ஜூன் 12, 2005 : பாகிஸ்தான் : இந்தியா – பாகிஸ்தான் கால்பந்து அணிகள் நட்பு ரீதியாக மோதின. பாகிஸ்தானுக்கு ஆதரவாக உள்ளூர் ரசிகர்கள் குழுமியிருக்க பரபரப்பாக நடைபெற்ற அந்த ஆட்டத்தில் கோல் போடுவதையே இலக்காக வைத்திருந்தன அறிமுக வீரராக களம் இறங்கிய அந்த இருபது வயது இளைஞனின் கால்கள். 

image

முதல் போட்டி என்பதால் அந்த இளைஞன் பந்தை கோல் போஸ்டை நோக்கி டார்கெட் செய்து கொண்டே இருந்தான். ஆட்டத்தின் 65வது நிமிடத்தில் அவனது டார்கெட் கோலானது. முதல் கோலை தில்லாக பாகிஸ்தான் ரசிகர்களுக்கு மத்தியில் கொண்டாடி தீர்த்தான் அந்த இளைஞன்.

அன்று முதல் இன்று வரை சர்வதேச அரங்கில் பதினைந்து ஆண்டுகளாக இந்திய அணிக்காக கோல் போடுவதை மட்டுமே இலக்காக வைத்து இயங்கி வருகிற அந்த இளைஞன் தான் இந்திய கால்பந்தாட்ட அணியின் கேப்டன் சுனில் சேத்ரி. அவருக்கு இன்று பிறந்த நாள்.

image

36வது வயதில் அடியெடுத்து வைக்கும் சுனில் சேத்ரி செகண்ட்ராபாத் நகரில் பிறந்தவர். இந்திய ராணுவத்தில் அதிகாரியாக வேலை செய்தவர் சேத்ரியின் அப்பா கே.பி.சேத்ரி. அவரது அம்மா சுசிலா சேத்ரி நேபாளத்தை சேர்ந்தவர். 

சேத்ரிக்கு கிரிக்கெட் தான் பிடித்தமான விளையாட்டு. சச்சின் அவரது பேவரட் பேட்ஸ்மேன். அதனால் அவரும் கிரிக்கெட்டில் சாதிக்க விரும்பி தன் பள்ளியின் உடற்பயிற்சி ஆசிரியரை அணுகியுள்ளார். ‘கிரிக்கெட் கிட் கொண்டு வந்தால் பயிற்சி கொடுக்க தயார்’ என சொல்லியுள்ளார் அந்த ஆசிரியர். 

‘கிரிக்கெட் கிட் வாங்க காசு இல்லாததால் எனது கிரிக்கெட் கனவை கலைத்து விட்டு புட்பாலில் ஆர்வம் காட்ட தொடங்கினேன்’ என கால்பந்தாட்டத்தில் தனக்கு ஆர்வம் வந்த கதையை அவரே ஒரு பேட்டியில் சொல்ளியுள்ளார்.

image

கால்பந்தை ஆப்ஷனலாக எடுத்துக் கொண்டு விளையாட ஆரம்பிதிருந்தாலும் அவரது ரத்தத்தில் கால்பந்தாட்டம் இரண்டற கலந்தது என சொல்லலாம். அவரது அப்பாவும், அம்மாவும் கால்பந்தாட்ட வீரர்கள். வட்டம், மாவட்டம் என தன் பள்ளி அணிக்காக அசத்தலான ஆட்டத்தினை வெளிப்படுத்தி பல கோல்களை போட்டுள்ளார். பந்தை அடித்து ஆடுவதில் சேத்ரி கால் தேர்ந்தவர். 

2001இல் தாய்லாந்தில் நடைபெற்ற ‘ஆசிய ஸ்கூல் சாம்பியன்ஷிப்’ தொடரில் சேத்ரி ஸ்கொர் செய்த நான்கு கோல்கள் அவரது விளையாட்டு கெரியரில் திருப்புமுனையாக அமைந்தது. 

image

சிறந்த கால்பந்தாட்ட வீரர்களை உருவாக்குவதே உள்நாடுகளில் இருக்கும் கால்பந்தாட்ட கிளப் அணிகள் தான் என விளையாட்டு ஆர்வலர்கள் சொல்வதுண்டு. சேத்ரி மேற்குவங்கத்தின் ‘மேகான் பகன்’ கிளப் அணியில் விளையாடி தொழில்முறை கால்பந்தாட்ட வீரராக தன்னை தகவமைத்துக் கொண்டு இளையோருக்கான இந்திய கால்பந்தாட்ட அணியில் விளையாடவும் செய்தார். அப்படியே சீனியர் கல்பாந்தட்ட அணியில் மாற்று வீரராக இருபது வயதில் இணைந்தார். 

பாகிஸ்தானுக்கு எதிரான நட்பு ரீதியிலான ஆட்டத்தில் இந்திய அணியின் அப்போதைய கேப்டன் பாய்ச்சங் பூட்டியா இல்லாததால் முன்கள வீரராக விளையாடும் வாய்ப்பை பெற்றார்.

image

பின்னர் இந்திய அணியில் தவிரிக்க முடியாத வீரராக சேத்ரி உருவானார். 

சர்வதேச கால்பந்தாட்ட அரங்கில் இந்திய அணிக்காக கோல்களை அடித்தது மட்டுமின்றி விங்கராக முன்களத்தில் விளையாடும் ஸ்ட்ரைக்கர்களுக்கு பந்தை பாஸ் செய்வதிலும், ட்ரிப்பிள் செய்வதிலும் சேத்ரி வல்லவர். 

image

பாய்ச்சங் பூட்டியாவின் ஓய்வுக்கு பிறகு இந்திய அணியை முன்னின்று வழிநடத்தி செல்லும் வாய்ப்பை பெற்றார் சேத்ரி. அவரது தலைமையில் பல முக்கியமான தொடர்களில் இந்தியா சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.

உலகளவில் தற்போது விளையாடி வரும் கால்பந்தாட்ட வீரர்களில் தன் நாட்டு அணிக்காக அதிக கோல்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் சேத்ரி இரண்டாவது இடத்தில் உள்ளார். இதுவரை 115 போட்டிகளில் விளையாடியுள்ள சேத்ரி 72 கோல்களை அடித்துள்ளார். 

அடுத்த சில ஆண்டுகளில் சேத்ரியை பல இளைஞர்கள் ரோல் மாடலாக எடுத்துக் கொண்டு கால்பந்தாட்டத்தை விரும்பி விளையாடலாம். அது நடந்தால் இந்தியா சர்வதேச அரங்கில் முன்னணி நாடுகளோடு போட்டி போட்டு விளையாடலாம்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.