கடந்த வெள்ளிக்கிழமையன்று, சென்னை உயர் நீதிமன்றத்தில் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலாயத்தில் விரிவாக்கம் செய்யக் கோரியிருந்த சன் ஃபார்மா திட்டம் குறித்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அதில், சன் ஃபார்மாவின் விரிவாக்கத் திட்டத்துக்கு அனுமதி மறுத்துள்ளதாகத் தமிழக அரசு தெரிவித்தது. அதேநேரம், ஐந்து கிலோமீட்டர் என்று இருக்கின்ற பறவைகள் சரணாலயத்தின் மொத்தப் பரப்பளவை மூன்று கிலோமீட்டராகக் குறைப்பதை மறுக்கவில்லை. பறவைகள் சரணாலயத்தைத் தக்க வைக்கும், பராமரிக்கும் (maintain the sanctuary) நோக்கத்தோடுதான் இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.
நாம் தமிழர் கட்சியுடைய சுற்றுச்சூழல் துறையின் மாநிலச் செயலாளர், வெண்ணிலா தாயுமானவன் பதிவு செய்த இந்த வழக்கை, நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் கிருஷ்ணன் ராமசாமி விசாரித்தனர். இதற்கு முந்தைய வாரம், வேறொரு மனு மீதான விசாரணையின்போதுதான், வனவிலங்கு வாரியத்தின் அனுமதி இல்லாமல் எல்லையைக் குறைக்க முடியாது என்று தமிழக அரசு கூறியிருந்தது. இந்நிலையில் கடந்த வெள்ளியன்று வெண்ணிலா தாயுமானவனுடைய மனு விசாரணைக்கு வந்தபோது, “தன்னுடைய விரிவாக்கத் திட்டத்துக்காக, சன் ஃபார்மா மத்தியில் சுற்றுச்சூழல் அனுமதி வாங்கியுள்ளது. ஆனால், தேசிய வனவிலங்கு வாரியம் அவர்களுக்கு அனுமதியளிக்கவில்லை. ஆகவே, அவர்களுடைய திட்டத்துக்கு தமிழக அரசும் கடந்த மாதமே அனுமதி மறுத்துவிட்டது” என்று அரசு தரப்பில் கூறியுள்ளனர். அதேநேரம், 5 கிலோமீட்டர் எல்லையை, மூன்று கிலோமீட்டராகக் குறைப்பதில் மாற்றமில்லை என்பதையும் குறிப்பிட்டுள்ளனர்.
இங்கு கவனிக்க வேண்டிய மற்றொரு பிரச்னை என்னவென்றால், வேடந்தாங்கல் சரணாலயத்தின் இப்போதைய 5 கிலோமீட்டர் பரப்பளவுக்குள்தான் இந்த சன் ஃபார்மா தொழிற்சாலை அமைந்துள்ளது. கடந்த மே 30-ம் தேதியன்று, அதை விரிவாக்குவதற்காக மாநில அரசாங்கத்திடம் அந்த நிறுவனம் சுற்றுச்சூழல் அனுமதி கோரியிருந்தது. “சன் ஃபார்மா நிறுவனம், தங்களுடைய தொழிற்சாலைக்காக மேற்கொண்டு நிலம் கையகப்படுத்த அனுமதி கேட்கவில்லை. அவர்களுடைய உற்பத்தியைக் கூட்டுவதற்கே கேட்டுள்ளனர். அதன்மூலம், இப்போது வெளியேற்றிக்கொண்டிருக்கும் கழிவுகளைவிட அதிகமாக வெளியேற்றி, மேன்மேலும் அப்பகுதியின் சூழலியலை மாசுபடுத்தப்போகிறார்கள்” என்று பத்திரிகையாளர் சந்திப்பில், சென்னையைச் சேர்ந்த காட்டுயிர் ஆர்வலர் யுவன் குறிப்பிட்டுள்ளார்.

