ராஜகுடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதாலேயே என்னவோ தெரியாது ஜடேஜாவிடம் துளி பதற்றமும் இருக்காது. அதேசமயம் எந்தப் பந்தாவும் இருக்காது. டக் அவுட் ஆனாலும் சரி, சென்சுரி அடித்தாலும் சரி… முகத்தில் இருக்கும் சிரிப்பு எப்போதுமே மறையாது.

அணியின் தேவையைப் பொறுத்துதான் அன்றைய மேட்ச்சில் இவரின் ஆட்டம் இருக்கும். இவருக்கென தனி ஸ்டைலை உருவாக்கிக்கொள்ளவேயில்லை. அன்றைய போட்டியில் ஓப்பனிங் ஸ்பெஷலிஸ்ட்டுகள் யாரும் இல்லையென்றால் ஓப்பனிங்கில் ஆடுவார். வேறு ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள் வந்துவிட்டால் மூன்றாவது அல்லது நான்காவது டவுனில் ஆடுவார் என நிலையான பேட்டிங் பொசிஷன் இவருக்குக் கிடையாது. ஒரு தொடர் முழுக்க ஒரே பேட்டிங் பொசிஷனில் இவர் ஆடியதே கிடையாது. வலது கை பேட்ஸ்மேன், வலது கை மித வேகப்பந்து வீச்சாளர்.

அஜய் ஜடேஜா ஒரு பேட்டிங் ஆல்ரவுண்டர். பல போட்டிகளில் பார்ட்னர்ஷிப்களை உடைக்க ஜடேஜாவின் பெளலிங்கைப் பயன்படுத்தியிருக்கிறார் கேப்டன் அசாருதின். கேஷுவலாக வந்து பந்துவீசிவிட்டு சில பல விக்கெட்டுகளை எடுத்துவிட்டுப்போவார் ஜடேஜா. அதேபோல் ஃபீல்டிங்கிலும் செம ஸ்மார்ட். இந்திய வீரர்களும் தரையில் விழுந்தெல்லாம் கேட்ச் பிடிப்பார்கள், பவுண்டரிகளைத் தடுப்பார்கள், ரன் எடுக்க விரட்டி விரட்டி ஓடுவார்கள் என்பதை உலகுக்குக் காட்டியவர் அஜய் ஜடேஜா. அசாருதின் போன்ற ஃபீல்டிங்குக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பேட்ஸ்மேனுக்கு கீழே விளையாடியதால் இவருக்கான இடம் அணிக்குள் நிரந்தரமாக இருந்தது.

அசாருதின் – ஜடேஜா

ஜடேஜா என்றதுமே பலருக்கும் பாகிஸ்தானுக்கு எதிரான 1996 காலிறுதிப்போட்டித்தான் நினைவுக்கு வரும். ஆனால், இந்தப் போட்டிக்கு முன்பாக ஜிம்பாப்வேயுடன் நடந்த கடைசி லீக் போட்டியில் இதேபோன்ற ஒரு பவர்ப்ளே இன்னிங்ஸை ஆடியிருப்பார் ஜடேஜா. அந்தப் போட்டியில் கிடைத்த நம்பிக்கையில்தான் பாகிஸ்தானுக்கு எதிராக அடுத்து அப்படி ஒரு வெறித்தனமான ஆட்டமும் ஆடியிருப்பார்.

ஜிம்பாப்வேவுக்கு எதிரான அந்த ஆட்டத்தில் சச்சின் சிங்கிள் டிஜிட்டில் அவுட் ஆக, இந்தியாவின் ரன் ரேட் அதலபாதாளத்துக்குப் போயிருக்கும். சித்து 80 ரன்கள், காம்ப்ளி 106 ரன்கள் அடித்திருந்தாலும் அவை வெற்றிக்குப் போதுமானதாக இருக்காது. சித்து அவுட் ஆனதும் களத்துக்கு வந்த அஜய் ஜடேஜா 27 பந்துகளில் 44 ரன்கள் அடிப்பார். 2 சிக்ஸர், 3 பவுண்டரிகள்… இந்த 44 ரன்கள்தான் அன்று இந்தியாவின் வெற்றியை உறுதிசெய்தது. இல்லையென்றால் இந்தியா அன்று ஜிம்பாப்வேவுக்கு எதிரான உலகக்கோப்பை போட்டியில் தோல்வியை சந்தித்திருக்கும்.

