மதுரையில் பழமையான மகாவீரர் சிலை மற்றும் ராஜராஜ சோழன் காலத்தில் இருந்த கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

மதுரை மாவட்டம் தே.கல்லுப்பட்டி அருகில் உள்ள காரைக்கேணி ஊராட்சிக்குட்பட்ட செங்கமேடு பகுதியில் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக கூறப்படும் மகாவீரர் சிற்பம் மற்றும் ராஜராஜசோழன் கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளன.

image

மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லூரி முதுகலை வரலாற்றுத் துறை தலைவர் முனைவர் முனீஸ்வரன் தலைமையிலான குழுவினர் செங்கமேடு பகுதியில் உள்ள பழமையான சத்திரம், கிணறு ஆகியவற்றை ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில் அங்குள்ள கற்களில் பழமையான தமிழ் மற்றும் வட்டெழுத்துக் கல்வெட்டுகள் இருந்தது தெரிய வந்தது. இந்தக் கல்வெட்டுகள் கி.பி.13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியனின் மெய்க்கீர்த்திக் கல்வெட்டு என்பதும் தெரியவந்தது.

image

இது மட்டுமன்றி சத்திரத்தின் தரையிலும், கிணற்றின் உள்ளேயும் 8 வட்டெழுத்து துண்டுக் கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளன. இவை காந்தளூர்ச்சாலை கலமறுத்தருளி என்ற விருதுப் பெயருடன் தொடங்கும் முதலாம் இராஜராஜசோழனின் 13-ஆம் ஆட்சியாண்டைச் சேர்ந்தவை எனக் கூறப்படுகிறது.

மேலும் 3¼ அடி உயரமும், 2¼ அடி அகலமும் கொண்ட மகாவீரர் சிலையும் கண்டறியப்பட்டுள்ளது. மூன்று சிங்கங்கள் கொண்ட பீடத்தில் அர்த்த பரியங்க ஆசனத்தில் அமர்ந்துள்ள மகாவீரர் இருபுறமும் சாமரம் வீசும் இரு இயக்கர்கள் உள்ளனர். தலைக்கு மேல் முக்குடையும், பின்புறம் பிரபாவளி என்னும் ஒளிவட்டமும் உள்ளன. இதன் மூலம் சிலையானது கி.பி. 9 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்பது தெரியவந்துள்ளது.

இது குறித்து தொல்லியல் துறை அதிகாரிகள் கூறும் போது “ கி.பி. 9 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி.13 ஆம் நூற்றாண்டு வரையில் இங்கு ஒரு சமணப்பள்ளி இயங்கி வந்த நிலையில் பிற்காலத்தில் அது அழிந்தது. இங்கு சிதறிக்கிடக்கும் செங்கற்களை வைத்து பார்க்கும் போது சமணப்பள்ளி முழுவதும் செங்கற்களால் கட்டப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. கல்வெட்டில் குறிப்பிடப்படும் திருஉண்ணாட்டூர் என்னும் ஊர், இப்பகுதியில் இருந்து அழிந்துபோன ஊராக இருக்கலாம். இங்கு இடைக்காலத்தைச் சேர்ந்த பானை ஓடுகளும், செங்கற்களும் அதிகளவில் சிதறிக் கிடக்கின்றனர்” என்றனர்.

 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.