பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!
பள்ளியில் படிக்கும்பொழுது பத்திரிகைகளில் சினிமா நடிகர்களின் பேட்டி வரும். அதில் பெரும்பாலான கேள்விகள் உங்களுக்குப் பிடித்த விஷயங்கள் என்ன என்பது போலதான் இருக்கும். அந்தப் பதில்களில் கண்டிப்பாக இளையராஜாவின் இசை, பொன்னியின் செல்வன், லாங் டிரைவ் இடம்பெற்றிருக்கும்.
குறிப்பாக, நடிகைகள் ஸிட்னி ஷெல்டன், ஜெஃவ்ரி ஆர்ச்சர், ஷேக்ஸ்பியர் என்று அடித்துவிடுவார்கள்.

நமக்கெல்லாம் அப்போது இந்தப் பேரெல்லாம் வாயிலேயே நுழையாது. இப்பதான் பெயரையாவதும் சொல்லத் தெரியுது. ஏன் என்றால் அப்போது இங்கிலீஷ் புக்கில் poem எழுதின வில்லியம் வேர்ட்ஸ் வொர்த் பெயரை தவிர நமக்கு வேற எந்தப் பெயரும் தெரியாது.
அப்புறம் தெரிஞ்ச இன்னோரு இங்கிலீஷ்காரங்க பேரு ஷெல்லி & ப்பைரன் அதுவும் எப்படித் தெரியும்னா ஜீன்ஸ் படத்தில் ஹைரா ஹைராப்பா பாட்டில் வைரமுத்து , “ஷெல்லியின், ப்பைரனின் கல்லறை தூக்கத்தைக் கலைத்திடுவோம்”னு எழுதியிருப்பார். அதனால் ஏதோ பெயரை மட்டும் தெரிஞ்சு வச்சிகிட்டோம்.
இந்தப் பேட்டியெல்லாம் படிக்கும்போது இந்த மூளை இருக்கே மூளை சும்மா இருக்காது. அப்படியே டைம் டிராவல் பண்ணி நாம பெருசான பிறகு, இப்படி யாராவது நம்மள கேள்வி கேட்டா என்ன சொல்லுவோம் என்று யோசிக்கும்… யோசிக்கும்போதுதான் தெரியும் எனக்கு என்ன புடிக்கும் என்று எனக்கே தெரியலை என்று…
அப்போலாம் புளிச்சோறுதான் நமக்கு பிரியாணி அதுலயும் அம்மா பழைய சோத்துல முதல் நாளே புளியைக் கரைத்து ஊற்றி கலந்து வைத்து அப்படியே அடுத்த நாள் தாழித்து தரதுதான் எனக்கு தேவாமிர்தம்.

சரி நமக்கு புடிச்ச சோறு எது என்று கேட்டால் புளிசோறு என்று சொல்லிடலாம் என்று மனசை தேத்திக்கிட்டு, அடுத்து என்ன சொல்லலாம் சரி புத்தகம் என்று யோசித்துப் பார்த்தால், `அட நாம படிக்கிறதே சிறுவர் மலர், வாரமலர் இதெல்லாம் புடிக்கும்னு சொல்லலாமா என்று தெரியலையே என்று யோசித்து சரி நம்ம சிறுவர் மலர்ல படிச்ச பஞ்சதந்திர கதைகள், வாரமலர் இது உங்கள் இடம், மதன் அவர்கள் எழுதிய வந்தார்கள் வென்றார்கள், சுஜாதாவின் கற்றதும் பெற்றதும், வாலியின் அவதார புருஷன், சுவாமி சுகபோதானந்தாவின் மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ்’னு தனித்தனியா சொல்லிக்கலாம்னு மனசுக்குள்ள மனப்பாடம் பண்ணி வச்சுக்கிட்டேன்.
இப்படித்தான் பத்தாங்கிளாஸ் படிக்கும்போது புடிச்ச கலருனு கேட்ட எடத்துல பிங்க்னு எழுதி வச்சதைப் பார்த்து அந்த வருஷ பொறந்த நாளைக்கு கூட படிச்ச ஃபிரெண்ட்ஸ் எல்லாம் சேர்ந்து தலைல குத்தற ஹேர்பின்னு முதற்கொண்டு ரப்பர் பேண்டு, வளையல், கீரிடிங் கார்டுனு எல்லாத்தையும் பிங்கோ பிங்க்னு வாங்கி கொண்டாந்து குவிச்சிட்டாங்க. அதுலிருந்து பிடித்த கலர்னு கேட்டாகூட பேந்த பேந்த முழிக்க வேண்டியதா போயிருச்சு… இதுல என்ன பிரச்னைனா நமக்கு புடிச்சதுனு ஒரு கலர் துணி போடுவோம், அதே பக்கத்து வீட்டு புள்ளை வேற கலர்ல போட்டா அட அந்தக் கலரு நல்லாருக்கேனு அதுக்கப்புறம் அந்தக் கலரு புடிச்ச கலரா மாறிடும்.

இன்னொரு விஷயம் என்னன்னா ஏழைக்கேத்த எள்ளுருண்டை மாதிரி துணி வாங்கப் போனா கையிலிருக்கிற காசுக்கு எந்தக் கலர் துணியெல்லாம் கிடைக்குதோ அதிலிருந்து ஒண்ணுதான் வாங்கித் தருவாங்க… சரின்னு இப்பவாதும் புடிச்ச கலரை தெரிஞ்சுக்கலாம்னு நினைச்சு புள்ளைககிட்ட சொன்னா அம்மா அது எனக்கு புடிச்ச கலரு நீங்க வேற கலரு சொல்லுங்கனு சொல்லுதுக.
இப்போதும் சமூக வலைதளங்களில் உங்களுக்குப் பிடித்த பத்து, பதினைந்து விஷங்கள் சொல்லுங்கனு டிரெண்ட் போஸ்ட் வந்தால் கூட அம்மா, ஆட்டுக்குட்டினு மொக்கை போட்டு வரிசைப்படுத்த வரலை. “பழகப் பழக பாலும் புளிக்குங்கிற” மாதிரி, இன்னைக்கு பிடித்தது நாளைக்குப் பிடிக்காமல் போகுது.
ஒருவேளை உலகத்தை அதிகமா தேடிட்டமோ என்னவோ தெரியலை பிடித்தமான ஐந்து, பத்து விஷயங்கள் என்னனு வரிசைப்படுத்த இன்றுவரை நம்ம அறிவுக்கு எட்டவே மாட்டேங்குது. விடுகதையா இந்த வாழ்க்கைனு இப்பவரை இதேதான் தொடருது…
– ந.கிருஷ்ணவேணி.
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.