அதிரடியான இந்த 44 ரன்கள்தான் ஜடேஜாவை பாகிஸ்தானுக்கு எதிராக மீண்டும் ஒரு அதிரடி ஆட்டம் ஆடத்தூண்டியது. பாகிஸ்தானுக்கு எதிரான அந்தக் காலிறுதிப்போட்டியில் 42-வது ஓவரில் அசாருதின் அவுட் ஆனதும் களத்துக்குள் வருவார் ஜடேஜா. இந்த மேட்சை அப்போது பார்த்தவர்களுக்கு இன்னும் நினைவிருக்கலாம். பெவிலியனில் ஓடிக்கொண்டும், வார்ம் செய்துகொண்டும் அடுத்து எப்போது விக்கெட் விழும், போய் அதிரடியாக ஆட வேண்டும் என பயங்கரத் துடிப்போடும், பரபரப்போடும் இருப்பார் ஜடேஜா.

அவர் எதிர்பார்த்ததுபோலவே விக்கெட் விழும். களத்துக்குள் வருவார். அப்போது இந்தியாவின் ஸ்கோர் 200 ரன்கள் மட்டுமே. எதிர்முனையில் வினோத் காம்ப்ளி. அசாருதினின் விக்கெட்டோடு அந்த ஓவரில் மூன்று ரன்கள்தான் கொடுத்திருப்பார் வக்கார் யூனுஸ். 8 ஓவர்களில் 1 மெய்டன் ஓவரோடு வெறும் 27 ரன்கள் மட்டுமே கொடுத்திருப்பார். ஆனால், வக்கார் யூனிஸ் தன் வாழ்நாளுக்கும் மறக்க முடியாதபடியாக அந்த ஆட்டத்தில் அவரின் கடைசி 2 ஓவர்கள் அமைந்தன.

Ajay Jadeja

வக்கார் யூனிஸின் ஒன்பதாவது ஓவர்… ஆட்டத்தின் 48வது ஓவர். அந்த ஓவரின் முதல் பந்தில் பவுண்டரிக்கு தூக்கியடிக்க முயற்சி செய்வார் ஜடேஜா. ஆனால், பந்து எட்ஜாகி கீப்பருக்குப் பின்னால் போய்விடும். இதனால் 3 ரன்கள்தான் கிடைக்கும். ஸ்ட்ரைக் எதிர்பாராதவிதமாக கும்ப்ளேவிடம் போய்விடும். ஆனால், கும்ப்ளே வக்காரின் அடுத்தடுத்தப்பந்துகளை பவுண்டரி ஆக்கி அதிர வைப்பார். ஐந்தாவது பந்தில் மீண்டும் ஜடேஜாவிடம் ஸ்ட்ரைக் வரும். கவர்ஸில் ஒரு சூப்பர் பவுண்டரி. அடுத்த பந்தில் ஒரு சிக்ஸர். இந்த ஒரே ஓவரில் மட்டும் 22 ரன்கள் கொடுத்திருப்பார் வக்கார்.

மீண்டும் கடைசி ஓவர் வக்கார் யூனிஸிடமே கொடுக்கப்படும். முதல் பந்தில் பவுண்டரி, இரண்டாவது பந்தில் மீண்டும் ஒரு லாங் ஆஃபில் சிக்ஸர் என வக்காரை பதறை வைத்தார் ஜடேஜா. மூன்றாவது பந்தும் சிக்ஸருக்குப் போகவேண்டியது. பந்து ஓழுங்காக பேட்டில் மீட் ஆகாததால் பவுண்டரி லைனுக்கு அருகே கேட்ச் கொடுத்து வெளியேறுவார் ஜடேஜா. 25 பந்துகளில் 45 ரன்கள். சட்டென இந்தியாவின் ஸ்கோரை 280 ரன்களுக்கு கொண்டுவந்துவிடுவார் ஜடேஜா. ஜடேஜாவின் இந்த இன்னிங்ஸ்தான் பாகிஸ்தானிடம் இருந்து இந்தியாவைக் காப்பாற்றும். கடைசியில் 39 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றிபெறும்.

90-களில் இந்தியா பெற்ற குறிப்பிடும்படியான பல முக்கியமான வெற்றிகளில் அஜய் ஜடேஜாவின் பெரும்பங்கிருக்கிறது. தனக்கெனப் பெரிதாக எந்த பிராண்ட் வேல்யூவும் உருவாக்கிக்கொள்ளாமல் அணியின் தேவைக்காகவே விளையாடியவர் ஜடேஜா. இந்தியாவின் முதல் ஜான்ட்டி ரோட்ஸும் அஜய் ஜடேஜாதான்.

கிரிக்கெட் தன் ரத்தத்திலேயே ஊறியிருக்கிறது என அஜய் ஜடேஜாதான் கெத்தாக சொல்ல முடியும். இந்தியாவின் உள்ளூர் போட்டித்தொடர்களான ரஞ்சி டிராபி, துலீப் டிராபியின் பெயர் காரணத்துக்கும் ஜடேஜாவுக்கும் தொடர்பிருக்கிறது. ஜடேஜாவின் தாத்தாவுடைய தம்பிதான் துலீப்சிங்ஜி. இவருடைய பெயரில்தான் துலீப் டிராபி போட்டிகள் நடத்தப்படுகிறது. துலீப்சிங்ஜியின் உறவினர்தான் ரஞ்சித்சிங்ஜி. ரஞ்சிங்ஜியின் பெயரில்தான் ரஞ்சிக் கோப்பை போட்டிகள் நடத்தப்படுகின்றன. அஜய் ஜடேஜாவின் அப்பா தவ்லத்சிங் ஜடேஜா 1971 முதல் 1990 வரை இந்தியாவின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர். இவர்கள் செளராஷ்டிராவின் ராஜகுடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.

அஜய் ஜடேஜா

196 ஒருநாள் போட்டிகளில் விளையாடியிருக்கிறார் அஜய் ஜடேஜா. 5,000-க்கும் மேற்பட்ட ரன்கள் அடித்திருக்கிறார். இதில் 6 சதங்கள், 30 அரை சதங்கள் அடக்கம்.

ஜடேஜாவின் பேட்டிங்கில் இன்னொரு மறக்க முடியாத மேட்ச் ஆஸ்திரேலியாவுக்கு எதிரானது. 1998-ல் கொச்சியில் நடந்த ஒருநாள் போட்டி அது. சித்து 1 ரன், டெண்டுல்கர் 8 ரன் என ஆட்டத்தின் ஆரம்பமே இந்தியாவுக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஆனால், அசாருதினோடு பார்ட்னர்ஷிப் போட்டு இந்தியாவை மீட்டெடுத்தார் ஜடேஜா.

டேமியன் ஃப்ளெம்மிங், காஸ்பரோவிச், ஷேன் வார்னே, மைக்கேல் பெவன், டாம் மூடி, மார்க் வாக், டேமியன் மார்ட்டின் என அத்தனை பெளலர்களைப் பயன்படுத்தியும் ஜடேஜாவின் விக்கெட்டை ஆஸ்திரேலியாவால் எடுக்க முடியவில்லை. 105 ரன்களோடு இந்தியாவின் ஸ்கோரை 300 ரன்களுக்கு மேல் கொண்டுபோனார் ஜடேஜா. ஆனால், இந்தப் போட்டியில் சச்சின் டெண்டுல்கர் ஐந்து விக்கெட்டுகள் எடுக்க, மொத்த வெளிச்சமும் சச்சின் மீது போனது. ஆட்ட நாயகன் விருதும் சச்சின் டெண்டுல்கருக்கே கிடைத்தது.

