ஐபிஎல் போட்டிகள்: அனைத்து சீன ஸ்பான்ஸர்களையும் தக்க வைக்க முடிவு

ஐபிஎல் நிர்வாகம் போட்டிகளுக்கான சீன ஸ்பான்ஸர்களை தக்க வைக்க முடிவு செய்துள்ளது.

கடந்த ஜூன் மாதம் லடாக் பகுதியில் இந்திய சீன வீரர்களுக்கிடையே மோதல் நடந்தது. இந்த மோதலின் தொடர்ச்சியாக இந்தியா, சீனாவிற்கு சொந்தமான 59 ஆப்களுக்கு இந்தியாவில் தடை விதித்தது. இந்தப் பிரச்னை காரணமாக ஐபிஎல் போட்டிகளுக்கு சீனாவிலிருந்து கிடைக்கும் ஸ்பான்ஸர் ஷிப்பில் சிக்கல் நிலவுமா என்ற சந்தேகம் எழுந்து வந்தது. ஞாயிற்றுக் கிழமை நடந்த  ஐபிஎல் நிர்வாகக் கூட்டத்தில் ஐபிஎல் நிர்வாகம் சீனாவின் தொலைபேசி நிறுவனமான  விவோ உட்பட அனைத்து ஸ்பான்ஸர்களையும் தக்க வைக்க முடிவு செய்துள்ளது.

image

இது குறித்து ஐபிஎல் நிர்வாகி ஒருவர் பிடிஐ நிறுவனத்திடம் கூறும் போது “ அனைத்து ஸ்பான்ஸர்களும் எங்களுடன் இருக்கிறார்கள் என்பதைத்தான் சொல்ல முடியும்” என்று கூறியுள்ளார்.

இந்த ஐபிஎல் போட்டிகள் அபு தாபி, துபாய்,ஷார்ஜா உள்ளிட்ட நகரங்களில் நடக்க உள்ளன. மதியத்திற்கு பிறகு நடக்கும் போட்டிகள் 3.30 மணிக்கும், மாலைக்குப் பிறகு நடக்கும் போட்டிகள் 7.30 மணிக்கும் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக ஐபிஎல் போட்டிகள் 49 நாட்கள் நடைபெறும் நிலையில் இப்போட்டிகள் 51 நாட்கள் நடைபெற இருக்கின்றன.

இப்போட்டிகள் இந்த ஆண்டு செப்டம்பர் 19 ஆம் தேதி முதல் நவம்பர் 10 ஆம் தேதி வரை நடக்கும் என ஞாயிற்றுக்கிழமை நடந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

image

இது மட்டுமல்லாமல் பிசிசிஐ தலைவர் கங்குலி இம்முறை பெண்களுக்கிடையேயான ஐபிஎல் போட்டிகளுக்கும் அனுமதி வழங்கியுள்ளார். இதற்காக 4 பெண் அணியினர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகவும், ஆண்களுக்கிடையேயான ஐபிஎல் போட்டிகள் நடக்காத நாட்களில் அவர்கள் விளையாட அனுமதிக்கப்படுவர் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM