இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஜூன் 14 ஆம் தேதி தனது வீட்டில் தற்கொலை செய்துகொண்டார். இளம் நடிகர் ஒருவர் திடீரென தற்கொலை செய்துகொண்டது இந்தியா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் சுஷாந்த் சிங்கின் முன்னாள் காதலியான நடிகை அங்கிதா லோகாண்டே, சுஷாந்த் தற்கொலை விவகாரத்தில் தனது மவுனத்தை கலைத்துள்ளார்.
தொலைக்காட்சி ஒன்றுக்கு அங்கிதா அளித்த பேட்டியில், ‘’சுஷாந்த் தற்கொலை செய்து கொள்ளக்கூடிய இளைஞன் அல்ல. நாங்கள் ஒன்றாக இருந்தபோது பல மோசமான சூழ்நிலைகளைக் எதிர்கொண்டிருக்கிறோம். அவர் ஒரு மகிழ்ச்சியான-அதிர்ஷ்டசாலி நடிகர்’’ என்று அவர் கூறினார்.

அங்கிதா மேலும் கூறுகையில், ‘’ நான் சுஷாந்தை நன்கு அறிந்தவள். அவர் மன அழுத்தத்தை அடையக்கூடிய நபர் அல்ல. சுஷாந்தைப் போன்ற ஒருவரை நான் பார்த்ததில்லை. அவர் தனது சொந்த கனவுகளை எழுதிக்கொண்டிருந்தார். அவருக்கு ஒரு டைரி இருந்தது. அவரிடம் அடுத்த ஐந்தாண்டு கால திட்டம் இருக்கும். அவர் என்ன செய்ய விரும்புகிறார், அவர் எப்படி இருப்பார் என்கிற தனது கனவுகளை அதில் பட்டியலிட்டிருப்பார்.

அவர் வருத்தப்பட்டிருக்கலாம்; கவலையடைந்திருக்கலாம். ஆனால் மன அழுத்தம் என்பது ஒரு பெரிய வார்த்தை. சுஷாந்த் பைபோலார் டிஸ்ஆர்டரால் பாதிக்கப்பட்டிருந்தார் என்கிறார்கள். என்னால் இதை நம்ப முடியவில்லை.
எனக்குத் தெரிந்த சுஷாந்த் ஒரு சிறிய நகரத்திலிருந்து வந்தவர். அவர் சொந்தமாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். அவர் எனக்கு பல விஷயங்களைக் கற்றுக் கொடுத்தார், அவர் எனக்கு நடிப்பைக் கற்றுக் கொடுத்தார். அவர் மன அழுத்தத்தில் இருந்தார் என்று ஆளாளுக்கு தங்களது சொந்த சித்தரிப்பை எழுதுகிறார்கள். இதை படிக்கும் போதெல்லாம் எனக்கு வேதனை அளிக்கிறது.
சுஷாந்த் சிறிய விஷயங்களில் கூட மகிழ்ச்சியைக் காண்பார். அவர் விவசாயம் செய்ய விரும்பினார். மனச்சோர்வடைந்த நடிகராக மக்கள் அவரை நினைவில் வைத்திருப்பதை நான் விரும்பவில்லை. அவர் ஒரு ஹீரோ. அவர் ஒரு உத்வேகம். இதை நான் தொடர்ந்து கூறுவேன்” என்று கூறியுள்ளார் அவர்.