இந்தியாவின் கேப்டனாகவும் இருந்திருக்கிறார் அஜய் ஜடேஜா. அப்போதைய கேப்டன்கள் சச்சின் டெண்டுல்கர், முகமது அசாருதின் ஆகியோர் விளையாடாதபோது ஜடேஜாதான் கேப்டனாக நியமிக்கப்படுவார். ஜடேஜா தலைமையில் இந்தியா 13 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 8 போட்டிகளில் வெற்றியும் பெற்றிருக்கிறது.

அஜய் ஜடேஜாவின் கரியரில் மிக முக்கியமானப் போட்டித்தொடர் 1999-ல் இந்தியாவில் நடைபெற்ற பெப்ஸி தொடர். இந்தியா, பாகிஸ்தான், இலங்கை அணிகள் இதில் மோதின. காயம் காரணமாக சச்சின் டெண்டுல்கர் இந்தத் தொடரில் விளையாடவில்லை. முகமது அசாருதின் கேப்டனாக இருந்தார். சச்சின் இல்லாததால் கங்குலியுடன் ஜடேஜாதான் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக இறங்கினார். முதல் போட்டியில் இலங்கையுடன் வெற்றிபெறும் இந்திய அணி, அடுத்தப் போட்டியில் பாகிஸ்தானிடம் தோற்கும். இதனால் இலங்கைக்கு எதிரான அடுத்தப்போட்டியில் வெற்றிபெற்றால்தான் இறுதிப்போட்டிக்குத் தகுதிபெற முடியும் என்கிற நிலை உருவாகும். ஆனால், காயம் காரணமாக அசாருதின் இந்தத் தொடரில் இருந்து பாதியிலேயே விலக, கேப்டன்ஷிப் ஜடேஜாவிடம் வரும்.

Ajay Jadeja

இலங்கைக்கு எதிரான இந்தப் போட்டியில் அசாருதினுக்கு பதிலாக அணிக்குள் வந்த சடகோபன் ரமேஷ் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக களமிறங்கினார். ஆனால், 24 ரன்னில் அவர் அவுட். அடுத்து ராகுல் டிராவிட்டும் 17 ரன்களில் அவுட். கங்குலியோடு கொஞ்ச நேரமும், அமய் குரசியாவுடன் கொஞ்ச நேரமும் பார்ட்னர்ஷிப் போட்டு 102 பந்துகளில் 103 ரன்கள் அடித்திருப்பார் ஜடேஜா. இந்தப் போட்டியில் இந்தியா வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்குத் தகுதிபெறும்.

இந்தத் தொடரில் அஜய் ஜடேஜாவின் கேப்டன்ஷிப்புக்கு கீழேதான் வீரேந்திர ஷேவாக் அணிக்குள் வந்தார். அப்போது அவர் லோயர் ஆர்டர் பேட்ஸ்மேன்.

1996 உலகக் கோப்பையில் இருந்து பாகிஸ்தானை வெளியேற்றியதாலே என்னவோ கேப்டன் ஜடேஜாவை ரொம்பவே சோதித்தது பாகிஸ்தான். அடுத்த லீக் போட்டியில் இந்தியாவைத் தோற்கடித்ததோடு, இறுதிப்போட்டியிலும் இந்தியாவுக்கு அவமானகரமானத் தோல்வியைப் பரிசளித்தது பாகிஸ்தான். இந்தத் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான எல்லா போட்டிகளிலுமே இந்தியா தோல்வியடைந்தது.

