தேனி அருகே கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட முதியவரை அழைத்து செல்ல நீண்டநேரமாக வாகனம் வராததால் பேருந்து நிறுத்தத்தில் வெகுநேரம் காத்திருந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
தேனி அருகில் உள்ள கொடுவிலார்பட்டியை சேர்ந்த முதியவர் ஒருவருக்கு கண்ணில் அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதற்காக அவர் மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று முன் தினம் அவர் கண் சிகிச்சைக்காக மருத்துவமனைக்குச் சென்ற போது அவருக்கு கொரோனா நோய் தொற்று பரிசோதனை செய்யப்பட்டது. இந்த பரிசோதனையின் முடிவில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியபட்டது.
இதனை அடுத்து அவரை தனிமையில் இருக்க வலியுறுத்தி, தனிமைப்படுத்தப்பட்ட மையத்திற்கு அழைத்துச் செல்ல வாகனம் வரும் என அந்த முதியவருக்கு தகவல் அளிக்கப்பட்டது.
வாகன வருகைக்காக வெகு நேரம் வீட்டில் காத்திருந்த முதியவர், தன்னை அழைத்து செல்ல யாரும் வரமாட்டார்கள் என நினைத்து, பொதுமக்கள் அதிகம் கூடும் பேருந்து நிறுத்தத்தின் அருகே அதிகாலையில் இருந்தே காத்திருந்தார்.
அவருக்கு கொரோனா தொற்று இருப்பதை அறிந்த கிராமமக்கள் அவரை வீட்டிற்கு செல்ல அறிவுறுத்தியுள்ளனர். ஆனால் அதை அவர் கண்டுகொள்ளாமல் அங்கேயே காத்திருந்தார்- இதனை அடுத்து கிராம மக்கள் சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதை அடுத்து, முதியவரை ஆம்புலன்ஸ் வாகனத்தில் தனிமைபடுத்தல் முகாமிற்கு அழைத்துச் சென்றனர்.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதியவர் பேருந்து நிறுத்தத்தில் வாகனத்திற்காக காத்திருந்த சம்பவம் கொடுவிலார்பட்டி கிராம மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.