அவரிடம் மேற்கொண்டு பேசியபோது, “வனவிலங்குப் பாதுகாப்புச் சட்டத்தின்படி, சரணாலயங்களுக்குள் தொழிற்சாலைகள் இருக்கக் கூடாது. இருந்தும், வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்துக்குள் சன் ஃபார்மா செயல்படுகின்றது. அவர்கள் மட்டுமல்ல, 3 முதல் 4 கிலோமீட்டர் எல்லைக்குள், மேலும் சில தொழிற்சாலைகளும் வேடந்தாங்கல் சரணாலய எல்லைக்குள் செயல்படுகின்றன. இதில், சன் ஃபார்மா உற்பத்தியை விரிவுபடுத்தக் கேட்டுள்ளது. இப்போது அந்தத் திட்டத்துக்கான முன்மொழிதலைத் தமிழக அரசு நிராகரித்துள்ளது. இருந்தாலும், இனி தமிழக அரசு சரணாலய எல்லையைக் குறைத்தால், இவர்கள் அனைவருமே சட்டபூர்வமாக மாறிவிடுவார்கள். அது ஆபத்தானது. பின்னர், அந்தப் பகுதி முழுக்க வணிகமயம் ஆக்கப்படும், விவசாயம், பறவைகளுடைய வாழிடம் அனைத்துமே அதன்மூலம் பாதிக்கப்படும்” என்று கூறினார்.
இவைபோக, சன் ஃபார்மா உட்பட அங்கு செயல்படும் தொழிற்சாலைகளால் இப்போதே அப்பகுதியின் நீர், நிலம் அனைத்தும் மாசுபடுவதாகச் சூழலியல் ஆர்வலர்களும் அப்பகுதி விவசாயிகளும் குற்றம் சாட்டுகின்றனர். சன் ஃபார்மா ஆலைக்கு அருகிலுள்ள மேற்பரப்பு நீர் மாதிரிகளையும் நிலத்தடி நீர் மற்றும் அங்கிருக்கும் விவசாயத்துக்கான நீர்ப்பாசனக் கிணற்றிலிருந்தும் மாதிரிகளைச் சேகரித்து சென்னை காலநிலை செயற்குழு (Chennai Climate Action Group) ஆய்வு செய்தது. அதில், மருந்து உற்பத்தியில் பயன்படுத்தக்கூடிய நான்கு வகையான வேதிமங்கள் கலந்திருப்பது தெரியவந்தது. சேகரிப்பட்ட மூன்று நீர் மாதிரிகளையும் ஆய்வு செய்தபோது, டைப்ரோமோக்ளோரோமீத்தேன் (Dibromochloromethane), டைக்ளோரோமீத்தேன் (Dichloromethane), டொலுயீன் (Toluene) போன்ற கரிம வேதிமங்கள் கலந்திருந்தது கண்டறியப்பட்டது.

இவை தொழிற்சாலையிலிருந்து கீழ்நோக்கியுள்ள பகுதியில் அமைந்திருக்கும் குளத்திலிருந்து எடுக்கப்பட்ட நீர் மாதிரியிலும், ஆலையிலிருந்து வெளியேறும் மழைநீரை எடுத்துச் செல்லுகின்ற நீரோட்டத்திலும் கண்டறியப்பட்டுள்ளன. சென்னை காலநிலைச் செயற்குழு மற்றும் சமூக சுற்றுச்சூழல் கண்காணிப்புக் குழு ஆகியவை, ஜூலை 10-ம் தேதியன்று, அந்த வட்டாரத்தில் பெய்த கனமழைக்கு அடுத்த ஒரு நாளுக்குள் இந்த நீர் மாதிரிகளைச் சேகரித்தன.
மேற்கொண்டு 25-ம் தேதியன்று, சென்னை காலநிலை செயற்குழு நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில், “சன் ஃபார்மா தொழிற்சாலை பூஜ்ஜிய திரவ வெளியேற்ற வசதியைக் கொண்டது என்று தமிழக மாசுக்கட்டுப்பாடு வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்டது. இந்நிலையில், அங்கு உற்பத்தியில் பயன்படுத்தப்படும் வேதிமங்கள் ஆலைக்கு வெளியேயுள்ள நீர்நிலைகளிலும் கலந்திருப்பது, மாசுக்கட்டுப்பாடு வாரியத்தின் கூற்றோடு முரண்படுகின்றது. இந்தியாவின் மிகப் பழைமையான மற்றும் முதன்முதலாக அதிகாரபூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட பறவைகள் சரணாலயம், வேடந்தாங்கல். அங்குள்ள நீர் வளங்களை, அங்கிருக்கும் தொழிற்சாலைகள் மாசுபடுத்துகின்றன என்று உள்ளூர் கிராமவாசிகள் எழுப்பிய குற்றச்சாட்டுகளை இந்த நீர் மாதிரி பரிசோதனை முடிவுகள் உறுதி செய்கின்றன” என்று குறிப்பிட்டுள்ளது.