அஜய் ஜடேஜாவின் கடைசிப் போட்டியும் பாகிஸ்தானுக்கு எதிராகத்தான் நடந்தது. ஆனால், ஜடேஜாவின் இந்தக் கடைசிகட்டப் போட்டிகள் மேட்ச் ஃபிக்ஸிங் சர்ச்சைகளோடே நடந்தது. கங்குலி தலைமையில்தான் 2000-ம் ஆண்டு மே- ஜூனில் நடைபெற்ற அந்த ஆசிய கோப்பைத்தொடரில் ஜடேஜாவும், அசாருதினும் கடைசியாக விளையாடினார்கள். இந்தத் தொடரில் வங்கதேசத்துக்கு எதிராக வெற்றிபெற்ற இந்திய அணி இலங்கையிடம் தோல்வியடைந்தது. இதனால் பாகிஸ்தானுடன் வெற்றிபெற்றேயாக வேண்டும் என்கிற கட்டாயம். டாக்காவில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் 295 ரன்கள் அடிக்கும். முகமது யூசுப் சென்சுரி அடித்திருப்பார்.

சேஸிங்கில் கங்குலி, டெண்டுல்கர், டிராவிட், அசாருதின் என டாப் 4 பேட்ஸ்மேன்களும் அடித்தடுத்து அவுட் ஆகி வெளியேறுவார்கள். எதிர்முனையில் விக்கெட்டுகள் விழுந்துகொண்டேயிருக்க கடைசிவரை கூலான ஒரு இன்னிங்ஸ் ஆடுவார் ஜடேஜா. 103 பந்துகளில் 93 ரன்கள். 8 பவுண்டரி, 4 சிக்ஸர் என பாகிஸ்தானுக்கு மீண்டும் ஒரு திகில் கிளப்பியிருப்பார். கடைசி பேட்ஸ்மேனாக 48வது ஓவரில் அவர் அவுட் ஆகும்வரை இந்தியா வெற்றிபெற்றுவிடும் எனப்பல கோடி ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், கீப்பரிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார் ஜடேஜா.

ஒருநாள் போட்டிகளில் 20 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருக்கிறார் அஜய் ஜடேஜா. இதில் ஒரே ஓவரில் 3 விக்கெட்டுகள் எடுத்து அசரடித்திருக்கிறார்.

சச்சின் டெண்டுல்கர்

இந்த ஆசிய கோப்பைத் தொடருக்கு முன்பாகத்தான் இந்திய கிரிக்கெட்டையே மாற்றி அமைத்த அந்த மேட்ச் பிக்ஸிங் புகார்கள் எழுந்தது. 2000-ம் ஆண்டு பிப்ரவரி – மார்ச்சில் ஹேன்ஸி க்ரோனியே தலைமையில் தென்னாப்பிரிக்க அணி 2 டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாட வந்தது. சச்சின் டெண்டுல்கர்தான் அப்போது இந்தியாவின் கேப்டன். கபில்தேவ் இந்திய அணியின் பயிற்சியாளர். சச்சின் தலைமையில் இந்திய அணித்தொடர்ந்து தோல்விகளை சந்தித்துக்கொண்டிருந்ததால் அவர்மீது பெரும் அழுத்தம் அப்போதிருந்தது.

