பாலுடன் இணைந்து போராடி கொரோனா போன்ற நோய்களில் இருந்து காக்கின்றன.

image

கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டு வரும் தாய்மார்களுக்கு பால் சுரப்பு குறைவாக இருக்குமா? அப்படி இருந்தால் அதனை சரி செய்வது எப்படி?

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்ததாலும், மனஅழுத்தம் போன்றவையாலும் பால் சுரப்பு குறைவாக இருக்க வாய்ப்பு உள்ளது. ஆனால் அதிலிருந்து மீள, நல்ல குடும்பச் சூழலும், தன்னம்பிக்கையும், நல்ல உணவும் பழக்கங்களும் (புரதச்சத்து மிகுந்த கீரைகள், பழங்கள், காய்கறிகள், முட்டை, மீன்) கைகொடுக்கின்றன. மேலும், பால் சுரப்பில் சிரமம் இருந்தால் அல்லது மீண்டும் பால் சுரப்பை ஊக்கப்படுத்த மருத்துவரின் ஆலோசனைகளின் படி மருந்து எடுத்துக்கொள்ளலாம்.

கொரோனா காலமும்… தாய்ப்பாலின் ஈடுஇணையற்ற மகத்துவமும்… (தொடரும்)

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.