அதுகுறித்துப் பேசிய காட்டுயிர் ஆர்வலர் யுவன், “சன் ஃபார்மா உட்பட மேலும் சில தொழிற்சாலைகள் வேடந்தாங்கல் சரணாலயத்துக்குள் அமைந்துள்ளன. அவர்களை அங்கே செயல்பட எந்தச் சட்டமும் அனுமதிக்கவில்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.
சன் ஃபார்மாவிலிருந்து வெளியாகும் கழிவுகளில் இருக்கின்ற மாசுக் காரணிகள் (Pollutants), நிலத்தடி மற்றும் மேற்பரப்பு நீரில் கலந்து, வழிந்தோடி சித்தேரி என்னும் சிறு குளத்தின் வழியாகப் புதுப்பட்டு தாங்கல் மற்றும் ஹனுமந்தைக்குப்பம் ஏரிகளை அடைகின்றன. வேதிமக் கழிவுகள் அங்கிருந்து, மேலும் நீரோடு கலந்து பயணித்து மதுராந்தகம் ஏரியை அடைகின்றன. நீர் மாசுபாட்டினால், கிணறு மற்றும் கால்வாய் மூலமாக நீர் பாய்ச்சி விவசாயம் செய்துகொண்டிருந்த மலைப்பாளையம் கிராமத்தின் விவசாய நிலங்கள் முற்றிலுமாகக் கைவிடப்பட்டுள்ளன.
Also Read: EIA 2020: எதிர்ப்பு ஏன்? – ஒரு விரிவான அலசல்!
சமூக சுற்றுச்சூழல் கண்காணிப்புக் குழுவிலிருந்து பேசிய மருத்துவர் விஷ்வஜா சம்பத், “சன் ஃபார்மா, ஒரு காட்டுயிர் சரணாலயத்துக்குள் இயங்கி வருகின்றது. அது மட்டுமல்லாமல், நச்சுத்தன்மை வாய்ந்த வேதிமப் பொருள்களைச் சரணாலயத்தின் ஈரநிலத்துக்குள்ளேயே வெளியிடுகின்றது. இதற்கெல்லாம் அனுமதி தந்ததன் மூலமாகத் தமிழக மாசுக்கட்டுப்பாடு வாரியமும் மாநில வனத்துறையும், தங்களுக்கு உரிய பணிகளைச் செய்வதில்லை என்னும் உண்மை வெளிப்படுகின்றது” என்று கூறியுள்ளார்.
“15 வருஷத்துக்கு முன்னாடி வரைக்கும், சாயங்காலம் 4 மணி ஆச்சுனா வயல் மொத்தமும் பறவைகளாதான் இருக்கும். பூச்சி, புழு, நண்டு, நத்தைனு புடிச்சி சாப்பிட்டு இருக்கும். பயிருக்கு ஆகாத விஷப்பூச்சிகளை பறவைங்க சாப்பிட்டுவிடும். ஆனா, இப்பெல்லாம் அந்த அளவுக்குப் பறவைங்க வர்றதே இல்ல.

மருந்து நிறுவனத்தோட கழிவு எங்க கிணத்துத் தண்ணியில கலந்து, விஷத்தன்மை அதிகமாயிருச்சு. நான் 25, 26 வயசா இருக்கும்போதெல்லாம் கிணத்துலதான் குளிப்போம். ஆனா, இப்ப அதுல இறங்கக்கூட முடியாது. அவ்ளோ விஷத்தன்மை ஆகிக்கிடக்கு. இந்தத் தண்ணிய நிலத்துல பயன்படுத்துனா, நிலமே பொட்டல் காடாத்தான் ஆகிடுது. வேடந்தாங்கலுக்கு பறவைகள் ஏரிகளுக்காக மட்டும் வர்றதில்ல. இங்க அதச் சுத்தியிருக்குற எங்களோட விவசாய நிலங்கள்ல இருக்குற குளத்து நண்டு, நத்தை, புழு, பூச்சின்னு அதுக்கு எத்தனையோ உணவு இங்க இருக்கு. இப்படி, ஆலைக் கழிவுகள் கலக்குறதால, நிலம் பொட்டலாகி, அதுங்களுக்குத் தேவைப்படுற உணவு இல்லாம போகுது. கம்பெனியில எத்தனையோ தடவ முறையிட்டோம். ஆனா, எந்த மாற்றமும் இல்ல. இப்ப நிலத்த விட்டுட்டு, தினக்கூலியா போய்கிட்டு இருக்கேன்” என்று வேதனையோடு கூறினார் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய மலையப்பாளையத்தைச் சேர்ந்த விவசாயி ரமேஷ்.