மும்பையில் நடந்த முதல் டெஸ்ட்டில் இந்திய அணி தோல்வியடைந்தது. சச்சின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகப்போகிறார் என செய்திகள் எழுந்தன. ஆனால், சச்சின் இரண்டாவது டெஸ்ட்டுக்கும் கேப்டனாகத் தொடர்ந்தார். பெங்களூருவில் நடந்த இரண்டாவது டெஸ்ட்டிலும் இந்திய அணி இன்னிங்ஸ் தோல்வியடைந்தது. சச்சின் கேப்டன்ஷிப் பொறுப்பில் இருந்து விலக, ஒருநாள் போட்டிகளுக்கு கங்குலி கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் தென்னாப்பிரிக்காவின் 301 ரன் டார்கெட்டை இந்திய அணி சேஸ் செய்து வெற்றிபெற்றிருக்கும். அந்த வெற்றிக்கு காரணமாக இருந்தவர் அஜய் ஜடேஜா. 109 பந்துகளில் 92 ரன்கள் அடித்திருப்பார் ஜடேஜா. இந்த 5 ஒருநாள் போட்டித்தொடரின் எல்லா போட்டிகளுமே கடைசி ஓவர்கள் வரை சென்று த்ரில்லிங்காக முடிந்த போட்டிகள்தான். இந்தியா நான்காவது போட்டியின் முடிவிலேயே தொடரைக் கைப்பற்றிவிடும். ஆனால், இந்தத் தொடர் முடிந்ததுமே தென்னாப்பிரிக்க வீரர்கள், குறிப்பாக கேப்டன் ஹேன்ஸி க்ரோனியே மேட்ச் ஃபிக்ஸிங்கில் ஈடுபட்டதாக டெல்லி போலீஸ் அறிவித்தது. புக்கிக்களுடன் ஹேன்சி க்ரோனியா நடத்திய பேச்சுவார்த்தைகளை வெளியிட்டது. கிரிக்கெட் உலகம் அதிர்ந்தது.

Also Read: ஜவகல் ஸ்ரீநாத்… கபில்தேவின் மாற்று, ஜாகிர்கானின் மென்டர்… ஆனால்?! அண்டர் ஆர்ம்ஸ் – 6

முதலில் குற்றச்சாட்டுகளை மறுத்த க்ரோனியே பின்னர் பல்வேறு போட்டிகளில் பணம் வாங்கிக்கொண்டு ஃபிக்ஸிங்கில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டார். இதனால் தென்னாப்பிரிக்காவில் அவர் மீது விசாரணை நடத்தப்பட்டது. மூன்று நாள்கள் நடந்த விசாரணையில் பல்வேறு தென்னாப்பிரிக்க வீரர்களும் ஹேன்சி க்ரோனியே தங்களிடம் பணத்துக்காக ஃபிக்ஸிங் செய்யச் சொல்லிக்கேட்டதாகச் சொன்னார்கள். அப்போது க்ரோனியே அசாருதின் மூலமாகத்தான் 1996-ல் ஒரு புக்கி ஒருவர் அறிமுகமானதாகச் சொன்னார். அதன் பிறகுதான் இந்திய வீரர்களுக்கு எதிராக இந்தியாவில் விசாரணை தொடங்கியது. அசாருதின், ஜடேஜா, நயன் மோங்கியா மூவரும் தொடர்ந்து சிபிஐயால் விசாரிக்கப்பட்டார்கள். கபில்தேவ் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து விலகினார். 2000-ம் ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி அசாருதினுக்கு வாழ்நாள் தடையும், அஜய் ஜடேஜாவுக்கு 5 வருட தடையையும் பிசிசிஐ அறிவித்தது.

களத்திலும் சரி, வெளியிலும் சரி முகமது அசாருதினோடு இருந்த நட்பு ஜடேஜாவுக்கு சிக்கலை உண்டாக்கியது. மேட்ச் ஃபிக்ஸிங் புகாரால் 29 வயதிலேயே இந்திய அணியில் இருந்து வெளியேற்றப்பட்டார் ஜடேஜா. 5 வருட தடையை எதிர்த்து வழக்கு தொடர்ந்தார். மீண்டும் ரஞ்சியில் விளையாடினார். ஆனால், அவரால் இறுதிவரை இந்திய அணிக்குள் கம்பேக் கொடுக்க முடியவில்லை.

ஜடேஜாவின் ஆட்டம் பாதியிலேயே முடிந்தது!

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.