இந்நிலையில், தமிழக வனத்துறை மற்றும் மாசுக்கட்டுப்பாடு வாரிய அதிகாரிகளுடைய கடமை விலகல் மீது சட்ட நடவடிக்கை எடுக்கக் கோரியும் தமிழ்நாடு அரசின் முன்மொழிதலான, வேடந்தாங்கல் சரணாலயத்தின் எல்லைக் குறைப்பு திட்டத்தை நிராகரிக்குமாறும் சென்னை காலநிலை செயல் குழு, தேசிய வனவிலங்கு வாரியத்திடம் கோரிக்கை வைத்துள்ளது.
ஈரநிலங்கள்தாம் பறவைகள் சரணாலயத்தினுடைய ஆரோக்கியத்திற்கான அடையாளம். அவற்றை அழிப்பதும் மாசுபடுத்துவதும் பல்லாயிரக்கணக்கான பறவைகளுக்கு விஷம் வைப்பதற்குச் சமம். சென்னையில் நீரை உறிஞ்சும் நுரையீரலாகச் செயல்படக்கூடிய பள்ளிக்கரணை இன்று முழுக்க முழுக்க நஞ்சாகிப் போயுள்ளது. அதனால், ஆயிரக்கணக்கான பறவைகள் தம் வாழ்விடத்தை இழந்தன. அவற்றால் செழித்திருந்த நிலம் அழிந்ததால், அதைச் சார்ந்திருந்த மக்களின் வாழ்வாதாரமும் அழிந்தது. வேடந்தாங்கலையும் அந்த நிலைமைக்குத் தள்ளுவதற்கான அடித்தளமாகத்தான், தமிழக அரசின் இந்த முடிவைப் பார்க்க வேண்டியிருக்கின்றது.

இப்போது தமிழக அரசு சன் ஃபார்மாவுக்கு அனுமதி மறுத்துள்ளதாகக் கூறினாலும்கூட, அவர்கள் செய்யக்கூடிய எல்லைக் குறைப்பு நடவடிக்கை மூலம், அந்த நிறுவனம் மட்டுமன்றி இத்தனை நாள்களாகச் சட்டவிரோதமாகச் செயல்பட்ட அனைத்து நிறுவனங்களுமே சட்டபூர்வமானவையாக மாறிவிடும். இந்த நகர்வு, அவர்கள் கேட்கின்ற சுற்றுச்சூழல் அனுமதியை மாநில அரசு மறுத்ததை அர்த்தமில்லாததாக ஆக்கிவிடும் என்று வேடந்தாங்கல் மக்களும் நாடு முழுவதுமுள்ள காட்டுயிர் ஆய்வாளர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து சன் ஃபார்மா நிறுவனத்தின் தரப்பில் பேசிய போது, “மதுராங்கத்தின் சாத்தமை கிராமத்தில் அமைந்துள்ள சன் ஃபார்மா நிறுவனத்தினுடைய தொழிற்சாலை, பூஜ்ஜிய திரவ வெளியீடு அமைப்போடு கூடிய தரமான கழிவு மேலாண்மை வசதியைக் கொண்டுள்ளது. கரைப்பான்களை மறுசுழற்சி செய்கின்ற வளாகத்தில் அதற்குரிய தொழில்நுட்பங்கள் இருக்கின்றன. எங்கள் தொழிற்சாலை, மாசுக்கட்டுப்பாடு வாரியம் வகுத்துள்ள அனைத்து வரையறைகளையும் கடைபிடிக்கின்றது. தூய்மையான மற்றும் ஆரோக்கியமான சுற்றுச்சூழலை எங்கள் ஆலையின் சுற்றுப்புறத்தில் தொடர்ந்து உறுதி செய்கின்றோம்” என்று கூறினர்.